பரிதாபமான நிலையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள்

Report Print Thileepan Thileepan in அறிக்கை

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுவதாக வவுனியா மாவட்ட சிரேஸ்ட சட்டத்தரணி பி.அன்ரன் புனிதநாயகம் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளை இன்றைய தினம்(13) பார்வையிட்டதன் பின்னர் வவுனியாவிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

தங்கள் வழக்குகளை வவுனியா நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரி உண்ணாவிரதம் இருக்கும் ராசதுரை திருவருள், மதியரசன் துலக்சன், கணேசன் தர்சன் ஆகிய மூவரும் கடந்த 25-09-2017 தொடக்கம் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.

அவர்களின் நிலை மோசமடைந்து உடல் சோர்வுற்ற நிலையில் காணப்படுகின்றனர். அவர்களுக்கு சிறை அதிகாரிகள் உடலில் 'சேலைன்' ஏற்றிவருகின்றனர்.

இவர்கள் மூவரும் 18-05-2009 ஆண்டு கைது செய்யப்பட்டு பல்வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் 2013-07-15 வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் அரச சட்டத்தரணி சாட்சிகளுக்கு பாதுகாப்பு இல்லை என தெரிவித்து வழக்கை அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தபோதும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அரச சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்காது சாட்சிகளுக்கு அழைப்பாணை வழங்கப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் சட்டமா அதிபரினால் அரசியல் கைதிகளின் வழக்கானது திடீரென அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அனுராதபுரம் நீதிமன்றத்தில் தங்களுக்கு மொழிப்பிரச்சினை உண்டு, சிங்கள மொழி பேசும் சட்டத்தரணிகளுக்கு அரசியல் கைதிகள் கூறும் விடயம் விளங்குவதில்லை, அத்துடன் பெற்றோர்கள் அவர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்ள முடியாதுள்ளது.

இப்போது நாட்டிலே அமைதி நிலவுகின்ற நிலையில் ஒரு தமிழ்மொழி தெரிந்த நீதிபதியின் முன் தங்கள் வழக்குகள் விசாரிக்கப்படவேண்டும்.

அது வவுனியா மேல் நீதிமன்றம் அல்லது யாழ். மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும் என உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் தங்களை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன், மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம்,சிவஞானம், அனந்தி சசிதரன், ப.சத்தியலிங்கம்.தவநாதன் ஆகியோர் வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கிவிட்டு சென்றுள்ளதாகவும் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளதாக வழங்கறிஞர் தெரிவித்தார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு எதிரான வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றிய போது அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்திருந்தால் தங்களுடைய வழக்கு அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டிருக்காது என்ற ஆதங்கத்தை சிறைக்கைதிகள் வெளிப்படுத்தியதாக குறிப்பிட்டார்.

அத்துடன் வவுனியா அல்லது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்திற்கு தங்கள் வழக்குகள் மாற்றப்படும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்பதுடன் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு வழங்கும் அனைவருக்கும் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் நன்றிகளை தெரிவித்துள்ளதாகவும் சட்டத்தரணி பி. அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தார்.