செய்தி
புலித்தடம் தேடி...! இலங்கைக்கு சுற்றுலா சென்ற மகா. தமிழ் பிரபாகரன் தனது அனுபவங்களை விளக்குகிறார்!- பாகம் 02
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 06:13.55 AM GMT ]
இலங்கை ஒரு சொர்க்க பூமி. மனித குலம் நிறைந்து வாழ​வேண்டிய அற்புத பூமி. ஆனால், இன்று அப்படி இல்லை. இனவாதம் அந்த சொர்க்க பூமியை சுடுகாடு ஆக்கிவிட்டது!

ஒரு மனிதன், மனிதப் பிறப்புக்குரிய அன்போடும், அறிவோடும், பண்போடும் இலங்கையில் வாழ முடியாது என்று ஒரு பத்திரிகையாளர் எழுதினார்.

இது, தமிழர்களுக்கு மட்டுமான நியதி அல்ல, சிங்களவர்களுக்கும் தான்.

அந்த பூமியில் தீபாவளி அன்று காலை கால் ஊன்றினேன். அரக்கம் மிகுந்த நரகாசுரனை வதம் செய்ததால் தீபாவளியைக் கொண்டாடுகிறோம் என்பது இதிகாசக் கதை. அதே தீபாவளி தினத்தன்று தமிழர் நிலைமையை அறியச் சென்றது முரண் சுவை!

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இறங்கினேன்.

சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளால் இரத்தினக் கற்களுக்கு வரி விலக்கு, அதிகப்படியான பணம் கொண்டு வருபவர்களுக்கு வரி விலக்கு’ என்றெல்லாம் இப்பொழுது இலங்கையில் பல விலக்குகள் வெளிநாட்டினருக்கு உண்டு.

சுற்றுலா’ என்ற மந்திரச் சொல்லை வைத்தே சர்வதேசத்திடம் இருந்து இலங்கை தன்னைக் காத்துக்கொள்கிறது. உள்நாட்டுக் கடவுச்சீட்டுகளின் உடைமைகளுக்குக் கடுமையான சோதனைகள் இருந்தன.

'இந்தியக் கடவுச்சீட்டு’ என்பதாலும் முதல் முறை செல்வதாலும் பெரிய சோதனைகள் இலங்கைக்குள் நுழையும் போது இல்லை.

அங்குள்ள தமிழ் நண்பர் வரவேற்க, வெளியே வந்தேன். புத்தபிரான் வெண்மை நிறத்தில் அமர்ந்து இருந்தார். 'இலங்கையில் புத்தபிரான் வீதிக்கு வீதி அமர்ந்திருப்பார். போருக்குப் பிறகு, தாய்லாந்து கொடுத்த 20,000 புத்தர்கள் இலங்கை முழுதும் உள்ளனர்’ என்றார் நண்பர்.

விமான நிலையத்தில் இருந்து கொழும்பு 34 கிலோ மீட்டர். கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு புத்தகக் கடைக்குச் சென்றேன். அங்கு பணியாற்றும் சிங்களப் பெண்ணிடம், 'மகாவம்சம்’, 'புத்தர் வரலாறு’ புத்தகங்கள் உள்ளதா?’ என்றேன். அவர், 'தருகிறேன்’ என்று சொல்லிவிட்டு பேச்சுவாக்கில் 'நீங்கள் ரெட் க்ரோஸா?’ என்று சந்தேகித்தார். 'எந்த நாடு நீங்கள்?’ என்றும் விசாரித்தார். எல்லோரும் எல்லோரைப் பற்றியும் விசாரிக்கிறார்கள்.

இங்கு யார் யாரெல்லாம் புத்தகம் வாங்கினார்கள் என்பதைக்கூட இராணுவம் வந்து விசாரிக்கும். அதனால்தான் கேட்கிறார்'' என்றார் நண்பர்.

இங்கே எல்லாமே புலிதான். அரசாங்கத்தை எதிர்ப்பவர் தமிழராக இருந்தால் தமிழ்ப் புலி. சிங்களவராக இருந்தால் சிங்களப் புலி என்றுதான் சொல்கிறார்கள்.

