இலங்கையில் மனிதர்களாக மாறும் மிருகங்கள்! மிருகங்களாக மாற்றப்படும் தமிழர்கள்

Report Print Vethu Vethu in அறிக்கை

இலங்கையின் சமகால அரசியல் தளத்தில் மிருகங்கள் மீதான பெரும்பான்மையின அரசியல்வாதிகளின் கரிசனை பேசும் விடயமாக மாறியுள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் ஒரு பகுதியை இரவு நேரத்தில் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் இந்த நடவடிக்கைக்கு அரசியல்வாதிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் மிருகக்காட்சி சாலையை இரவு நேரத்தில் திறக்க மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெஹிவளை மிருகக்காட்சி சாலையை இரவு 10 மணி வரை திறப்பதால், மிருகங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மிருகங்களுக்கு இரவு வேளைகளில் ஓய்வு அவசியமானது. இது தொடர்பில் நிபுணர்களின் அறிக்கை பெறப்பட்டு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் இந்த திட்டத்தின் மூலம் மிருகங்களின் சுதந்திரத்திற்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவின் தலைவர் ரவீந்திரநாத் தாபரே எச்சரித்துள்ளார்.

குறிப்பாக, சில மிருகங்கள் இரவு நேரத்தில் தூங்க வேண்டியது மிக முக்கியமானது. மக்கள் நடமாட்டம் அதிகரித்தால் அவற்றின் தூக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அதன்மூலம் விலங்குகளின் சுகாதாரம் பாதிக்கப்படும்.

எனவே, மிருகக்காட்சி சாலைகள் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கும் போது, அரசு அதிகாரிகள் பொதுமக்களின் நலன்களை மட்டுமல்ல, மிருகங்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தீர்மானங்களை எடுக்க வேண்டுமென்றும் அவர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும் இது குறித்து துறைசார் நிபுணர்களிடம் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், மிருகங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதென உத்தரவாதம் பெறப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

மிருகங்கள் மீது தென்னிலங்கை அரசியல்வாதிகளின் கரிசனை குறித்து தமிழ் மக்கள் நன்றி தெரிவிப்பதுடன், தமது ஆதங்கத்தையும் வெளியிட்டுள்ளனர்.

போர்ச்சூழல் காரணமாக சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து அநாதரவாக தமிழ் மக்கள் வாழும் போது இவர்களுக்கு வராத அக்கறை, மிருகங்கள் மீது வருவது வியப்பான விடயம் தான்.

தமிழர் தாயகம் எங்கும் திட்டமிட்ட நிலச் சூறையாடல்களை மேற்கொள்ளும் இராணுவம், அங்கு குடியேறச் செல்லும் தமிழ் மக்களை அடித்து விரட்டுகின்றனர். அச்சுறுத்தல் விடுகின்றனர்.

சொந்த நிலங்களை இழந்து மரங்களிலும், குடிசைகளிலும் மிருகங்களை போன்று தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனினும் மிருகக்காட்சி சாலையை இரவு நேரங்களில் திறப்பதால் அவற்றின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

மிருகங்களின் மீது பெரும்பான்மையின அரசியல்வாதிகள் காட்டும் அக்கறையை கொஞ்சமாவது தமிழ் மக்கள் மீது காட்டுவார்களாயின், நாட்டில் நிலவும் அரைவாசிப் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்பட்டு விடும்.

தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை என்பன தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் பேசும் விடயமாக மாறியுள்ளது.

தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் அத்துமீறி கையகப்படுத்தி வருகின்றது. மறுபுறம் போர் முடிந்து எட்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், அரசியல் கைதிகள் இன்றும் சிறைக்கம்பிகளுக்குள் மிருகங்களை போன்று அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் விடுதலை தொடர்பில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் தமிழர் தரப்பினால் முன்னெடுக்கப்பட்ட போதிலும், எந்தவொரு தென்னிலங்கை அரசியல்வாதியும் அது குறித்து வாய் திறக்கவில்லை.

பொழுதுபோக்குக்காக மிருகங்களை இரவு நேரங்களில் காட்சிப்படுத்த விரும்பாத அரசியல்வாதிகள், வாழ்நாள் முழுவதும் இருட்டறையில் சிறைப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து பார்ப்பார்களா?

ஒரு நாட்டில் சகல இனங்களும் சுதந்திரமாக செயற்படும் போதே உண்மையான நல்லிணக்கம், சமாதானம் சாத்தியமாகும்.

அதனை வெற்றி கொள்ள காத்திருக்கும் தமிழர் தரப்புக்கு சிறைக்கதவுகள் உடைக்கப்பட்டு, வெளிச்சம் உண்டாகும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

மிருகங்கள் மீது காட்டும் அக்கறையை தமது மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் விடுதலை என்பனவற்றிலும் காட்ட வேண்டும் என தமிழ் மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.


You may like this video