சோதனைகளை சாதனையாக்கி புகழ்பெற்ற மனிதனின் நெகிழ்ச்சியான வாழ்க்கை அனுபவங்கள்

Report Print Sujitha Sri in சிறப்பு

சோதனைகளை சாதனையாக்கிய வரலாற்றை கொண்ட பலர் நம் புவியில் வாழ்ந்துள்ளார்கள். இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெற்று உலகிற்கு உதாரணமான பலரும் வறுமை, தோல்வி, உதாசீனம் போன்றவற்றை சந்தித்து அவற்றை கடந்து வந்தவர்களாவர்.

இவ்வாறு வாழ்வில் பல கஸ்டங்களை அனுபவித்து இறப்பின் பின்னரும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் உன்னத மனிதனே சார்ல்ஸ் ஸ்பென்சர் சாப்ளின்.

லண்டனில் உள்ள வால்வோர்த்தில், சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாக 1889 ஏப்ரல் 16இல் பிறந்தார் சாப்ளின்.

ஆம் இவரது இளம் பிராயமானது சொல்ல முடியாத துன்பங்களை தாங்கியதாக காணப்பட்டுள்ளது. வறுமையின் காரணமாக சாப்ளினின் குடும்பம் உடைந்துள்ளது. தந்தை மதுவுக்கு அடிமையாக, சில காலங்கள் மாத்திரமே தாயின் அன்பும் நிலைத்துள்ளது.

இதனையடுத்து சாப்ளினின் தாய்க்கு உடல்நிலை பாதிப்படையவே அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த நிலையில் தாய், தந்தையின் நிழல் கிடைக்காத சாப்ளினுக்கு எஞ்சியது தனிமை மாத்திரமே.

இதன்பின் அவர் Hanwell School for Orphans and Destitute Children எனும் ஆதரவற்ற சிறுவர்களுக்கான இல்லத்தில் சாப்ளின் சேர்க்கப்பட்டார்.

இந்த இல்லத்தில் சாப்ளின் பெற்ற துன்பங்களைத் தாங்கும் தன்மை, சாப்ளின் பிற்காலத்தில் திரைப்பட ஆளுமையாக மாறியபோது கைகொடுத்துள்ளது.

சாப்ளினுக்கு உணவின் மீதும் பாதுகாப்பான வாழ்க்கை மீதும் நாட்டம் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த இரண்டுமே பால்யத்தில் சாப்ளினுக்குச் சரிவரக் கிடைக்காமல் இருந்தன. வாழ்நாள் முழுவதும் பரிபூரண காதலுக்காக அவர் ஏங்கிய போதும் இறுதிவரை அதை அவர் கண்டடைய முடியவில்லை.

இவ்வாறான நிலையில் ஒன்பது வயதில் சாப்ளின் நாட்டுப்புற நடனக் குழு ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

இந்தக் குழுவினருடன் இங்கிலாந்தில் இருந்த பெரும்பாலான இசையரங்குகளுக்குச் செல்லும் வாய்ப்பு சாப்ளினுக்குக் கிடைத்தது.

அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த காமெடியன்களின் ஒவ்வொரு அசைவையும் நன்கு அவதானித்துத் தனக்குள் பதியவைத்து கொண்டார் சாப்ளின்.

இதற்கிடையில், சாப்ளினின் தந்தை குடிப் பழக்கத்தால் உடல் நலம் குன்றி சாப்ளினின் பன்னிரண்டாவது வயதில் இறந்தார்.

இதனால் இவர் தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி கிராய்டனில் இருந்த கேன் ஹில் அசைலம் (Cane Hill Asylum) என்ற மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

பின்பு இவரும் 1928ஆம் ஆண்டில் இறந்தார். இந்தத் துன்பங்களை எல்லாம் தாங்கி கொண்ட சாப்ளினுக்கு 14 வயதில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதையில் நடிக்க ஒரு சிறு கதாபாத்திரம் கிடைத்தது.

