புதிதாக கண்டுபிடிக்கப்படும் கிரகத்துக்கு இந்திய இளம் பெண்ணின் பெயர்!

Report Print Shalini in சிறப்பு

விண்வெளியில் புதிதாக கண்டுபிடிக்கப்படும் கிரகத்துக்கு இந்திய இளம் பெண் ஒருவரின் பெயர் சூட்டப்படும் என்று லிங்கன் அறிவியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 16 வயதுடைய சாஹிதி பிங்காலி என்ற மாணவியின் பெயரே புதிய கிரகத்துக்கு சூட்டப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர் நிலைகள் மாசுபடுவது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட இவர், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளை பெற்றுள்ளார்.

அண்மையில் அமெரிக்காவின் மாசசூசட்ஸ் லிங்கன் ஆய்வகம் நடத்திய சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்பு போட்டியில் சாஹிதி பங்கேற்றிருந்தார்.

இந்த போட்டியில் பெங்களூரில் உள்ள ஏரிகளில் மாசு ஏற்படுவது குறித்தும், அவற்றை தூய்மையாக பாதுகாப்பது குறித்தும் சாஹிதி ஆய்வு செய்து, அந்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

மேலும் ஏரி, ஆறு, குளங்களில் உள்ள நீரின் தூய்மை தரத்தை மொபைல் செயலி மூலமாக கண்காணிக்க முடியும் என தனது ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சாஹிதி சமர்ப்பித்த ஆய்வு அறிக்கை முதல் மூன்று இடங்களுக்குள் தெரிவு செய்யப்பட்டது.

மேலும் பெங்களூரில் மாசடைந்த ஏரியை தூய்மைப்படுத்துவது தொடர்பாக அவரது ஆய்வு இருந்தது. இந்த ஆய்வை ஏற்றுக் கொண்ட மாசசூசட்ஸ் லிங்கன் ஆய்வகம், சாஹிதியின் கண்டுபிடிப்பை கௌரவிக்கும் விதமாக விண்வெளியில் கண்டுபிடிக்கப்படும் கிரகத்துக்கு சாஹிதியின் பெயர் வைக்கப்படும் என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.