இப்படி இலங்கை அரசின் பாசிசக் கோட்பாடுகளை எதிர்த்து அதன் பாதிப்பால் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட பத்திரிகையாளர்கள் பாஷ்னா அபிவர்தனே, பிரட்ரிகா ஜான்ஸ் போன்றோர்தான் சிங்களப் புலிகளுக்கான எடுத்துக்காட்டு. அதனால்தான் யாரைப் பார்த்தாலும் சந்தேகமாகப் பார்க்கிறார்கள்... பயப்படுகிறார்கள்!'' என்றார் நண்பர்.

இலங்கைக்கு இந்தியா நட்பு நாடுதானே. அதனால் இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு மரியாதை அதிகம் இருக்கும் அல்லவா?'' என்று நண்பரைக் கேட்டேன்.

இலங்கையை இந்தியா வேண்டுமானால் நட்பு நாடு என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், நடைமுறை நடவடிக்கைகள் அப்படி இல்லை. ஒரே ஒர் உதாரணம் சொல்கிறேன். ஏற்றுமதி செய்யும் இந்திய மகிழுந்து (கார்) நிறுவனங்களுக்கு ஓர் முட்டுக்கட்டையை இலங்கை அரசாங்கம் போடப்போகிறது.

இப்போது, இலங்கையில் சாதாரண டாடா நானோ காரின் விலை 16 லட்சம். (இலங்கை ரூபாய்க்கு) அடேங்கப்பா என எச்சில் விழுங்காதீர்கள். இலங்கையில் மகிழுந்துக்கான வரி 200 சதவிகிதம். இந்திய நிறுவனங்களுக்கு வரியை மேலும் உயர்த்தப் போகிறார்கள்.

ஆனால், ஜப்பான் நிறுவனங்களுக்குக் குறைக்கப் போகிறார்கள். இலங்கை அரசு தன் பங்காக தங்கள் நாட்டிலேயே ஒரு மகிழுந்து நிறுவனத்தையும் கொண்டு வந்துள்ளது.

இதனால், இந்தியாவின் மகிழுந்து நிறுவனங்களுக்கும் அரசுக்கும் பொருளாதார வழியில் பெரும் அடிவிழப் போகிறது. நட்புநாடு இப்படித்தான் நடந்துகொள்ளப் போகிறது என்றார்.

கொழும்பு புறக்கோட்டை வீதியில் நடந்து​கொண்டே, சில புகைப்படங்கள் எடுத்தேன். ஒரு பேருந்தைக் கடக்கும்போது பேருந்துக் கண்​காணிப்​​பாளர் ஒருவர் தமிழில், ''நில்லுங்க'' என்றார். நான் விழித்தேன். இது நகரப் பகுதி. இப்படி எல்லாம் படம் பிடிக்கக் கூடாது. வெளி​நாட்டி​னரும் பத்திரிகையாளர்களும் மட்டும்​தான் மக்கள் அதிகமுள்ள இடத்தில் படம் எடுக்க அனுமதிக்கப்படுவர்  என்றார்.

மாலையில் கொழும்புக் கடற்கரைக்குச் சென்றேன். வழியில்தான் இலங்கையின் பழைய நாடாளுமன்றமும் மகிந்த ராஜபக்‌சவின் அலரி மாளிகையும் இருக்கின்றன.

சாலை ஓரங்களில் மணல் மூட்டைகள் மெகா உயரத்துக்கு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. சுனாமி முன்னெச்சரிக்கைக் கட்டமைப்பாக இருக்கும் என்று முதலில் நினைத்தேன். பின்னர்தான் தெரிந்தது அது கார் பந்தயத்துக்கான ஏற்பாடாம்.