இதில் நடிப்பதற்காக சாப்ளின் இங்கிலாந்து முழுவதும் சுற்றியுள்ளார் அவர். 1913இல் சாப்ளின் கலிபோர்னியாவில் உள்ள கீஸ்டோன் ஸ்டுடியோவில் சேர்ந்தார்.

அப்போது அவருக்கு வாரத்திற்கு 150 டாலர் சம்பளம். அதுவரை அவர் சம்பாதித்திராத தொகை. இதனையடுத்து ஓராண்டுக்குள் சார்லி சாப்ளின் அமெரிக்காவின் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக மாறினார்.

இதன்பின் 1917இல் சொந்தமாக ஸ்டுடியோவை கட்டினார். 1921இல் சாப்ளின் லண்டனுக்குத் திரும்பிய போது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டுள்ளனர்.

இவரது திரையுலக வெற்றிகள் மூலமாக இவருக்கு கிடைத்த புகழ், பலமுறை தன் தனிப்பட்ட வாழ்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

அக்டோபர் 23, 1918இல் 28 வயதான சாப்ளின் 16 வயது மில்ட்ரெட் ஹாரிசை மணந்தார். இவர்களுக்கு பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தது. இவர்களது திருமண வாழ்க்கை 1920ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்துள்ளது.

35 வயதில் "தி கோல்ட் ரஷ்" திரைப்படத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுது, 16 வயது லீடா க்ரே மீது காதல் கொண்டார். நவம்பர் 26, 1924இல் க்ரே கர்ப்பமான நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். இவர்களது மண வாழ்க்கையும் $825,000 ஒப்பந்ததுடன் விவாகரத்தில் முடிந்தது.

சாப்ளினின் 47ஆவது வயதில் பாலட் கொடார்டை ஜூன் 1936இல் ரகசியமாக மணமுடித்துள்ளதாக தகவல்கள் உள்ளன. சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த பின் இந்த திருமணமும் விவாகரத்தில் முறிந்தது.

இக்காலகட்டத்தில் நடிகை ஜோன் பேரியுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது. ஆனால், பேரி சாப்ளினை துன்புறுத்தியதால் மெதுவாக அவ்வுறவினை முடித்துக் கொண்டார். ஆனால் மே 1943ஆம் ஆண்டு தனது குழந்தைக்கு சாப்ளினே தந்தை என்று வழக்கு தொடர்ந்தார்.

இரத்த பரிசோதனைகள் சாப்ளினை குற்றமற்றவர் என்று காட்டினாலும், அக்காலத்தில் இரத்த பரிசோதனைகள் நீதிமன்றங்களில் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. குழந்தை 21 வயது வரும் வரை வாரம் $75 வழங்குமாறு உத்தரவிடப்பட்டார்.

சில நாட்கள் கழித்து, ஐகன் ஓ நீலின் மகள், ஓனா ஓ நீலை சந்தித்தார். இவரை ஜூன் 16, 1943 அன்று மணந்தார். சாப்ளினின் வயது அப்பொழுது 54, ஓ நீலின் வயது 17. இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழ்ந்தைகள் பிறந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சாப்ளின், 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88 வயதில் வேவேவில் இறந்துள்ளார்.

தனது சொந்த வாழ்க்கையில் இளம் பராயத்தில் மகிழ்ச்சியையே காணாத அவர் தன்னம்பிக்கையால் உலகிலுள்ள பலரது மனதிலும் சாப்ளின் தனது பாதசுவடை பதித்து சென்றுள்ளார்.

எனவே வறுமையையும், துக்கத்தையும் காரணம் காட்டி எமது திறமைகளை நம்முள் அடக்கி வைப்பதென்பது சரியானதல்ல. எத்தனை கஸ்டங்கள் வந்தாலும் அதை தள்ளி முன்னேறுவதே உத்தமம்.