71 விடுதலைப் புலிகளை மட்டும் விடுவிக்க முடியாது! அவர்கள் பயங்கரவாதிகள்

Report Print Shalini in அறிக்கை

2008ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என கூறுவது முற்றிலும் பொய்யான விடயம் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே நீதியமைச்சர் இதை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

2008ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என கூறுவது முற்றிலும் பொய்யான விடயம்.

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலிகளில் 12,000 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் கடும் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 71 புலிகள் மட்டுமே இன்னும் தடுப்பில் உள்ளனர்.

பேருந்துகளில் குண்டு வைத்தல். கொலை என பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இவர்களை மட்டும் எக்காரணத்திற்காகவும் விடுதலை செய்ய முடியாது, அவர்கள் பயங்கரவாதிகள் எனவும் நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, நாட்டில் யுத்தக் குற்றம் இடம்பெறவில்லை, இங்கு நடைபெற்றது மனிதாபிமான நடவடிக்கையே. இதனால் எமது இராணுவம் குற்றம் செய்யவில்லை, இராணுவத்தினரை எந்த காரணத்திற்காகவும் தண்டிக்க முடியாது என அறிவித்துள்ளார்.

அவ்வாறு தண்டிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு யாரேனும் வருவார்களாயின் அதற்கு எமது அரசு இடம்கொடுக்கப் போவதில்லை. சர்வதேச நீதிமன்றத்தில் எமது இராணுவத்தினர் ஒருபோதும் நிறுத்தப்பட மாட்டார்கள் எனவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர், இலங்கையில் மோசமான சித்திரவதைகள் இடம்பெறுவதாகவும், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், போர்க்குற்றம் செய்த இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.