அவுஸ்திரேலிய அரசின் பதிலுக்காக காத்திருக்கும் இந்தோனேசியா கப்பலில் உள்ள 254 இலங்கை அகதிகளும், சர்வதேச அரசுகளின் போக்கும்
[ செவ்வாய்க்கிழமை, 01 டிசெம்பர் 2009, 08:19.42 AM GMT +05:30 ]
அண்மையில் அவுஸ்திரேலியா சென்றுகொண்டிருந்த வேளை இந்தோனேசிய கடற்படையினரால் சர்வதேச கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டு மெராக் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 254 தமிழ் அகதிகள் மீது அவுஸ்திரேலியா அரசாங்கம் காட்டுகின்ற பாராமுகம் மிகவும் கொடூரமானது. அவர்கள் தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது்-
சுமார் மூன்று தசாப்த காலமாக தாய்நாட்டில் இடம்பெறும் இனரீதியான வன்முறைகள் காரணமாக இலங்கைத் தமிழ்மக்கள் பல்வேறு நாடுகளுக்கும் அகதித்தஞ்சம் புகுந்து கொண்டிருக்கின்றார்கள். இதில் பலமக்கள் அகதி தஞ்சம் மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்ற வரலாற்று படலங்களும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
2002 ம் ஆண்டு இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் மிக அதிகமான மக்கள் திருப்பி அனுப்பபட்டார்கள். இதுமட்டுமல்லாது தாமாகவே தமது அகதி தஞ்ச கோரிக்கையை நிராகரித்து விட்டு நிரந்தர சமாதானம் திரும்பி விட்டதாக நினைத்து நாடு திரும்பியவர்களும் உண்டு. இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களின் நிலை என்னவாகிற்று என்பதை சர்வதேச சமூகம் கண்கொண்டு பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
இறுதியாக நடைபெற்ற யுத்தத்தில் அகப்பட்ட மக்களில் இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களும் அடங்குவர். படுகொலை செய்யப்பட்டும் ஊனமுற்றும் நிலபுலங்களை இழந்தும் சொல்லொணா துயரங்களை அவர்கள் அனுபவித்து கொண்டிருக்கின்றார்கள்
இளைஞர்கள் எவ்வித காரணங்களும் இல்லாமல் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறைப்பிடிக்கப்படுகிறார்கள். இதற்கான முழுபொறுப்பையும் சர்வதேச சமூகமே ஏற்றக் கொள்ள வேண்டும். அரச கட்டுபாட்டு பகுதிகளில் வாழ்ந்தவர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படும் நிலை யுத்தம் முடிவடைந்ததாக இலங்கை அரசு பிரகடனபடுத்திய பின்னரும் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அடக்கு முறைகளை தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாது ஊடகங்களுக்கும் பிரயோகிக்கும் இலங்கை அரசு நீpதியான நியாயமான ஆட்சியினை அங்கு நடத்தி வருவதாக செய்திகளை உலகுக்கு தெரிவித்து வருகிறது. அண்மையில் இடம் பெற்ற யுத்தத்தின் மூலம் விடிவிக்கப்பட்டதாக இலங்கை அரசு கூறிவரும் 250000 மேற்பட்ட மக்கள் முகாம்களில் சிறைப்பிடிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு சிறைபிடிக்கப்பட்டவர்களில் சிலர் இலங்கை அரசின் அரசியல் நிகழ்வு காரணமாக அவர்களது பிரதேசங்களுக்கு மீள்குடியேற்றப்பட்டு வருகின்றார்கள். மீள்குடியேற்றப்பட்டதாக கூறப்படும் மக்களில் பலர் அவர்களது பிரதேசங்களுக்கு அழைத்து செல்லப்பட்டவுடனேயே காணாமல் போகும் சம்பவங்களும் இடம் பெற்று வருகின்றன.
இவ்வாறான இலங்கை அரசின் நாடகங்களை சர்வதேச அரசுகள் அதிலும் குறிப்பாக அகதி தஞ்சம் வழங்கும் நாடுகள் மக்களுக்கான நிரந்தர தீர்வாக தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பது ஆழ்ந்த கருத்து.
இலங்கையின் முன்னாள் ஐனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க அவர்களின் ஆட்சிகாலத்தின் போது இந்தியாவில் வாழ்ந்த இலங்கை தமிழ் அகதிகளை திருப்பி அழைத்தமையின் விளைவு அம்மக்களை சுமூகமான வாழ்க்கைக்கு இட்டுச் சென்றதா என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இலங்கை தமிழ் மக்களுக்கு யுத்தம் மட்டும் தான் அங்குள்ள பிரதான பிரச்சினை என்று கூறிவிடவும் முடியாது இலங்கை அரசின் துணை இராணுவ குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சிலரின் அட்டூழியங்களால் மக்கள் மிகவும் துன்பபட்டு கொண்டே இருக்கின்றார்கள்.
