பிரித்தானியாவில் தாயக மக்களுக்காக போராட்டம்! நெகிழ வைத்த சிறுவர்களின் குரல்கள்

Report Print Suky in பிரித்தானியா

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தாயகத்தில் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வலுசேர்க்க பிரித்தானியாவில் நடைபெற்ற அறவழி கவனயீர்ப்புப்போராட்டத்தில் சிறுவர்களும் பதாகைகளை ஏந்தி குரலெழுப்பியமை எல்லோரையும் நெகிழவைத்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசங்கத்தினால் இன்று புலம்பெயர் தமிழர் வாழ்ந்து வரும் நாடெங்கும் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆர்ப்பாட்டமானது பிரித்தானியா கனடா , அமெரிக்கா, சுவிட்சர்லாந்து , பிரான்ஸ், ஜேர்மனி, போன்ற நாடுகளில் ஒரே நேரத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இல.10 டவுனிங் வீதியில் உள்ள பிரிதானிய பிரதமர் வாசல்ஸ்தலத்திற்கு முன்னாள் நேற்று மாலை நடைபெற்ற கவனயீர்ப்புப் அறவழிப் போராட்டத்தில் பெருமாளவிலான மக்கள் உணர்வுடன் பங்கேற்று தாயக உறவுகளை வலுப்படுத்தினர்.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெற்ற இப்போராட்டத்தில் பெருமளவிலான புலம்பெயர்தமிழர்கள் உணர்வுடன் பங்கேற்றனர்.

தாயகத்தில் தீர்வின்றி தொடரும் உறவுகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடு என்று ஒட்டுமொத்த குரலாக இறுதிவரை கோசம் எழுப்பி போராடினர்.

இறுதியில் நாடுகடந்த அரசாங்க பாராளுமன்ற அமைச்சர் மற்றும் உறுப்பினர்களின் கண்டன உரைகளுடன் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவடைந்தது.

இதனிடையே அங்கு தம் பெற்றோர்களுடன் வருகை தந்திருந்த சிறார்களும் உணர்வுடன் உரக்க குரல் எழுப்பி கோசங்களை ஒலித்தமை அங்கிருந்தவர்களை நெகிழவைத்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நடைபெற்ற யுத்ததின் போதும் அதன் பின்னரும் கடத்தப்பட்டும் இலங்கை இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டும் வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகளை விடுவிக்கக்கோரி தாயகம் தழுவிய ரீதியில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறிப்பாக கிளிநொச்சி கந்த சுவாமி கோவிலுக்கு அருகில் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் 100 நாட்களை கடந்தும் இன்றுடன் 114 ஆவது நாளாக தொடர்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.