சிறந்த சர்வதேச இளைஞன் என்று 2012-ம் ஆண்டு இந்திய அரசின் விருதைப் பெற்ற நாமல் ராஜபக்‌ச தான் (மகிந்தாவின் மகன்) இந்த விளையாட்டுகளை இலங்கையில் அறிமுகப்படுத்திப் பங்கேற்கிறார். இந்த இரவு நேர கார் பந்தய ஏற்பாட்டால் கொழும்பு சாலைகள் எல்லாம் மணல் மூட்டைகளால் நிரம்பிக் கிடந்தன.

உயர் பாதுகாப்புப் பகுதியான காலிச் சாலையில் (Galle Road) பயணிக்கிறேன். பழைய இலங்கை நாடாளுமன்றத்துக்கு மிக அருகிலேயே 'ஷரிங்லா’ என்ற ஹாங்காங் நட்சத்திர சொகுசு விடுதியின் கட்டுமானப் பணி நடந்துகொண்டு இருந்தது. 2015-ம் ஆண்டு திறக்கப் போகும் அந்த சொகுசு விடுதி இலங்கைக்கு வந்த கதை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்கள்.

பொதுவாகச் சொன்னால் இலங்கை குறிப்பாக கொழும்பு நகரம், இப்போது மெல்லமெல்ல சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்கிறது. தொழில் முதலீடுகள் என்ற பெயரால் இந்தியாவின் பகை நாடான சீனா, முழுமையாக தனது ஆக்டோபஸ் கரங்களை இலங்கையில் ஊன்றி விட்டன.

இந்த விடுதி கட்டப்பட்டுவரும் மொத்த இடம் 10 ஏக்கர். இதை, இலங்கை அரசிடம் இருந்து 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் வாங்கினார்கள். இலங்கை அரசின் கணக்குப்படி 408 மில்லியன் டொலர்களை சொகுசு விடுதி கட்டுமானத்துக்கு முதலீடு செய்துள்ளது, ஷரிங்லா என்ற சீன நிறுவனம்.

அதேபோல் அம்பாந்தோட்டையில் 115 ஏக்கரில் ஒரு விடுதியைத் திறக்க இருக்கிறார்கள். அதற்கு 120 மில்லியன் டொலர்களை ஒதுக்கி உள்ளது. இந்த நன்றிக்கடன் எல்லாம் போதாது என்று கொழும்பின் பெரும் கடல் பகுதியையே சீன அரசுக்கு விற்றுவிட்டது மகிந்த அரசு.

சீனாவின் அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் சீனர்கள்தான் தொழிலாளர்கள். இலங்கை ஆட்களை வேலைக்கு வைப்பது இல்லை. விரைவில் குட்டிச் சீனாவாக இலங்கை உருவெடுக்கும். அதற்கான அடித்தளத்தை சீனா அமைத்து விட்டது என்கிறார்கள்.

கொழும்பு கடற்கரையில் என்னைச் சந்தித்த இலங்கைப் பத்திரிகையாளர் ஒருவர் இதுகுறித்து சில விரிவான தகவல்களைத் தந்தார். ''புலிகளுடனான யுத்தம் 2009-ம் ஆண்டு முடிந்து விட்டது. தமிழர்கள் தங்களது உரிமைகளை இழந்து அனாதை ஆக்கப்பட்டது குறித்து இலங்கை அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை.

ஆனால், இலங்கையில் அடுத்த சில ஆண்டுகளுக்குள் ஒரு பெரும் யுத்தம் நடக்க இருக்கிறது. அது பொருளாதார யுத்தம். அதில் மனித இழப்புகள் இருக்காது. ஆனால், இலங்கையே சிங்களவர்கள் கையில் இருந்து கைநழுவப் போவதைத் தவிர்க்கவோ, தடுக்கவோ முடியாது.

ஒரு பக்கம் சீனாவும் இன்னொரு பக்கம் அமெரிக்காவும் நின்று இலங்கையைக் கபளீகரம் செய்யப் பார்க்கின்றன. சமீபத்தில் சீனா - இலங்கைக்கு இடையே 16 ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

ஏற்கெனவே, அம்பாந்தோட்டை விமான நிலையம், துறைமுகம், நுரைசோலையில் அனல் மின் நிலையம், கொழும்பு துறைமுகம் விரிவாக்கம், ரயில் பாதை புனரமைப்பு வேலைகளை சீனா செய்துவருகிறது.

