லண்டனின்: தொழுகையை முடித்துக்கொண்டு வெளியேறியவர்களைக் குறிவைத்து வான் மோதி தாக்குதல்! மே கடும் கண்டனம்

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா

வடக்கு லண்டனின் ஃபின்ஸ்பரி பார்க் பகுதியில் இன்று பாதசாரிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இது போன்ற தருணத்தில் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு தனது அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் மே குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவத்தினால் தான் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்வதாகவும் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் தெரிவித்துள்ளார்.

ஃபின்ஸ்பரி பார்க் பகுதியிலுள்ள பள்ளிவாசலில் இன்று அதிகாலை 12.20 மணியளவில் ரமழான் மாத தொழுகையை முடித்துக்கொண்டு வெளியேறியவர்களைக் குறிவைத்து வான் மோதி தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரமழான் பண்டிகைக்கு முஸ்லிம் மக்கள் தயாராகி வரும் நிலையில், இனவெறியைத் தூண்டும் வகையிலேயே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.