பிரதேச வாத கடும்போக்காளர்களை வன்மையாக கண்டிக்கின்றேன்: எம்.பி.நடராஜ்

Report Print Thileepan Thileepan in அறிக்கை

கரை எழில் நூல் வெளியீடு தொடர்பாக தமிழ்க்கவியையும் பிரதேச வாத கடும் போக்காளர்களையும் வன்மையாக கண்டிக்கின்றேன் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், வடக்கு வாழ் மலையகத்தமிழ் மக்கள் ஒன்றிய இணைப்பாளருமாகிய எம்.பி நடராஜ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மலையாகப்புரத்தில் கடந்த 08 ஆம் திகதி கரைச்சி பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்ட கலாச்சார நிகழ்வில் 'கரை எழில்-2016' என்ற நூல் வெளியிடப்பட்டது.

இந்த நூலில் தமிழ்க்கவி என்ற அம்மையார் கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்து வாழும் மலையகத் தமிழ் மக்களின் வாழ்வாதார முறைமைகளை மையப்படுத்தி கட்டுரை எழுதுவதாக பாசாங்கு செய்து,

மலையகத் தமிழ் மக்களின் மீதும் அவர்களுடைய வாழ்க்கை முறைமைப் பற்றியும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை கண்மூடித்தனமாக முன்வைத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக எம்.பி நடராஜ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில்,

வன்மையான கண்டனத்திற்கு உட்படும் இந்த குற்றச்சாட்டுக்கள் கிளிநொச்சியில் வாழும் மலையகத் தமிழ் மக்களை மாத்திரமின்றி வடக்கு, கிழக்கு மற்றும் இலங்கை முழுவதும் வாழும் மலையகத் தமிழ் மக்களின் மனங்களைக் காயப்படுத்தி மாறாத வடுவை தோற்றுவித்துள்ளது.

பிரதேச வாத கடும் போக்காளரான தமிழ்க்கவி அம்மையாரும் இந்த நூலினை அச்சிலேற்றி வெளியீடு செய்த கரைச்சி பிரதேச செயலாளரும் மற்றும் விழா குழுவினரும் மலையகத்தமிழ் மக்களின் மனத்தாக்கத்தை உணர்ந்து மன்னிப்பு கோரவேண்டும்.

தமிழ்க்கவி அம்மையாரின் மேற்படி கட்டுரையை விமர்சனம் செய்யும் சமூக ஊடக பயன்பாட்டாளர்களில் சிலர் தேவையற்ற கருத்து பரிமாற்றத்தினை மேற்கொள்வதுடன்,

மேற்படி விடயத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மலையகத்தமிழ் மக்களின் மனதில் ஏற்பட்டுள்ள காயத்தை மேலும் பெரிதாக்கும் வகையில் பிரதேசவாத கொடூர கருத்துக்களை பதிவு செய்வதனையும் அவதானிக்க முடிகின்றது.

இம்மக்கள் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நாடு முழுவதிலும் தமிழ்த் தேசிய பற்றுதலுக்காக பட்டவேதனைகளையும், துயரங்களையும் மனதில் எடுத்துக் கொள்ளாது மாற்றான் தாய் மனநிலையில் தான் இன்னும் பெரும்பாலானோர் உள்ளனர் என்பதை இவ்விடயம் வெட்ட வெளிச்சமாக்குகின்றது.

மலையகத் தமிழ் இளைஞர், யுவதிகள் தொடக்கம் வளர்ந்தோர் வரை தமிழ்த் தேசிய போராட்ட வரலாற்றில் சாதாரண போராளிகளாகவும், தளபதிகளாகவும், மண் மற்றும் தன்மான தமிழ் பற்றுடன் களம் இறங்கி போராடியதையும் வீரசாவடைந்ததையும் தமிழ்க்கவி அம்மையார் போன்றவர்கள் தேசியபற்றற்றதெனக் கூறி கொச்சைப்படுத்த முடியாது.

எனினும், மலையக தமிழ் மக்களின் உயர்ச்சியில் அக்கறையும், அவர்களின் வாழ்க்கையில் இரக்கமும், பரிதாபமும் கொண்ட நல்லுள்ளங்கள் பல பேர் இச்சமூகத்தில் உள்ளனர்.

ஆனால் இருக்கின்ற சில ஆதிக்க வெறியாளர்களினாலும், மேட்டுக்குடியாளர்களினாலும், பிரதேச வாத கடும் போக்காளர்களினாலும், வடக்கு வாழ் மலையகத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் பிரதேசவாத கடும்போக்குடனும், வர்க்கப்பேதத்துடனும் நடத்தப்பட்டால் அல்லது நசுக்கப்பட்டால் இது எமது தமிழ் மக்களுக்குள் பாரிய பிளவினை ஏற்படுத்தி தமிழ்த்தேசிய உணர்வை மலுங்கடிக்கச் செய்யும் என்பதை யாவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ் அரசியல் தலைமைகளும், சமூக செயற்பாட்டாளர்களும், தமிழ்பற்றாளர்களும், மலையகத்தமிழ் மக்கள் மீது இரக்கமும் பரிவும் உள்ள நல்லுள்ளங்களும் வெறுமனே இதனை பார்த்துக் கொண்டிராது.

இத்துர்ப்பாக்கிய செயலை கண்டிப்பதுடன் இவ்வாறான பிரதேச வாத கடும் போக்காளரிடமிருந்து இம்மக்களைப் பாதுகாத்து அவர்களுக்கு உறுதுணையாக நின்று செயற்பட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், வடக்கு வாழ் மலையகத்தமிழ் மக்கள் ஒன்றிய இணைப்பாளருமாகிய எம்.பி நடராஜ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments