வெள்ளவத்தை வீதியில் திரண்ட 2000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள்

Report Print Akkash in சிறப்பு

கொழும்பு - வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயம் இந்த வருடத்தின் விஜயதசமியுடன் 85ஆம் ஆண்டு பூர்த்தி விழாவினைக் காணவுள்ளது.

இதனை கொண்டாடும் முகமாக இன்று காலை பழைய மாணவிகள் சங்க ஏற்பாட்டில் நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை ஏழு மணியளவில் பாடசாலை கொடி மற்றும் தேசிய கொடி என்பன ஏற்றி பறக்கவிடப்பட்டு பாடசாலை கீதம் பாடப்பட்டது.

இதன்போது, பாடசாலையின் மூத்த பழைய மாணவிகள் பலரும் கலந்து பாடசாலை தொடர்பான கருத்துக்களை தற்போது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகளுடன் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலரும் இன்று காலை பாடசாலையிலிருந்து நடைபவனி புறப்பட்டதுடன், காலி வீதி வெள்ளவத்தை முதல் பம்பலபிட்டி வரை அமைச்சர் மனோகணேசனும் அவர்களுடன் நடைபவனியில் இணைந்து கொண்டிருந்தார்.

இந்த ஊர்வலத்தில் பாடசாலையின் அதிபர் சாந்தினி வேலுப்பிள்ளை, மேல் மாகாணசபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட 2000இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த நடைபவனியில் கலந்து கொண்ட பாடசாலையின் தற்போதைய மாணவர்கள், பழைய மாணவர்கள் அனைவரும் ஒரே நிறத்திலான ஆடைகளை அணிந்திருந்தமை சிறப்பான அம்சமாகும்.

நடைபவனியில் பாடசாலையின் பான்ட் வாத்திய குழு முன்னிலை வகிக்க அதைத் தொடர்ந்து, பதாதைகளை ஏந்திய மாணவ குழு வரிசையாக செல்ல ஏனைய மாணவர்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் அனைவரும் அவர்களை தொடர்ந்து சென்றனர்.

இதன்போது அழகிய வண்ண சித்திரங்கள், பலூன்கள் பதாதைகளை தாங்கிய அலங்கரிக்கப்பட்ட வாகனங்களும் பங்கேற்றிருந்தன. குறித்த நடைபவனியானது இன்று பிற்பகல் அளவில் மீண்டும் பாடசாலைக்கு அடைந்து நிறைவுபெறவுள்ளது.

1932ஆம் ஆண்டு ஏழு மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பாடசாலையானது தற்போது தனியார் பாடசாலையாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்க விடயமாகும்.