ஆட்கடத்தல், கப்பம் கோருதல் சொத்துக்களை பிடுங்குதல் மற்றும் இளைஞர் யுவதிகளை வலுக்கட்டாயமாக தமது செயற்பாடுகளுக்கு இணைத்து கொள்ளல் மறுக்கும் பட்சத்தில் கொலை செய்தல் போன்றன தமிழ் மக்களுக்கெதிரான மிகவும் கொடூரமான உள்நாட்டு சவால்களாகும். வாழ்வாதாரங்கள் அற்ற நிலையிலேயே வாழ்வு தேடி அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப் படுகிறார்கள்.
இங்கு இன்னொரு விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டிய கடப்பாடு சர்வதேசத்திற்கு இருக்கின்றது. இந்தியா மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற ஐ.நா வின் அகதிகள் சாசனத்தில் கையொப்பமிடாத நாடுகளில் தஞ்சமடைந்தோர் அங்கு எவ்வித உரிமைகளும் அற்ற ஜடங்களாகவே பல ஆண்டுகாலமாக வாழ்ந்து வருகின்றார்கள். நடமாடும் சுதந்திரம் அவர்களுக்கு கிடையாது. சிறுவர்களின் கல்வி எதிர்காலம் என்பன மிகவும் முக்கியப்படுத்தப்பட வேண்டிய விடயமாகும். இந் நாடுகளில் எமது மக்கள் நிரந்தர அகதிகளாக்கப்படுகின்றார்கள்.
அண்மைக்காலமாக இலங்கைத் தமிழர் வள்ளங்கள் மூலம் வெளியேறுதல் அதிகரித்துள்ளது இதற்கான காரணம் அங்கு இறுதியாக நடைப்பெற்ற யுத்தம் பலரின் நடைமுறை வாழ்வை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. அவர்களது உறவுகள் கொடூரமாக அழிக்கப்பட்டுள்ளார்கள். வீடுகள் வாழ் நிலங்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தமது சொந்த தேசத்தில் வாழ்பவர்கள் உளரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். அக்கொடூரத்திலிருந்து விடுபட்டு ஓர் நிரந்தர சாந்தியான வாழ்க்கையை தேடியே அவர்கள் செல்கிறார்கள்.
அண்மையில் நடைபெறவுள்ள ஐனாதிபதி தேர்தல் காரணமாக பல அரசியல் நாடகங்களை இலங்கை அரசு நாடாத்தி வருகின்றது. கடந்த 60 வருடகாலமாக பாராளுமன்றத்தில் இயற்றப்படுகின்ற சட்டங்கள் எவையும் நடைமுறைக்கு வராத பட்சத்தில் புதிதாக இயற்றப்படுகின்ற சட்டங்கள் சிறுபான்மை மக்களுக்கு தீர்வை வழங்கிவிடும் என்பது பெரும்பான்மை சிங்கள மக்களின் மனங்களிலிருந்து உருவாக்கப்படாலேயன்றி நடைமுறை சாத்தியமற்றது.
சிங்கள மக்களின் மனங்களிலிருந்து சமாதானத்தை வரவழைக்க கூடிய அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வருவதென்பதும் கடினமானது. தமிழ் அகதிகளுக்கான சுமூகமான வாழ்வை தாம் வழங்குவதாகவும் வெளிநாடுகளில் தஞ்சம் புகுவோரை மீண்டும் நாட்டுக்கு வருவாறும் அழைப்பு விடுத்திருக்கின்றது. இதற்கு முந்தைய தேர்தல் வேட்பாளர்களும் பொய்பிரசாரங்களை வழங்கி தமிழ் மக்களை ஏமாற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்க ஆணை வழங்கிய ஐனாதிபதியும் அதற்கு உடந்தையாக இருந்த இராணுவ தளபதியும் தேர்தல் களத்தில் குதித்துள்ளமை வன்முறையான ஆட்சியையே எமது மக்கள் மீது மீண்டும் திணிக்கும் என்பது யதார்த்தமானது.
இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலே வாழ்கின்ற மக்களுக்கு நிரந்தரமான தீர்வுகள் எதையும் வழங்கப்படாதவிடத்து கொடூர வாழ்விலிருந்து விடுபட நாட்டை விட்டு வெளியேறிய மக்களை இலங்கை அரசு மீண்டும் நாட்டுக்கு அழைப்பது அதற்கு சர்வதேசம் துணைபோவது என்பது மிகவும் கொடூரமானது.
