அரிச்சந்திரன் பொய்யுரைக்காதவரா? : உண்மையும் பொய்யும்!

Report Print Mawali Analan in சிறப்பு

மனித வாழ்வு என்பது சற்று வித்தியாசமானது அதே சமயம் குழப்பமானதும் கூட. இதில் மனித மனமானது மிகப்பெரிய விந்தையான விடயம், அது பொய்களோடு வருவது.

பொய்யோடு தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் பயணித்துக் கொண்டிருக்கின்றது. மனிதன் பிறந்தது முதல் பொய்களுடனேயே பயணிக்கின்றான் என்பது ஆய்வாளர்களின் கூற்று.

“அரிச்சந்திரன் என்று ஓர் சக்கரவர்த்தி இருந்தார், அவர் பொய்யே பேசமாட்டார்” என்பது புராணம். அதே போல் கடவுள்களும் பொய்யுரைத்ததாகவும் கூட பல புராணங்கள் உண்டு.

உண்மையில் அரிச்சந்திரன் பொய்யே பேசாதவரா? சற்று சிக்கலான விடயம் தான் அவரோடு வாழ்ந்தவருக்கு தான் தெரியும். உண்மையில் இந்த சிக்கலை முதலில் தோற்று வித்தவர் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர்.

“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்”

பிறர்க்கு குற்றம் நீங்கிய நன்மையினது தருமானால் பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் இடத்தில் வைத்துக் கருதப்படும். என்கிறது இக்குறளின் பொருள்.

நன்று அப்படியாயின் அரிச்சந்திரன் எப்படி வாழ்ந்திருப்பார்? பொய் பேசாது வாழ்ந்திருப்பாரா? அல்லது வாய்மைக்காக வாழ்ந்திருப்பாரா? விடை தெரியவில்லை. இந்த விடயம் பற்றி ஆராயத் தேவையுமில்லை.

பொய் பற்றி அறிவியல் ரீதியாக பார்க்கும் போது, ஒவ்வொரு மனிதனும் தான் உரையாடும் போது பல பொய்களைச் சொல்வார்கள்.

என்றாலும் தெரியாதவர் ஒருவருடன் உரையாடும் போது 10 நிமிட பேச்சு வார்த்தையில் 3 பொய்களை சராசரியாக பேசுவார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.

இதற்கு விளக்கம் என்ன? ஏன் மனிதன் பொய் பேசுகின்றான்? அதாவது மனிதன் என்பவன் ஒரு சமூகத்தில் வாழ்ந்து சக மனிதர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் ஒரு விலங்கு.

இவ்வாறான மனிதன் தான் வாழும் சூழலில் அமைதியான, பிரச்சினையற்ற வாழ்வை தொடர்ந்து செல்வதற்காக பொய்களை பேசுகின்றான்.

அதே சமயம் தன்னை மற்றவர்களிடம் இருந்து உயர்த்திக் காட்டிக் கொள்ளவும் அல்லது உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் ஏதோ ஒரு வகையில் பொய்களை பேசுகின்றான். கட்டாயமாக பொய்கள் இல்லாமல் வாழ்கின்றவர்கள் இல்லை என்று கூறியுள்ளனர்.

இந்தப் பொய் வாழ்க்கை சிறு வயதில் இருந்தே ஆரம்பமாகின்றது. ஆம் ஓர் மனிதன் தனது சிறு வயதில் இருந்தே பொய் பேசவும் பேசும் பொய்களைக் கண்டு பிடிக்கவும் பழகிக் கொள்கின்றான்.

ஆராய்ச்சியாளர்களின் தகவல் படி ஓரு குழந்தை பிறந்த 6ஆவது மாதம் முதலே பொய் பேச, நடிக்க கற்றுக்கொண்டு விடுகின்றது.

தன் தாயின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தன்னை மற்றவர்கள் அவதானிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் அழத் தொடங்கும். அப்போது அனைவரின் கண்களும் திரும்ப அழுகையை நிறுத்தும்.

அப்படி ஆரம்பமான பொய் அடுத்து பாடசாலை செல்லும்போது அதிகரிக்கின்றது. அதன் படி பள்ளி செல்லும் வயதில் ஒவ்வோர் வசனத்திலும் 5 பொய்களை பேசப்படுகின்றது. என்பதையும் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

ஆக பொய்யுரைப்பவர்கள் இல்லாமல் இல்லை. உண்மையான கூற்று யாதெனின் அனைவரும் பொய்யர்களே. அது திருவள்ளுவரின் கூற்றுபடி வாய்மையாக அல்லது பிறருக்கு தீங்கு இல்லாமல் மாறும் போது பொய்க்கான தகுதியை இழக்கின்றது.

நடைமுறை வாழ்வில் பொய்யற்ற மனிதர்களை தேடிப்பிடிப்பது பிரம்மபிரயத்தனம். அது மட்டுமல்ல இப்போதைய உலகில் சாத்தியமற்றது என்றே கூறவேண்டும்.

“தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்”

அரிச்சந்திர புராணம் ஆகட்டும், இதிகாசங்கள் ஆகட்டும் சொல்ல வருவது பிறருக்கு தீங்கு இன்றி வாழ வேண்டும் என்பதையே.

இதனை இப்போதைய மனிதர்கள் கடைப்பிடிக்கும் போது துயர் என்பதும் கூட பொய்யாகிப் போய் விடும் என்று கூறுவதும் முற்றிலும் மெய்யாகிப் போகும்.

அதன் படி முடிந்தவரை அடுத்தவருக்கு தீங்கு இழைக்காமல், உதவிகள் மற்றும் நன்றிகளுடன் இருக்கும் வாழ்வை வாழ்ந்து மரணிப்பதே மனித வாழ்விக்கு உண்மையான அர்த்தம்.

Comments