ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக அந்த அமைப்பு கடைப்பிடித்து வரும் கொள்கை காரணமாக அமைப்பின் பிரதிநிதிகளை அழைப்பதில்லை என்று அரசு உத்தேசித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
எதிர்வரும் தேர்தலில் கண்காணிப்பாளராக ஐரோப்பிய ஒன்றியத்தை இலங்கை ஏற்றுக்கொள்ள மறுக்குமானால் அது பாரிய பிரச்சினையை தோற்றுவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகிறது. இந்தநிலையில் எதிர்வரும் தேர்தல்களின் போது ஐரோப்பிய ஒன்றியத்தை கண்காணிப்பாளராக அனுமதிப்பதில்லை என்ற நகர்வு அரசாங்கத்தரப்பில் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது உண்மையான தகவலாக இருக்குமானால், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவில் அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் உள்ளுர் தேர்தல் கண்காணிப்பாளர்களும் இது தொடர்பில் தமது கவனத்தை செலுத்தியுள்ளனர். இது பாரிய தேர்தல் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எனவே, தேர்தல்கள் ஆணையாளர் உரிய நேரத்தில் உரிய முடிவை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை, 1989 ஆம் ஆண்டுக்கு பின்னர் வன்னியில் உள்ள வாக்காளர்கள் தமது பதிவுகளை புதுப்பித்துக் கொள்ளாமையால், இந்தமுறை தேர்தல் வாக்களிப்பின் போது நடைமுறைப் பிரச்சினைகள் எதிர்நோக்கப்படும் என தேர்தல்கள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அதாவது பெரும்பாலான இளைஞர் யுவதிகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் போகக்கூடிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |