ஐ.நாவை ஏமாற்ற முயலும் செயற்பாட்டையே ராஜிதவின் கருத்து வெளிப்படுத்துகின்றது : செல்வம் அடைக்கலநாதன்

Report Print Thileepan Thileepan in அறிக்கை

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்களை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த கருத்தானது ஐக்கிய நாடுகள் சபையை ஏமாற்றும் செயற்பாட்டையே வெளிப்படுத்தியுள்ளது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

யாழில் மத்திய சுகாதார அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதெனவும், அது இறுதி யுத்தத்தின் போது அதிகளவில் இடம்பெற்றதாகவும், சுட்டிக்காட்டியுள்ளதுடன் அதனுடன் சம்பந்தப்பட்டவர்கள் சர்வதேச நீதிபதிகளை கொண்ட விசாரணை குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் ஏனைய நல்லிணக்க பொறிமுறைகள் உட்பட ஐ.நா மனித உரிமை பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றவும் இலங்கை அரசாங்கம் மேலும் இரண்டு வருட கால அவகாசம் கோரியிருந்தது.

இவ்வறான நிலையில் அரசு ஐ.நாவின் மனித உரிமை பேரவையின் நிபந்தனைகளுக்கு இணைந்து கால அவகாசத்தினையும் பெற்றுள்ள இவ்வேளையில் போர்க்குற்றங்களை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் வடக்கு மாகாணத்திற்கு தேவையான அதிகாரத்தினை வழங்கியுள்ளதாகவும் பாரிய பொய்யொன்றினை அமைச்சராக உள்ள ராஜித சேனாரத்தின தெரிவித்துள்ளார்.

இதற்கும் அப்பால் இலங்கையில் சிங்கள மக்கள் வாழ்வது போன்றே தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் சகல உரிமையையும் சலுகைகளையும் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று வடக்கு கிழக்கில் பாரிய நில மீட்பு போராட்டங்களும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான போராட்டங்களும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களும் இடம்பெற்று வரும் நிலையில், எதனை சாதித்துவிட்டதாக அரசு பறைசாற்ற முயல்கின்றது என்பது கேள்விக்குரிய விடயமாகும்.

எனவே தெற்கில் ஓர் கதையும் வடக்கில் ஓர் கதையும் பேசும் தென்னிலங்கை அரசியலாளர்களும் இலங்கை அரசாங்கமும் இரண்டு வருட கால அவகாசத்தில் ஐ.நாவின் மனித உரிமை பேரவையினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுக்கின்றதா என்பது தொடர்பில் குறித்த காலப்பகுதிக்கொருமுறை ஆய்வை மேற்கொண்டு இலங்கை அரசின் மீது அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் எனவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments