செய்தி
தமிழ் மக்களின் விடுதலையே எமது இலட்சியம்!- வவுனியாவில் சுரேஷ் க.பிரேமச்சந்திரன்
[ புதன்கிழமை, 22 பெப்ரவரி 2012, 08:34.40 AM GMT ]
நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எமது நோக்கமெல்லாம் தமிழ் மக்கள் விடுதலைபெற்று வாழவேண்டும் என்பதாகவே இருந்தது. எமது மக்களின் விடியல் என்பதுதான் எமக்கு மிகவும் முக்கியம். என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபை மண்டபத்தில் கடந்த 18ஆம்திகதி மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்களும் ஒரேமேடையில் தோன்றி சமகால அரசியல் நிலை மற்றும் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மக்களுடன் விவாதித்தனர்.

அதன்போது ஐந்து கட்சிகளின் தலைவர்களும் உரையாற்றினர். அதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவரது முழுமையான உரை வருமாறு:

மிக மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் இன்று ஐந்து கட்சிகளும் இங்கு கூடியுள்ளோம். இலங்கையிலும் சர்வதேச சமூகத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.

கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக எமக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித பிரயோசனமான தீர்வும் எட்டப்படவிலலை என்பதை நீங்கள் அறிவீரகள். பேச்சுவார்த்தை முடிந்து விட்டதா இல்லையா என்பதுகூடத் தெரியாத அளவிற்கு இன்று நிலைமை இருக்கின்றது,

மறுபுறத்தில் சர்வதேச மட்டத்தில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும். யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு ஒரு நியாயம் கிடைக்க வேண்டும். அவர்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சிந்திக்கக்கூடிய அதற்கு ஆதரவு தெரிவிக்கக்கூடிய சூழல் இன்று தோன்றியுள்ளது.

வருகின்ற 27ஆம் திகதி தொடக்கம் மார்ச் 28ஆம் திகதிவரை ஜெனீவாவில் கூட இருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கை தொடர்பாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

இலங்கையில் நடந்து முடிந்த யுத்தத்தில் இறுதி நாட்களில் பல ஆயிரம பேர் கொல்லப்பட்டார்கள். பல ஆயிரம் பேர் காணாமல போய் உள்ளார்கள். இதுவரை இது தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை. அவர்கள் இருக்கிறார்களா இலலையா என்பது தெரியாது.

சரணடைந்தவர்களுக்கு என்ன கதி என்பது தெரியாது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் சர்வதேச ரீதியான ஒரு விசாரணை தேவை என்பதை நாங்கள் விரும்பினோம். அவ்வாறன விசாரணை நடாத்துவதாக இருந்தால் ஜெனிவாவில் நடக்க இருக்கும் கூட்டத்தில் பங்குகொள்ளும் நாற்பத்தேழு நாடுகளில் இருபத்தி நான்கு நாடுகளின் ஆதரவு எமக்குத் தேவை.

தமிழ் மக்கள் ஒரு நாடு அல்ல நாம் விடுதலைக்காகப் போராடிக்; கொண்டிருக்கக் கூடிய ஒரு இனம். அதாவது அவ்வாளவு தூரம் அவ்வாளவு நாடுகளை உடனடியாக எமக்குச் சதாகமாகக் கொண்டு வருவது எமக்கு கடினமாக இருக்கலாம் ஆனாலும், இலங்கையில் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழ ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் சில விடயங்களைச் செய்யுமாறு அரசாங்கத்தைப் பணிந்துள்ளார்கள்.

உதாரணமாக வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும். காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரிப்பதற்காக ஒரு குழவை நியமித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். இப்படி பல்வேறுபட்ட விதந்துரைகளை இந்த ஆணைக்குழு விதந்துரைத்திருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் தான் நியமித்த கற்றறிந்த பாடங்களுக்கான ஆணைக்குழ எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை nஐனிவாவில் சர்வதேச சமூகம் கொண்டு வர உள்ளது. அதனுடைய அடிப்படைப் பொருள் என்ன வென்றால் சர்வதேச சமூகம் முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் இலங்கைப் பிரச்சனை தொடர்பாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற இருக்கிறது என்பது ஒரு முக்கியமான விடயம்.

அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனூடாக இலங்கை அரசாங்கம் எல்லாவற்றையும் செய்திடுமா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால் இலங்கையின் இனப்பிரச்சனைத் திர்வுக்கு ஐக்கிய நாடுகள சபை தலையிடுவதுனுடைய முதலாவது படியாக நாம் அதனைப் பார்க்கலாம்.

