பொன்சேகாவின் கருத்தே ஆதாரம்! நடவடிக்கை எடுப்பது ஐ.நாவின் கடமை: தர்மலிங்கம் சித்தார்த்தன்

Report Print Thamilin Tholan in அறிக்கை

யுத்தத்தின் போது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது ஐக்கிய நாடுகள் சபையின் கடமை என த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார்.

போர்க்குற்ற விசாரணை தொடர்பான புளொட் அமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் இன்று (14) கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“யுத்த காலத்தில் கட்டளைத் தளபதியாக இருந்த ஜகத் ஜெயசூரிய உட்பட 30 பேர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா அண்மையில் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவத்தளபதி ஒருவர் இவ்வாறான கருத்தினைத் தெரிவித்திருப்பது போர்க்குற்றங்களுக்கான முக்கிய ஆதாரமாகவுள்ளது.

ஆகவே, யுத்தத்தின் போது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் தகுந்த பொறிமுறையையும், நடைமுறைகளையும் காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டியது ஐக்கியநாடுகள் சபையின் கடமை.

போர்க்குற்றம் தொடர்பாக முன்னாள் இராணுவத்தளபதி கருத்து தெரிவித்த பின்னர் தென்னிலங்கையில் எழுந்திருக்கும் பல்வேறு விதமான கருத்துக்கள் எதிர்பார்த்த ஒன்று தான், எனினும் இது தொடர்பான உண்மைகள் வெளிக்கொணரப்படுவதற்கு நீதியான விசாரணைகள் அவசியம் எனவும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார்.