பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினரின் செயற்பாட்டால் மக்கள் அசௌகரியம்

Report Print Theesan in பாதுகாப்பு

வெளிமாவட்டங்களிலிருந்து வவுனியாவிற்கு வரும் பயணிகளை சிவில் உடையிலுள்ள பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா இ.போ.ச பேருந்து நிலையத்தில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சோதனைக்கு உட்படுத்தப்படுபவர்களிடம் இருந்து விபரங்களையும் பெற்றுக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினரின் இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இன்று வட மாகாணத்தில் சிறையிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஹர்த்தாலும், போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் மக்களை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பயணப்பொதிகள் மற்றும் உடற் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், கஞ்சா கடத்தல் நடைபெறும் சந்தேகத்திலேயே கடந்த சில மாதங்களாக வவுனியா இ.போ.ச பேருந்து நிலையத்தில் பெருமளவு சிவில் உடை தரித்த பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.