மருத்துவர்களது பிரச்சினைகள் தொடர்பில் அரசு உடனடி தீர்வை வழங்க வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

Report Print Gokulan Gokulan in அறிக்கை

மருத்துவர்களது பணிப்புறக்கணிப்புகள் காரணமாக நோயாளர்கள் பாரிய பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருகின்றமை தொடர்ந்து இடம்பெறும் பாரிய ஆபத்தாக உருவெடுத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மருத்துவ சங்கத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைள் தொடர்பில் அரசு இழுத்தடிக்கும் போக்குடன் செயற்படாது, பிரச்சினைகளை உரிய முறையில் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

கடந்த 12ஆம் திகதி வடக்கு, கிழக்கு உட்பட நாட்டில் 09 மாவட்டங்களில் மருத்துவர்கள் பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன், இந்த நடவடிக்கைகள் ஏனைய மாவட்டங்களில் நேற்றும், இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

மருத்துவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு இல்லையெனில் மேற்படி பணிப் பகிஷ்கரிப்பானது ஒன்றிணைந்த பணிப் பகிஷ்கரிப்பாக தொடரும் அபாயம் இருப்பதாகவும் தெரிய வருகின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் மற்றும் ஏனைய ஆளணியினருக்கான பற்றாக்குறைகள் பல வருட காலமாகத் தொடர்கின்ற நிலையில், நோயாளர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தகைய பணிப் பகிஷ்கரிப்புகள் மேலும் அவர்களை கடுமையான பாதிப்புகளுக்கு உட்படுத்தி வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதே நிலை நாட்டில் பெரும்பாலான பகுதிகளிலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் மருத்துவர்களது பணிப் பகிஷ்கரிப்புகளை முடிவுக்குக் கொண்டுவர அரசால் இதுவரையில் இயலாதிருப்பது கேள்விக்குரிய விடயமாகியுள்ளது. இது மக்களிடையெ பெரும் அதிருப்தி நிலையைத் தோற்றுவித்துள்ளது.

மருத்துவர்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கென பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வாவின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ள நிலையிலும், அக் குழு தொடர்பில் மருத்துவத் தரப்பினர் அதிருப்திகளை வெளியிட்டு வருகின்ற ஒரு நிலையே காணப்படுகின்றது.

மருத்துவர்களது பிரச்சினைகளுள் பிரதான பிரச்சினையாக காணப்படுகின்ற மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான போராட்டங்களில் மருத்துவத்துறை மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அவர்களது கற்கை செயற்பாடுகள் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றன.

இன்று எமது நாட்டில் மருத்துவர்களுக்கு பாரிய பற்றாக்குறைகள் நிலவும் நிலையில், நாளைய மருத்துவர்களாக மாற வேண்டிய இந்த மாணவர்களது கற்கை செயற்பாடுகளும் பாதிக்கப்படுமானால், எமது நாட்டின் எதிர்கால மருத்துவத்துறையானது பாரிய சவாலுக்கு உட்படுத்தப்படுவது நிச்சயமாகும்.

அதே நேரம் எமது நாட்டில் மருத்துவத்துறையில் கற்கைகளை மேற்கொண்டு வருகின்ற வெளிநாட்டு மாணவர்களை அந்த நாடுகள் திருப்பி அழைக்கின்ற நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.

எனவே, தற்போதைய இந்த நெருக்கடியான நிலையை அவதானத்தில் கொண்டு, அரசு உடனடி, நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை எட்ட வேண்டுமென குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.