மகேஸ்வரனின் சகோதரரான துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சுத் தாக்குதல்! குடும்ப பிரச்சினையே காரணமாம்!

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரரான துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் யாழ். நல்லூர் ஆலய வளாக பகுதியில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அசிட் வீசப்பட்ட நிலையில் முதுகுப் பகுதியில் காயமடைந்த துவாரகேஸ்வரன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் கொழும்பு 12 டாம் வீதியில் இயங்கும் ஈஸ்வரன் ட்ரேடர்ஸ் வியாபார நிறுவனத்தின் உரிமையாளராவார்.

2ம் இணைப்பு

அசிட் வீச்சுக்கு குடும்ப பிரச்சினையே காரணம்! - பொலிஸார்

காணிப் பிரச்சினை காரணமாகவே அசிட் ஊற்றப்பட்டதாக மகேஸ்வரனின் சகோதரனும் ஈஸ்வரன் ரேடர்ஸ் நிறுவன உரிமையாளருமாகிய துவாரகேஸ்வரன், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் என யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லூர் பகுதியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக பயணித்த ஜீப் வண்டியின் கதவைத் திறக்கும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் முதுகில் அசிட் ஊற்றி விட்டு தப்பியோடியதாகவும், அசிட் ஊற்றியவரை தனக்கு தெரியுமென்றும் அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக யாழ். பொலிஸார் கூறினர்.

இதன்போது, பொலிஸ் நிலையத்தில் துவாரகேஸ்வரனின் சகோதரி மற்றும் தந்தையாரிடம் இவ்விடயம் குறித்து வினவிய போது, குடும்ப பிரச்சினையே இச்சம்பவத்துக்கு காரணம் என கூறினர்.

யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3ம் இணைப்பு

தனது மகனின் பிறந்தநாளையொட்டி, நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் வழிபாடுகளைச் செய்துவிட்டு தனது வாகனத்தில் ஓட்டுனர் இருக்கையில் ஏற முற்பட்டபோது, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களினால் தன்மீது அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், வீசப்பட்ட அசிட் தனது கழுத்து மற்றும் முதுகுபுறத்தில் பட்டு தனக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

தாக்குதல் நடத்தியவர்களை தெளிவாக அடையாளம் கண்டிருப்பதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் இலக்கத்தையும், கண்டறிந்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கினறார்.

தனிப்பட்ட ஒரு பிரச்சினை காரணமாகவே, தம்மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவர் கூறுகின்றார். தமக்கு குறிப்பிட்ட இராணுவத்தினரிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருப்பது தொடர்பில் இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் மூலமாக செய்துள்ள முறைப்பாட்டையடுத்து, விசாரணைகள் நடைபெற்று வரும் வேளையிலேயே தம்மை அச்சுறுத்தி பணிய வைப்பதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக துவாரகேஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

தான் இராணுவத்திற்கும் பொலிசாருக்கும் எதிரானவர் அல்ல என்றும், எனினும் இராணுவத்தில் இருப்பவர்கள் இராணுவத்திற்குக் கெட்டபெயர் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாக இராணுவ தளபதிக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் தான் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கினறார்.

அசிட் தாக்குதலுக்கு உள்ளாகிய துவாரகேஸ்வரன் தற்போது யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரை யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருப்பதுடன் அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அசிட் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் துவாரகேஸ்வரனின் சகோதரனும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தியாகராஜா மகேஸ்வரன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கொழும்பு கொட்டாஞ்சேனை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் உயிரிழந்ததுடன், 6 பேர் படுகாயமடைந்திருந்தார்கள்.

யாழ்ப்பாணத்தில் அக்காலப் பகுதியில் இடம்பெற்று வந்த பல்வேறு அச்சுறுத்தல் நடவடிக்கைகள் குறித்தும், அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்தும், அவர் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் குரல் எழுப்பி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.