இடைநடுவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்கர்கள் பயணித்த ஹெலிகொப்டர்

Report Print Aasim in காலநிலை

கடும் மழை காரணமாக பயணப்பாதை தெளிவாகப் புலப்படாத நிலையில் ஹெலிகொப்டர் ஒன்று மீரிகம பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

நான்கு அமெரிக்கர்கள் கண்டியில் இருந்து தனியார் ஹெலிகொப்டர் ஒன்றில் ரத்மலானைக்கு வருகை தந்து கொண்டிருந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

பயணப்பாதை தெளிவின்மை காரணமாக விமானம் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக் கருதி விமானிகள் ஹெலிகொப்டரை மீரிகம, லோலுவாகொட பிரதேசத்தில் உள்ள மைதானமொன்றில் அவசரமாகத் தரையிறக்கியுள்ளனர்.

பின்னர் அதில் பயணித்த நான்கு அமெரிக்கர்களும் தரை மார்க்கமாக கொழும்புக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை அவ்விடத்துக்கு வருகை தந்த மீரிகம பொலிஸார் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

அத்துடன் ஹெலிகொப்டர் மற்றும் விமானிகளுக்கான பாதுகாப்பும் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளது.

நாளை காலையில் வானம் தெளிவாகத் தெரியத் தொடங்கிய பின்னர் ஹெலிகொப்டரை ரத்மலானைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.