வேறுவிதமாகச் சொல்வதானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை எதிர்பார்த்த போதிலும் ஐ.நாவில் கொண்டுவரப்படவுள்ள இத்தீர்மானமானது எமது முயற்சிக்குக் கிட்டிய ஒரு சிறிய வெற்றியாக நாம் இதனைப் பார்க்கலாம்.

நாம் அமெரிக்கா சென்றோம், ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சென்றோம், கனடா சென்றோம், பிரித்தானியாவிற்குச் சென்றோம். இவை தவிர உலகநாடுகளின் தூதுவர்களைச் சந்தித்தோம். இவை அனைத்திற்கும் மேலாக எமது புலம்பெயர் உறவுகள் பல்வேறுபட்ட நாட்டினருடன் தொடர்ச்சியாகத் தொடர்ச்சியாகத் தொடர்புகொண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இத்தகைய தொடர் நடவடிக்கையின் விளைவாக ஒரு சிறிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களின் விடுதலைக்கு இது ஒரு முதற்படியாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன்.

ஒருகட்டம்வரை ஆயுதப்போராட்டம் நடைபெற்றது. இன்று அது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று சர்வதேச சூழ்நிலைகள் மாறியிருக்கின்றது. ஜனநாயகரீதியான போராட்டங்கள் சர்வதேச மட்டத்தில இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் எமது போராட்டமும் சர்வதேச ஆதரவைப் பெறும் போராட்டமாக முன்னேறத் தொடங்கியுள்ளது.

இதில் மக்களின் பங்களிப்பு மகத்தானது. நீங்கள் அனைவரும் எமக்கு உரிமைகள்தான் முக்கியம் சலுகைகள் அலல என்னும் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தெரிவுசெய்தீர்கள். உங்களின் அந்தப் பலம்தான் எம்மைப் பேசவைத்தது. அந்தப் பலத்திலிருந்துதான் நாம் இவ்வளவுதூரம் முன்னேறியுள்ளோம்.

நாம் இனியும் சோர்ந்துபோய் இருக்க முடியாது. நாம் மிகமோசமானதொரு யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். குடும்பம் குடும்பமாக அழிக்கப்பட்டிருக்கின்றது. இலட்சக்கணக்கான மக்களை இழந்துள்ளோம். இந்த இழப்புக்களுக்கு ஈடாக எமது உரிமைகளை நாங்கள் பெற்றாக வேண்டும். அதனைப்பெறுவதற்கு நாம் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும்.

நாம் உள்ளுராட்சி சபைகளிலோ, மாகாண சபைகளிலோ அல்லது பாராளுமன்றத்திலோ சில ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதை நோக்கமாகக் கொண்டசூழலில் நாங்கள் இல்லை. எமது போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே நாங்கள் ஒன்றிணைவதற்கான ஒரேயொரு நோக்கமாகும். ஒரே தலைமையில் அது முன்னெடுக்கப்பட்டால்தான் எமது போராட்டம் வெற்றியளிக்கும்.

தந்தை செல்வா தலைமையிலான முப்பதாண்டு கால சாத்வீகப் போராட்டம் அடுத்த முப்பதாண்டுக்கும் மேலான ஆயுதப் போராட்டம் என்பனவற்றின் பின்னரும் இன்று நாம் எத்தகைய தீர்வும் இன்றியே இருக்கின்றோம். பலவற்றையும் இழந்த நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.

எமக்கான அரசியல் தீர்வினை எட்டும்வரையில் நாம் மனம்சோர்ந்து போகமுடியாது. அடுத்த தலைமுறை போராடும் சூழல் நிலவக்கூடாது என்று சிவசக்தி ஆனந்தன் கூறினார். அந்தச் சூழ்நிலையை நாங்கள் உருவாக்க வேண்டும். அந்தத் தீர்வைப்பெறுவதற்கு நாங்கள் ஓரணியில் இருக்க வேண்டும்.

எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி முல்லைத்தீவில் கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தல் வருகின்றது. இங்கு பல்வேறு நகரசபை, பிரதேச சபையின் தலைவர்கள், உபதலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளீர்கள். இவர்களுடன் முல்லைத்தீவில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களும் இருப்பீர்கள். நீங்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும்.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள முக்கியமான கூட்ட சூழலில் முல்லைத்தீவில் யுத்தம் கடுமையாக நடைபெற்ற இந்த இடத்தில் உள்ள இரண்டு பிரதேச சபைகளையும் அரசாங்கம் கைப்பற்றிக்கொண்டால் தமிழ் மக்கள் எம்முடன்தான் இருக்கிறாரகள் என்ற ஒரு கருத்தை அவர்கள் தற்காலிகமாக ஜெனீவாவில் சொல்வார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யுத்தம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்று சொல்கின்றனர். ஆனால் மக்கள் மத்தியிலிருந்து அத்தகைய கருத்து எதுவும் எழவில்லையே என்று கூறினர்.

