பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை

நாட்டின் முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தெல்பாலா, ஐஸ் மஞ்சு, வெலே சுதா, ஜொசேகே மல்லி, பிரதீப், நதூன், பய்யா, திகா பைசர் உள்ளிட்ட பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ள 60,000 பேரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதில் 49,000 பேர் திறந்த பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் வன்முறை, போதைப் பொருள் கடத்தல், கொள்ளை, கொலை, சர்வதேச சட்டவிரோத வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளனர்.

இராணுவத்தினரும், விசேட அதிரடிப்படையினரும் பாதாள உலகக் குழுவினரை கைது செய்யும் நடவடிக்கைளுக்கு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க உள்ளனர்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதிக்கு முன்னதாக அனைத்து பாதாள உலகக் குழு உறுப்பினர்களையும் கைது செய்ய முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

தராதரம் பாராது அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் உத்தரவிட்டுள்ளார். பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சிலருக்கு எதிராக 20 முதல் 30 திறந்த பிடிவிராந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சில பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

advertisement