யாழ். பல்கலை மாணவர்கள் மரணம்! 11 மாதங்களுக்கு பின் பொலிஸாருக்கு பிணை

Report Print Shalini in அறிக்கை

யாழ். காங்கேசன்துறை வீதி குளப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்றது. இதன்போதே ஐவருக்கும் பிணை வழங்கி யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் சார்பில் அவர்களின் உறவினர்களால் யாழ்.மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் கடந்த 06ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பான அறிக்கையொன்றினைப் பெற வேண்டியுள்ளதாக அரச தரப்புச் சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அவரது விண்ணப்பத்தினை ஏற்றுக் கொண்ட நீதிபதி பொலிஸ் அதிகாரிகளின் பிணை மனுவை நிராகரித்திருந்தார். இந்த நிலையில் பிணை மனு தொடர்பான விசாரணையை இன்றைய தினத்திற்குத் தவணையிட்டிருந்த நிலையிலேயே ஐந்து பொலிஸ் அதிகாரிகளையும் பிணையில் செல்வதற்கு அனுமதியளித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொரு மாணவன் விபத்தில் பலியாகி இருந்தார்.

இந்த சம்பவம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் கடமையில் இருந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு, கடந்த 11 மாதங்களாக தொடர்ச்சியாக அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த சம்பவத்தில் யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல்துறை மாணவனான கஜன் (வயது 23) மற்றும் ஊடகக்கற்கை மாணவனான சுலக்சன் (வயது 24) ஆகிய இரு மாணவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள் - தமிழின் தோழன்