ஆகவே நாம் ஒன்றும் செய்யாமலிருந்தால் மக்களுக்கு எதுவுமே தேவையில்லை என்று சர்வதேச சமூகம் யோசிக்கின்றது. எமது உறவினரகள் எத்தனையோ பேர் இறந்திருப்பார்கள், எத்தனையோ பேர் காணாமல் போயிருப்பார்கள், எத்தனையோ பேர் தடுப்பிலும் சிறையிலும் துன்பப்பட்டுக்கொண்டிருப்பார்கள். ஏராளமான சொத்துக்களை இழந்திருப்பார்கள், இவைகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

நண்பர் செல்வம் அடைக்கலநாதன் பேச்சுவார்த்தை தோற்றுப் போனால் ஜனநாயக வழியில் போராட வேண்டும் என்று கூறினார். நாங்கள் ஒரு தொடர்ச்சியான போராட்டத்தை நடத்துவதினூடாகத்தான் சர்வதேச சமூகம் தமிழ் மக்கள் இன்னமும் மிக மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும். எல்லாம் முடிந்துவிட்டது என்று நாம் சும்மாயிருந்தால் எதுவும் நடக்காது. அதற்காகத்தான் இந்த ஒற்றுமை என்பதை நான் கூற விரும்புகின்றேன்.

நண்பர் சித்தார்த்தன் கூறியதைப்போன்று இருபது வயதில் நான் இயக்கத்தில் சேர்ந்தபொழுது நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. எமது நோக்கமெல்லாம் தமிழ் மக்கள் விடுதலைபெற்று வாழவேண்டும் என்பதாகவே இருந்தது.

கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளாக இப்போராட்டத்தில் இணைந்துள்ள எனக்கு இன்னமும் இதில் இருக்க வேண்டிய தேவையிருக்கின்றது. போராட்டம் இன்னமும் முடியவில்லை.

ஆகவே நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஓரணியாகச் செயற்பட வேண்டும். எமது மக்களின் விடியல் என்பதுதான் எமக்கு மிகவும் முக்கியம். என்று கூறினார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 04-08-2015, 01:34.59 PM ]
மஹிந்த பிரதமர் வேட்பாளர் அல்ல இதனால் அவருடன் தான் விவாதத்தில் ஈடுபட தயாரில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 04-08-2015, 01:10.32 PM ]
கிளிநொச்சி – பூநகரிப் பகுதியில் புதிய பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்று கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 04-08-2015, 01:04.04 PM ]
யாழ்;.தேர்தல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் எந்தவிதமான குழப்பங்களும் ஏற்படாமல் சுமுகமான முறையில் நடைபெற்றுள்ளது என்று தெரிவத்தாட்சி அலுவலகர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 04-08-2015, 12:45.40 PM ]
திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழரான தங்கவேலு மகேஸ்வரனும் அவரது மனைவியும் தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு, நேற்று தற்கொலைக்கு முயன்றிருந்தனர்.
[ Tuesday, 04-08-2015, 12:01.00 PM ]
கொழும்பு நகரத்தை விரைவில் சிக்காக்கோவை போல மாற்றுவதற்கான பொறுப்பினை தாம் எடுத்துக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளது.
[ Tuesday, 04-08-2015 12:51:01 GMT ]
ரஷ்யாவில் அறுவைசிகிச்சையின் போது பெண் ஒருவர் வயிற்றில் தவறுதலாக வைத்து தைக்கப்பட்ட கத்திரிகோல் 3 ஆண்டுகளுக்கு பின்னர் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 04-08-2015 08:16:47 GMT ]
நடிகை ஹேமமாலினி தன்னை கார் விபத்தில் இருந்து காப்பாற்றிய மருத்துவருக்கு விருந்து அளித்து கவுரவித்துள்ளார்.
[ Tuesday, 04-08-2015 10:15:17 GMT ]
டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு இலங்கை சவாலாக இருக்கும் என்று இலங்கையின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரியா கூறியுள்ளார்.
[ Tuesday, 04-08-2015 13:20:30 GMT ]
ஆளி விதையில் ஊட்டச்சத்துடன், மருத்துவ குணங்களும் அதிக அளவில் காணப்படுகின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 03-08-2015 02:22:26 ]
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன. வடக்கு தேர்தல் களத்திலும், பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன.