இலங்கையில் தாயை தேடும் பிரித்தானியாவின் பிரபல பெண்

Report Print Vethu Vethu in சிறப்பு

பிரித்தானியாவை சேர்ந்த பிரபல பெண்ணொருவர் இலங்கையிலுள்ள தனது தாயை தேடி வருவதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நிரோஷிகா எசேசன் என்ற பெண்ணே தனது தாயை தேடி வருகிறார்.

1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி இலங்கையில் பிறந்த அவருக்கு வீர முதியன்சலாகே நிரோஷிகா என பெயரிடப்பட்டது.

அவர் குழந்தையாக இருக்கும் போது அயர்லாந்து தம்பதி ஒன்றுக்கு தத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

நிரோஷிகாவின் பிறப்பு சான்றிதழில் தந்தையின் பெயர் தெரியாதென குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தாயாரின் பெயர் டிங்கிரி என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்தப் பெயர் உண்மையானதா என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தாயின் பிறப்பிடமாக மாத்தளை, நாவுல பிரதேசம் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்டி வைத்தியசாலையில் நிரோஷிகா பிறந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தாயாரின் விலாசம் ஒன்று பதிவிடப்பட்டுள்ள போதிலும், அது போலியான விலாசம் என குறிப்பிடப்படுகின்றது. இதனால் தன்னை பெற்ற தாயை கண்டுபிடிப்பதென்பது அவருக்கு சிரமமாக உள்ளது.

நிரோஷிகா பிரித்தானிய தொழில்நுட்ப துறையில் பலமான 35 பெண்களில் ஒருவராக காணப்படுகிறார். அத்துடன் பிரித்தானியாவில் இணையம் ஊடாக வாக்களிக்கும் முறையை தயாரித்தமை உட்பட விசேட பல விடயங்களில் அவரது பங்களிப்பு உண்டு.

மேலும் பல முறை உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றியுள்ளார். தற்போது உலக இளைஞர் மாநாட்டில் இணைந்துள்ளார்.

தனது தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிரோஷிகா, தற்போது தனது தாயை தேடி வருகிறார். தாயை கண்டுபிடிக்கும் நோக்கில் அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

1980 - 90 ஆண்டு காலப்பகுதியினுள் இலங்கை சேர்ந்த 11000 குழந்தைகள் ஐரோப்பா நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நெதர்லாந்து ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.