வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு வீசா வழங்கப்படாதென வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைவர் நிஹால் ரணசிங்க இன்று இந்த கருத்துக்களை நிராகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் எந்தவொரு விசேட சோதனை அல்லது தாமதங்கள் ஏற்படாமல் வீசா வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிரியா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் உட்பட சில நாடுகளின் குடிமக்களுக்கு வீசா வழங்கும் போது சிறப்பு சோதனை மேற்கொள்ளப்படும் என நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது.
தற்போதைய நடைமுறையின்படி, தமது திணைக்களம் எந்த நாட்டையும் அல்லது நாடுகளின் பிரஜைகளையும் தடை செய்வதாக குறிப்பிடவில்லை என ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக நடவடிக்கை, விடுமுறை ஓய்வு, கல்வி அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் இலங்கை செல்ல விரும்பும் எந்தவொரு வெளிநாட்டவரும் வீசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். அந்த வீசாக்களை 30 நாட்களுக்கு பெற்று கொள்ள முடியும்.
மேலும் குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களத்தில் விண்ணப்பிப்பதன் மூலம் வெளிநாட்டவர்கள் தமது வீசாவை நீடிக்கவும் முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.