இதை சீனாவிடம் கொடுக்க வேண்டாம். நாங்கள் செய்துதருகிறோம்’ என்று இந்தியா முன்வந்தது. அப்போது, இந்தியாவுக்கும் சில திட்டப் பணிகளை ஒதுக்கினர். சம்பூர், காங்கேசன்துறை, பலாலி, வட பகுதிப் புனரமைப்பு ஏற்பாடுகளை இந்தியா செய்து கொடுத்தது. சீனாவைக் காட்டி இந்தியாவிடமும், இந்தியாவைக் காட்டி சீனாவிடமும் அபிவிருத்திப் பணிகளுக்கான பணத்​தைச் சுரண்டிவருகிறது இலங்கை.

இந்தநிலையில், எப்படியாவது உள்ளே நுழைந்து விட அமெரிக்காவும் துடிக்கிறது.

இலங்கையில் எண்ணெய் வளம் உள்ளதா?’ என்பதை ஆராய்ச்சி செய்ய அமெரிக்கா விரைவில் வர இருக்கிறது. அவர்கள் வந்தால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் நேரடி மோதல் நடக்கும். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா சில முயற்சிகளை எடுப்பதே இலங்கையை அச்சுறுத்துவதற்காகத்தான்.

புலிகள் அமைப்பை அழித்து விட்டதாக இலங்கை அரசு வெற்றிச் சின்னங்களை அமைத்தாலும் அடுத்து எதிர்கொள்ளப் போகும் பேராபத்துகளை இலங்கை அரசாங்கம் உணர்ந்ததுபோல் தெரியவில்லை.

இந்தப் பன்னாட்டுத் திட்டங்களுக்காக அரசுக்கு நெருக்கமான முக்கிய குடும்பத்துக்கு தரப்பட்டுள்ள கையூட்டு மட்டும் பல ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்பதால், ஆபத்தை உணராமலேயே தலையாட்டியபடி தாரை வார்க்கிறார்கள்'' என்கிறார். இதைக் கேள்வி கேட்பவர்கள் அனைவரும் இலங்கை அரசாங்கத்தின் எதிரிகளாகப் பார்க்கப்படுகிறார்கள். அதில் தமிழர், சிங்களவர் என்ற வித்தியாசம் இல்லை.

மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார, 'முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம், ராஜபக்‌சவின் காலத்திலும் கட்ட​விழ்க்கப்பட்டு உள்ளது. தங்களுக்கு அழுத்தத்தைக் கொடுப்பவர்களுக்கு எதிராக அரசு தன் பயங்கர​வாதத்தைக் கட்டவிழ்க்கிறது. இதனால் வடக்கில் தமிழ் இளைஞர்கள், நீதித்துறை பிரமுகர்கள் அடக்குமுறைக்கு ஆளாகின்றனர். பிரேமதாச தன் காலத்தில் நடந்த அரசப் பயங்கரவாதத்தின் வன்முறைகள் பற்றி ஊடகங்களிடம், 'தனக்கு எதுவும் தெரியாது’ என்றே திரும்பத் திரும்பச் சொல்வார். அதேபோல் இப்போதுள்ள அரச பயங்கரவாதம் பற்றியும் ராஜபக்‌ச 'எதுவும் தெரியாது’ என்று சொல்லப் போகிறாரா?'' என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார்.

இதுதான் இன்றைய கொழும்புவின் அரசியல் யதார்த்தம்.

அனைத்தும் அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்டது. அரசாங்கம் ராஜபக்சவுக்குக் கட்டுப்பட்டது என்பதுதான் இன்று இலங்கையில் அமுலில் இருக்கும் ஒரே கொள்கை.