தற்போது அரச கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் மக்களை நியாயமான தீர்வுகளை வழங்கி அவர்களது நிரந்தர நிம்மதியான சமாதான வாழ்வை உறுதிபடுத்தி காட்ட வேண்டியது இலங்கை அரசின் முதற் கடமை அதன் பின்னர் அவ்வாறு அம்மக்கள் சுதந்திரமாக வாழ்வது உறுதிபடுத்தப்படுமிடத்து தாமாகவே தமது தாய் தேசத்தை எமது மக்கள் வந்தடைவார்கள். இது ஓரிருவருடங்களில் நடைபெறுமென்பது கேள்விக்குறியானது.
மூன்று வருட புரிந்துணர்வு ஒப்பந்தம் உலக அரங்கில் நிரந்தர சமாதானமாக கணிப்பிடப்பட்டு அது ஒரு கொடூர யுத்தத்திற்கு அடித்தளமிட்டமையை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசின் பொய் பிரச்சாரங்களுக்கு தமிழ் மக்களை பலி கொடுக்க கூடாதென்பது எமது வேண்டுகோள்.
வெறுமனே வருமானத்தை மட்டும் கருத்திற்கொண்டு மக்கள் புலம்பெயர்ந்து செல்கிறார்கள் என்பது இலங்கை அரசினால் எமது மக்களை தனது கொடூர ஆட்சிக்குள் அகப்படவைப்பதற்கான யுக்தியாகவே கணிப்பிடபட வேண்டியது. தமது பிள்ளைகளின் எதிர்காலம் அவர்தம் சமாதான வாழ்வு போன்றவையே அவர்களது பிரதான நோக்கமாகும்.
இலங்கை நிலைமைகளை பார்வையிட அங்கு செல்கின்ற வெளிநாட்டு பிரதிநிதிகளை வன்முறைகள் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்ல மறுத்து இலங்கை அரசினால் கண்துடைப்பிற்காக அபிவிருத்தி செய்யப்பட்ட சில இடங்களுக்கு மட்டுமே அவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சர்வதேச நாட்டு பிரதிநிதிகள் அரசினது துணை இல்லாமல் தன்னிச்சையாக சென்று தமிழ் மக்களுக்கெதிராக வன்முறைகள் நடைபெறும் இடங்களை பார்வையிட்டு உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானது.
அண்மையில் அவுஸ்திரேலியா சென்றுகொண்டிருந்த வேளை இந்தோனேசிய கடற்படையினரால் சர்வதேச கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டு மெராக் துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 254 தமிழ் அகதிகள் மீது அவுஸ்திரேலியா அரசாங்கம் காட்டுகின்ற பாராமுகம் மிகவும் கொடூரமானது.
குழந்தைகள், சிறுவர்கள், கற்பிணிப்பெண்கள் வயோதிபர்கள் குடும்பஸ்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் உள்ளிட்டோர் இரண்டு மாதகாலமாக அடிப்படை வசதிகளற்ற மிகச்சிறிய வள்ளத்தில் தமது வாழ்வை கழித்துக்கொண்டு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் பதிலுக்காக காத்திருக்கிறார்கள்.
சொந்த நாட்டிற்கு பலவந்தமாக திருப்பி அனுப்புவதோ இந்தோனேசியாவில் தடுப்புமுகாம்களில் தடுத்துவைப்பதோ மிகக்கொடூரமான மனித உரிமை மீறல் செயற்பாடாகும்.
அவர்களது அவசர நிலையை கருத்திற்கொண்டு அவுஸ்திரேலிய அரசாங்கம் சிறந்த தீர்வினை மிக அவரசமாக வழங்கவேண்டுமென்பதும் சர்வதேசம் அதற்கான அழுத்தத்தை வழங்க வேண்டுமென்பதும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களது வேண்டுகோள்.
வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பும் இலங்கையர்களை ஏமாற்றி பாரியளவு பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்]
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன், பிரான்சின் கடற்கரையான கலையில் இருந்து 115 கிலோமீற்றர் தூரத்தை நடந்து கடந்துள்ளார். [மேலும்]
முன்னாள் இராணுவ தளபதி, ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கையின் சண்டே லீடர் செய்திதாளுக்கு தெரிவித்ததாக கூறப்படும் வெள்ளைக்கொடி தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது [மேலும்]
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு சில இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் உள்ளது என்று தமிழ் நாட்டு ஊடகவியலாளர் கூறிய விடயம் பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அந்த இரகசிய புலனாய்வு நடவடிக்கைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது பலருக்கும் வெறும் ஊகமாகவே இருக்கின்றது. [மேலும்]