திருகோணமலையில் நிலஅதிர்வு! காரணம் வெளியானது

Report Print Murali Murali in அறிக்கை

இலங்கையின் புவியில் அமைவிடம் காரணமாக நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திருக்கோணமலை - தோப்பூர் மற்றும் மூதூர் பகுதியில் ஏற்பட்டது நில அதிர்வு எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இரவு 08.45 மணியளவில் திருகோணமலையின் தோப்பூர் மற்றும் மூதூர் பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டிருந்தது.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், இலங்கையின் கடந்த கால வரலாற்றில் நில நடுக்கம் ஏற்பட்டதில்லை. பூமியின் கலச தகடுகளின் விளிம்பிலும், நிலநடுக்க வலயத்திலும் இலங்கை இல்லை.

எனவே, இலங்கையில் நில நடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. இலங்கை, இந்தோ - அவுஸ்திரேலியா கலச தகட்டில் இருக்கின்றது. 2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டதற்கு பின்னர் சிறிய நில அதிர்வு இலங்கையில் உணரப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தோனேஷியா பகுதியில் ஏற்படும் நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக சிறிய நில அதிர்வு உணரப்படலாம். எனினும் இது சேதங்களை ஏற்படுத்தாது.

இலங்கையின் அடித்தள பாறையில் ஏற்படுகின்ற மாற்றமும் சிறிய நில அதிர்வு ஏற்பட காரணமாக அமையலாம். மழைக்காலங்களில் நீர் தேங்கி நில ஈர தன்மையின் விளைவாலும் சிறிய நில அதிர்வு ஏற்படலாம்.

இவை சிறிய அதிர்வு என்பதால் புவி நடுக்க மானியில் பதிவை ஏற்படுத்தாது. திருகோணமலை பகுதியில் ஏற்பட்ட சிறிய அதிர்வுக்கு தொடர் மழையினால் ஏற்பட்ட ஈரப்பதன் காரணமாக இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.