வித்தியா கொலை வழக்கு! சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இன்று கைது

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

புங்குடுதீவு பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில், முக்கிய பொலிஸ் அதிகாரி இன்று கைது செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட பொறுப்பதிகாரியாக செயற்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க இன்றைய தினம் கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரை விடுவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்படவுள்ளார்.

குற்ற விசாரணை திணைக்கள விசாரணையை அடிப்படையாக கொண்டு சட்டமா அதிபர் திணைக்களம் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டார்.

கொலைச் சம்பவத்தின் முக்கியஸ்தரான சுவிஸ் குமார் என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவியதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப் பிரிவு பேராசிரியர் தமிழ்மாறனின் கோரிக்கைக்கமைய பிரதான சந்தேகநபரை, லலித் ஜயசிங்க விடுவித்ததாக தகவல் வெளியானது.

எனினும் இரண்டு வருடங்களின் பின்னர் யாழ். உயர் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது பேராசிரியர் தமிழ்மாறன் சாட்சி வழங்கியுள்ளார்.

இதன்போது சுவிஸ் குமார் விடுக்கப்பட்டமை தொடர்பில் லலித் ஜயசிங்கவுக்கு தொடர்பு இருப்பதாக சாட்சியம் வழங்கப்பட்டது.

இதனையடுத்து அவசரமாக லலித் ஜயசிங்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வித்தியா படுகொலை வழக்கு : சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கைது