லண்டனில் திருமுருகன் காந்தி மற்றும் கைதுசெய்யப்பட்ட மூவரையும் விடுதலை செய்யக்கோரி போராட்டம்

Report Print Gokulan Gokulan in பிரித்தானியா

திருமுருகன் காந்தி மற்றும் கைது செய்யப்பட்ட மூவரையும் விடுதலை செய்யுமாறு கோரி லண்டனில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் "போராடுவது எங்கள் உரிமை" என்னும் தொனிப்பொருளில் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உட்பட கைது செய்யப்பட்ட தோழர்களை விடுதலை செய்யுமாறும், மோடி மற்றும் ஒன்றிய அரசாங்கங்களின் மாநிலங்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சொலிடாரட்டி அமைப்பினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் புலம்பெயர்ந்து வந்து பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் கலந்து கொண்டு ஆதரவளித்திருந்தனர்.

அரசியல் கைதிகளை விடுதலை செய், குண்டர்கள் சட்டத்தை நீக்கு, பேச்சுரிமையை நசுக்காதே, போராடுவது எமது உரிமை, ஒன்றிய, மாநில அரசே அரசியல் குரல்களை ஒடுக்காதே போன்ற கோஷங்களை போராட்டக்காரர்கள் முன்வைத்தார்கள்.

இதன் போது தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் உறுப்பினர் மதன் நாதன் கருத்து தெரிவிக்கையில்,

மே 17 இயக்கத்தின் தோழர்கள் திருமுருகன் காந்தி , டைசன் , இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோரின் கைதினை கண்டிப்பதோடு இவ்வாறான அரசியல் செயற்பாட்டாளர்களை தேச விரோதிகளாக சித்தரித்து அடக்கி ஒடுக்க முற்படும் அதிகார சக்திகளுக்கு எதிரான குரலாகவே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தோம் என்றார்.

சகல அடக்குறைகளுக்கும் எதிரான ஓர் இயக்கமாகவே தமிழ் சொலிடாரிட்டி செயற்படுவதாகவும் , எமது நலன்களுக்காக எந்த அதிகார அடக்குமுறை சக்திகளோடும் தமிழ் சொலிடாரிட்டி இணைத்து செயற்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.