இதற்குக் கட்டுப்படாததாக நீதித்துறை இருப்பதால், அந்த நீதித் துறையையும் வளைக்கும் காரியங்கள் தொடங்கி விட்டன. நீதித் துறையை நாடாளுமன்றத்தின் கீழ் கொண்டுவர மகிந்த அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அப்படி மாறினால் நீதிவான்கள் அரசியல்வாதிகளின் கட்டுப்பாடுகளுக்கு இணங்க வேண்டும் என்ற நிலைமைக்கு இலங்கை நீதித்துறை சென்றுவிடும்.

நீதித்துறையில் அரசின் தலையீட்டை விமர்சித்துள்ள ஜே.வி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, ''நாட்டு மக்கள், மகிந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்தை வழங்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கித்தான் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுள்ளது மகிந்த அரசு. மக்களால் வழங்கப்படாத பெரும்பான்மை பலத்தை, அரசாங்கம் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. நீதித் துறையை அரசு தனது அத்துமீறலுக்குப் பயன்படுத்தினால், சர்வதேச சமுதாயம் பார்த்துக்கொண்டு சும்மா இராது'' என்று சீறியுள்ளதுதான், சிங்களவர்கள்கூட எத்தகைய சினத்தில் உள்ளனர் என்பதற்கு உதாரணம்.

மறுநாள் காலை, யாழ்ப்பாண பேருந்தில் என் பயணம் தொடங்கியது. நடுநிசி நெருங்கிக் கொண்டு இருக்க, இரத்தச் சிவப்புத் துண்டுடன், 'நீடுழி வாழ்க’ என ராஜபக்ச யாழ்ப்பாணத்துக்குள் வரவேற்றார்.

ஊடறுத்துப் பாயும்...

ஜூனியர் விகடன்

புலித்தடம் தேடி........! பாகம் 01

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 21-10-2014, 08:30.39 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான சுவரொட்டி தொகையை எடுத்துச் சென்ற துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான வாகனம் ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
[ Tuesday, 21-10-2014, 07:37.56 AM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தற்போதைக்கு தேர்தல் நடத்த முடியாது முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 21-10-2014, 07:32.46 AM ]
2016 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி கிளின்ரன் வெற்றி பெறுவதற்காக வாய்ப்புக்கள் அதிகம். அப்படி அவர் வெற்றி பெற்றால் அவரது ஈழத்தமிழர் குறித்த பார்வை மாறுபட்டதாக இருக்கும்.
[ Tuesday, 21-10-2014, 07:25.39 AM ]
தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
[ Tuesday, 21-10-2014, 07:25.02 AM ]
துறைமுக பாதுகாப்பு கல்லூரியை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
[ Tuesday, 21-10-2014 06:05:20 GMT ]
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் உயிர்கொல்லி எபோலா வைரஸ் நோய் இல்லை என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
[ Tuesday, 21-10-2014 06:20:40 GMT ]
ஜெயலலிதா ஜாமீனில் வெளிவந்த உடன், எப்போதும் பரபரப்பாக இருந்த பரப்பன அக்ரஹாரா சிறை தற்போது வெறிச்சோடி காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Tuesday, 21-10-2014 06:38:22 GMT ]
கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, இலங்கை உலகக்கிண்ணம் வெல்ல ஊக்கப்படுத்தியது என்று அந்த அணியின் முன்னாள் அணித்தலைவர் ரனதுங்கா கூறியுள்ளார்.
[ Tuesday, 21-10-2014 04:38:18 GMT ]
வயதிற்கு ஏற்ற உயரம் இல்லாதவர்களின் மனதில் எப்பொழுதும் தாம் உயரம் குறைந்தவர்கள் என்ற குறை இருந்து கொண்டேயிருக்கும்.
[ Tuesday, 21-10-2014 01:33:12 GMT ]
கத்தி பிரச்சனையில் மிகவும் மன வருத்தத்தில் உள்ளார் விஜய்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 20-10-2014 05:36:25 ]
ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தனது தேர்தல் பிர­சா­ரத்தை வடக்­கி­லி­ருந்து ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.