12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்! உறவினர் ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை

Report Print Theesan in அறிக்கை

புதுக்குடியிருப்பில் 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்திற்கு 53 வயதான நபருக்கு 15 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டள்ளது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் அவர்களினால் குறித்த தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டுள்ளது.

கடந்த (09.09.2012) ஆம் ஆண்டு புதுக்குடியிருப்பு 2ஆம் வட்டாரம் கோம்பாவில் பகுதியில் தனது மனைவியின் சகோதரியின் மகளின் மகளான 12 வயது சிறுமி ஒருவரை சந்யாப்பிள்ளை மார்க் 53 வயதுடைய நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தாயார் மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து குறித்த நபரை கைது செய்த புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.

வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்ததுடன் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 29.05.2017 அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வுப் பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

சாட்சிகளின் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு நேற்றைய தினம் 11.09.2017 தீர்ப்பிற்கு திகதியிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்துமாறும் அதை செலுத்தத்தவறின் இரண்டு வருட கடூழியச்சிறை அனுபவிக்க வேண்டும் எனவும் தண்டப்பணமாக 10ஆயிரம் ரூபாவினை செலுத்துமாறும் அதை செலுத்தத்தவறின் ஒரு மாதம் சாதாரண சிறையும் அனுபவிக்க நேரிடும் என தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

அரச தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.