பிரித்தானியாவில் நாடுகடத்தலை எதிர்நோக்கிய இலங்கை மாணவியின் சாதனை!

Report Print Vethu Vethu in பிரித்தானியா

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்நோக்கிய நிலையில், இலங்கை மாணவி சிரோமினி சற்குணராஜா தனது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.

பிரித்தானியாவில் Bangor பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்ந்திருந்த சிரோமினி முதல்தரத்தில் சித்தியடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மாணவி சிரோமினி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவிருந்த நிலையில் அவருக்கு மீண்டும் கல்வி தொடர்வதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது.

இந்த நிலையில் அந்த மாணவி பல்கலைக்கழக படிப்பை முடித்த பின் முதல் வகுப்பு பட்டம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரோமினி சற்குணராஜா என்ற இலங்கைப் பெண் பிரித்தானியாவின் Bangor பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மின்னணு பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும் அவருக்கு கிடைத்த ஆதரவு காரணமாக 11வது மணி நேரத்தில் அவர் நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பித்த நிலையில் பட்டப்படிப்பை தொடர வாய்ப்பு கிடைத்தது.

கடந்த பெப்ரவரி மாதம் சிரோமினி மற்றும் அவரது தாயாரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்து, இரு நாட்களுக்கு தனிமையில் சிறையில் வைத்தனர்.

அதன் பின்னர் Bedfordshire பகுதியில் அமைந்துள்ள Yarl's Wood குடிவரவு தடுப்பு மையத்திற்கு அவர்கள் மாற்றப்பட்டனர்.

சிரோமினி பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கு 3 மாதங்கள் உள்ள நிலையில், அதனை நிறைவு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் அவரின் நாடு கடத்தலை தடுக்க வலுவான மக்கள் ஆதரவு கிடைத்தது. குடிவரவு அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிராக 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் அவரது நாடு கடத்தல் தடுக்கப்பட்டு அங்கு மீண்டும் தனது பட்டப்படிப்பை தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டார்.

அதற்கமைய வெற்றிகரமாக அந்த மாணவி தனது பட்டப்படிப்பை முதல் தரத்தில் நிறைவு செய்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்கள் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கு உதவிய அனைவருக்கும் தனது நன்றியை ஷிரோமினி தெரிவித்துள்ளார்.

"அது ஒரு சவாலான நேரமாக இருந்தது, ஆனால் நல்வாழ்த்துக்களினால் நான் மகிழ்ச்சியடைந்தேன். என்னை சுற்றியிருந்த சமூகம் குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.

நான் Bangor பல்கலைக்கழகத்தில் எனது மின்னணு பொறியியல் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்தமை மற்றும் முதல் தரத்தில் சித்தியடைந்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

அடுத்த வாரம் நடைபெறும் எனது பட்டப்படிப்பு விழாவை கொண்டாடுவது குறித்து நான் கவனம் செலுத்துகிறேன், வேலைவாய்ப்பு சந்தையில் Bangor பல்கலைக்கழகத்தில் நான் பெற்று கொண்ட பாடத்திட்டத்தின் மூலம் நான் பெற்றுள்ள திறன்களையும் அறிவையும் பயன்படுத்துவதை நான் எதிர்பார்க்கிறேன்... என சிரோமினி குறிப்பிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு சிரோமினி மற்றும் அவரது தாயார் பிரித்தானியாவுக்கு சென்றனர். பிரித்தானியாவுக்கு சென்ற சிரோமினி அவரது தந்தையின் விசாவில் அங்கு தங்கிருந்த நிலையில், 2011ம் ஆண்டு தந்தை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.