யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்க இணைச்செயலாளர் மீதான கொலை அச்சுறுத்தலுக்கு கடும் கண்டனம்

Report Print Thamilin Tholan in அறிக்கை

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்க இணைச்செயலாளர் கலாராஜ்ஜிற்கு நேற்று கொலை அச்சறுத்தல் விடுக்கப்பட்டமையை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இன்று செய்திக் குறிப்பொன்றை விடுத்துள்ளார்.

இந்த செய்திக் குறிப்பிலேயே அவர் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அந்தச் செய்திக் குறிப்பில் மேலும்,

ஜனநாயக ரீதியாக கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்கும் கலாச்சாரத்தை வளர்க்காமல் அச்சுறுத்தல் மூலமான கலாச்சாரத்தை மீண்டும் நினைவுபடுத்தும் கடந்தகால செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவே இந்த அச்சுறுத்தல் சம்பவத்தை நாம் பார்க்கின்றோம்.

சில தொழிற்சங்கங்கள் அதன் அங்கத்தவர் நலன்சார்ந்து செயற்படாமல் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் துணையாகச் செயற்படுவதும், ஊழியரின் உரிமைக்காக குரல்கொடுக்கும் சகோதரத் தொழிற்சங்கங்களை அதிகார வர்க்கத்துடன் இணைந்து நசுக்க முயல்வதும், கொலை அச்சுறுத்தல் விடுவதும் கண்டனத்துக்ககுரிய விடயமாகும்.

இத்தகைய அநாகரிகமான செயற்பாடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். யாழ். பல்கலைக்கழகம் தமிழ் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும்.

சமூகத்துக்கு முன்னுதாரணமான கல்விக் கூடமாகும். இங்கு நடைபெறும் நெறிபிறழ்வுகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். ஜனநாயகப் பண்புகள் வளர்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.