சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக அறிக்கையொன்றை வழங்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்ததையடுத்து பெண்கள், சிறுவர்களுக்கான பொலிஸ் பிரிவு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான அறிக்கையொன்றை தான் பொலிஸாரிடம் கோரியிருப்பதாக திங்கட்கிழமை ஜனாதிபதி அறிவித்திருந்தார். அத்துடன் சிறுவர்களுக்கு எதிரான சகலவிதமான துஷ்பிரயோகங்களுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
பல்வேறுபட்ட முறைப்பாடுகள் தொடர்பாக அமைச்சரவையின் கவனத்திற்கு தான் கொண்டு சென்றிருந்ததாகவும் தனிப்பட்ட முறையிலும் பல முறைப்பாடுகளை தான் பெற்றிருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். நாட்டிலிருந்து சிறுவர் துஷ்பிரயோகத்தை இல்லாமல் செய்வதற்கான சகல முயற்சிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.
கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாசப் படங்களைத் தடை செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை பொலிஸார் நாடியுள்ளனர். இந்த தொலைபேசிகளில் இலவசமாக ஆபாசப் பட இணையத்தளங்களை பார்க்கக் கூடியதாக இருப்பதால் துஷ்பிரயோகம் மற்றும் வல்லுறவு சம்பவங்கள் அதிகரிப்பதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களில் இளம்பராயத்தினர் கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாசப் படங்களைப் பார்க்கும் விடயங்கள்அதிகரித்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.இதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பொலிஸாருக்கு உதவுவதற்கு கையடக்க தொலைபேசி இயக்குநர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். |