மிகுந்த மனவருத்தத்துடன் ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி அனுப்பியுள்ள கடிதம்

Report Print Arivakam in அறிக்கை

அநுராதபுரம் சிறையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு நீதியானதொரு தீர்வை உடனடியாக வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“நீண்டகாலமாக அரசியற்கைதிகள் என்ற போர்வையில் எமது உறவுகள் சிறையில் அல்லற்படுகின்றனர். அவர்களில் ஒரு பகுதியினராக அனுராதபுரம் சிறையில் வாடும் மூன்று அரசியல் கைதிகளின் வழக்கை மட்டும் சாட்சிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பெயரில் வவுனியா மேல் நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுவது சட்டத்தையே வசப்படுத்தி அரசியல் உள்நோக்கத்துடன் செயற்படும் சூழ்ச்சியாகவே கருத வேண்டியுள்ளது.

கடந்த பதினெட்டு (18) நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இவ்வரசியற்கைதிகள் கவலைக்கிடமான நிலைக்கு சென்று கொண்டிருக்கும் இவ் வேளையில் தாங்களும் தங்கள் அரசும் பாராமுகம் காட்டி வருவது நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க சமிக்ஞையாக ஒருபோதும் கருத முடியாது.

குறிப்பிட்ட அரசியல் கைதிகள் மூவரும் தங்களிடம் இரண்டு கோரிக்கைகளை மாத்திரமே முன்வைத்துள்ளனர்.

  1. தங்களுக்கு எதிரான வழக்குகள் நியாயமற்ற வகையில் வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் அனுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதைத் தடுத்து நிறுத்துதல்.
  2. நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விரைந்து விடுதலை செய்தல்.

மேற்படி இந்த இரண்டு கோரிக்கைகளையும் தாங்கள் சாதகமாகப் பரிசீலித்து அவர்களுக்கு நியாயம் வழங்கும் ஒரு நல்ல முடிவை எடுப்பதுடன் ஏனைய தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் ஆவன செய்ய வேண்டுமென தமிழ் மக்களாகிய நாம் எதிர்பார்க்கின்றோம்.

இந்த விவகாரம் தமிழ் மக்களின் உணர்வலைகளைத் தட்டி எழுப்பும் விடயமாக மாறியுள்ள சூழ்நிலையில் அதற்கு சரியான தீர்வை – நல்ல முடிவை – அறிவிப்பதன் மூலம் தங்களினதும், தங்கள் அரசினதும் நற்பெயரையும், செல்வாக்கையும் அதன் மீதான தமிழ் மக்களின் அபிமானத்தையும் நிங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

வடக்கு மாகாணத்தில் இன்று நடைபெறும் பூரண கதவடைப்பு இதனை உணர்த்தி நிற்கின்றது. தேசிய தமிழ்த் தினவிழாவிற்கு தாங்கள் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள நிலையில் தங்களின் முன் வைக்கப்பட்டுள்ள இத்தார்மீகப் பொறுப்பை நிறைவேற்றாது விடின் தமிழ் மக்களின் மனங்களை வெற்றி கொள்ள முடியாது என்பதால் தங்களை வரவேற்க இயலாத துரதிஷ்டவசமான நிலைக்கு நாம் தள்ளப்படுவோம் என்பதை மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.” என குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.