பேருந்தில் ஏற்பட்ட நல்லிணக்கம்! சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்

Report Print Murali Murali in சிறப்பு

சமகால கொழும்பு அரசியலில் பரவலாக பேசப்பட்டு வரும் ஒரு விடயமான நல்லிணக்கம் காணப்படுகின்ற நிலையில், அதற்கு எதிரான சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக இனங்களுக்கு இடையிலான மோதல், வழிபாட்டு தளங்கள் மீதான தாக்குதல், இனவாதத்தை தூண்டும் வகையிலான கருத்து மோதல்கள் சமகாலத்தில் அதிரித்துள்ளன.

இந்த மோதல் சில அரசியல்வாதிகள் மத்தியிலும், மதத்தலைவர்கள் மத்தியிலும் அண்மைய காலங்களில் காணமுடிகின்றது. இந்நிலையிலேயே, நல்லிணக்கம் தொடர்பில் கொழும்பு அரசியலில் பரவலாக பேசப்படுகின்றது.

நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அதனை சிதைக்கும் வகையிலான நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில், பேருந்தில் ஏற்பட்டிருந்த நல்லிணக்கம் தொடர்பிலான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

பொதுவாக இலங்கையில் பேருந்தில் மதகுருமார்களுக்கு என தனியான ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கும். மதகுரு ஒருவர் அந்த ஆசனத்தில் அமர்ந்து பயணம் செய்யும் போது, அவருக்கு அருகில் வேறு எவரும் அமர்ந்து பயணம் செய்வது மிக குறைவே.

எனினும், இந்த புகைப்படத்தில் பௌத்த தேரர் ஒருவர் அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்து பயணம் செய்யும் அதேவேளை, அவருக்கு அருகில் இஸ்லாமிய பெண் ஒருவரும் அமர்ந்து செல்கின்றார்.

அத்துடன், குறித்த இருவருக்கும் முன்பாக இந்துக்களின் வழிபாட்டு தெய்வமான லக்ஸ்மியின் படம் ஒன்றும் இருக்கின்றது. எனினும், எந்த பேருந்தில் எடுக்கப்பட்டது என்பது தொடர்பிலான தகவல்கள் வெளியாகவில்லை.

நாட்டில் இனங்களுக்கு இடையில் குரோதத்தை வளர்க்கும் வகையில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இந்த விடயத்தினை ஒரு படிப்பினையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.