கரும்புலிகள் தின அஞ்சலிக்கு அரசினால் தடை விதிக்கப்படவில்லை! புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சி

Report Print Nesan Nesan in அறிக்கை

கரும்புலிகள் தின அஞ்சலி நிகழ்விற்கு அரசினால் தடை விதிக்கப்படவும் இல்லை, அது தொடர்பான எந்தவித சுற்றறிக்கையையும் அரசு வெளியிடவும் இல்லை என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்துள்ளார்.

கடந்த 05.07.2018 அன்று வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற கரும்புலிகள் தின அஞ்சலி நிகழ்வின் பின் தெற்கில் எழுந்த விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள் தொடர்பாக நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும்,

கடந்த 05.07.2018அன்று வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற கரும்புலிகள் தின அஞ்சலி நிகழ்வின் பின் தெற்கில் சில சிங்கள இனவாதிகளால் பரப்பப்படும் இனவாத அறிக்கைகளுக்கு பதிலாக இந்த அறிக்கையைப் பதிவிடுகின்றேன்.

1. கரும்புலிகள் தின அஞ்சலி நிகழ்வுக்கு அரசினால் தடை விதிக்கப்படவும் இல்லை, அது தொடர்பான எந்தவித சுற்றறிக்கையையும் அரசு வெளியிடவும் இல்லை.

2. இந்த நிகழ்வு இரகசியமாக செய்யப்பட்ட ஒன்று இல்லை. பகிரங்கமாகவே பாதுகாப்பு தரப்பினரின் பிரசன்னத்தில் அவர்களின் முன்னிலையிலேயே இடம்பெற்றது.

3. கரும்புலி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்ற எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்தவித பயங்கரவாத செயலும் அல்லது அது தொடர்பான எந்தவித ஊக்குவிப்பும் இடம்பெறவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

4. அரசினால் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி என்ற வகையில் நான் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினேன். இந்த நிகழ்விற்கு பொலிஸார் பாதுகாப்பு தர முன்வந்தனர் என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

5. போராளிகளாக இருந்த நாங்கள் ஜனநாயக ரீதியாக புனர்வாழ்வு பெற்ற அனைத்துப் போராளிகளையும் உள்ளடக்கி ஆயுதப் போராட்டத்தை முற்று முழுதாக நிராகரித்து அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க தேர்தல் திணைக்களத்தில் முன் பதிவு செய்துள்ளேன்.

தற்போது தெற்கில் இருந்து இனவாத கருத்துக்களை பரப்பி சிங்கள மக்களுக்கு தவறான கருத்துக்களை பகிரங்கப்படுத்தி மீண்டும் ஒரு தமிழ் - சிங்கள மோதலை உருவாக்கி தற்போதைய நல்லிணக்க அரசின் செயல் திட்டங்களை நிலைகுலைய வைப்பதும், தங்களின் சுயநல அரசியலுக்காக அரசியல் வங்குரோத்து நிலையை செய்ய நினைக்கும் சரத் பொன்சேகா, விமல் வீரவங்கச போன்றோரை முதலில் கைது செய்து புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்.

நாங்களும் இந்த நாட்டின் குடிமக்கள். இறந்த எம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினால் சட்டமும், ஒழுங்கும் எப்படி சீர்கெடும். நாங்கள் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள். மேலும் மேலும் எங்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை தெற்கில் உள்ள சிங்கள மக்கள்தான் கூற வேண்டும்.

மேலும் மேலும் எங்களை, சட்ட ஒழுங்கை சீர் குலைப்பவர்கள், பயங்கரவாதத்தை உருவாக்குகின்றார்கள் என்று இவர்கள் கூறுவார்களானால் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் திம்பு முதல் ஜெனிவா வரை 22 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பங்கு கொண்ட அனைவருமே பயங்கரவாதிகள் தானே. அவர்களையும் கைது செய்ய வேண்டுமே.

நானும் எனது கட்சியின் உறுப்பினர்களும் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் இடம்பெறக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்பதைப் பதிவு செய்ய விரும்புகின்றேன். அதனால் ஜனநாயக ரீதியான அரசியலில் களமிறங்கியுள்ளோம் என்பதை நாட்டு மக்கள் அனைவருக்கும் பகிரங்கப்படுத்துகின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.