ஏமாற்றி விட்டார் ஜனாதிபதி மைத்திரி! கலக்கத்தில் தமிழ் தாய்

Report Print Dias Dias in இலங்கை
ஏமாற்றி விட்டார் ஜனாதிபதி மைத்திரி! கலக்கத்தில் தமிழ் தாய்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகத்தை ஸ்ரீலங்காவில் அமைப்பதற்கு தாமதம் ஏற்பட்டால் சர்வதேசத்தின் அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்திலேயே ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணாமல் போனார் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா ஜனாதிபதி இணங்கியுள்ளார் என்று பெருமைப்படாது, அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்தும் சர்வதேச சமூகம் உட்பட அனைத்து தரப்பினரும் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டு, இந்த ஆண்டு யூலை மாதம் திருத்தம் செய்யப்பட்ட காணாமல் போனோர் அலுவலக சட்டத்திற்கு அமைய காணாமல் போனோர் அலுவலகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி கையெழுத்திட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் அமைப்பதற்கு பல்வேறுபட்ட அழுத்தங்களின் பின்னரே ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார்.

இவ்வாறு அழுத்தத்தின் மத்தியில் உருவாக்கப்படும் இந்த அலுவலகத்தினால் எமக்கு என்ன பலன் கிடைக்கப்போகின்றது?

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகத்தை அமைக்குமாறு மாத்திரம் அழுத்தத்தைப் பிரயோகிக்காது, அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் ஆராய வேண்டும் என்பதே காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களது கோரிக்கையாக காணப்படுகின்றது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை ஏற்க முடியாது. அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அலுவலகம் அமைக்கப்பட்டு விட்டது என்று மாத்திரம் பெருமைப்படாது அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது கோரிக்கை

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகத்தில் கையெழுத்திட்டுள்ள ஜனாதிபதி, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க செல்லவுள்ளமை குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் அங்கத்தவரான ஆ.லீலாவதி, நாட்டில் நடப்பது ஒன்று. ஆனால் ஸ்ரீலங்கா அரச அதிகாரிகளால் வெளிஉலகத்துக்கு தெரியப்படுத்தப்படுவது வேறொன்று என்று குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார்.

இதேவேளை யுத்தம் நிறைவடைந்து 8 வருங்கள் கடந்துள்ள நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு 200 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், தீர்வைப் பெற்றுத்தராது மௌனியாக இருந்த நல்லாட்சி அரசாங்கம், ஐ.நா கூட்டத்தொடர் ஆரம்பமானதும் இந்த அலுவலகத்தில் கையெழுத்திட்டிருப்பது வெளிஉலகத்துக்கு வேடமிடுவதற்கா என்று திருகோணமலை மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி நா.ஆஷா கேள்வி எழுப்பியுள்ளார்.