ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் தன்னை முன் விடுதலை செய்யக் கோரி நளினி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எலிப்பு தர்மராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு முன்பு இன்று விசாரணக்கு வந்தது.
நளினி விடுதலைத் தொடர்பாக சிறைக் கைதிகள் ஆலோசனைக் குழு தமிழக அரசிற்கு அளித்த அறிக்கையை சீல் இடப்பட்ட உரையில் வைத்து அரசு வழக்கறிஞர் பி.எஸ். இராமன் நீதிபதிகளிடம் வழங்கினார்.
நளினி விடுதலை தொடர்பாக ஆலோசனைக் குழு அளித்த அறிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க இரண்டு வார அவகாசம் அளிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.
இவ்வழக்கு ஒரு தனி மனிதரின் வாழ்க்கை தொடர்பானது, ஆகவே வழக்கு விசாரணையை தாமதப்படுத்தாமல் விரைவில் முடிவு செய்து நீதிமன்றத்திற்குத் தெரிவிக்குமாறு கூறிய நீதிபதிகள் விசாரணையை இம்மாதம் 29 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
அன்று அரசு தனது முடிவை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கும் என்பதால் நளினி விடுதலை தொடர்பான ஒரு முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |