மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்! மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவசர அறிவிப்பு

Report Print Nesan Nesan in காலநிலை

மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவசர அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்(05) மாவட்ட அரசாங்க அதிபர் திடீர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தார்.

இதன்போது, இந்த அவசர அறிவிப்பை விடுத்துள்ளதுடன், கடற்கரையை அண்டியுள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் தொடர்பு கொண்ட போது, கருத்து தெரிவித்த அவர்,

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருக்கும் காற்றழுத்தம் தழமுக்கமாக மாற்றமடைந்து வருவதனால் தென்கிழக்கு பகுதியை நோக்கி நகர்வதாகவும், அதன்காரணமாக கரையோரத்தில் காற்று மணிக்கு 80 தொடக்கம் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலோரத்தை அண்டியுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தல்கள் பிரதேச செயலாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாரான திடீர் அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் எமது மாவட்ட காரியாலயத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தயார் நிலையில் இருப்பதாகவும், ஆனால் தற்போதைக்கு சூராவளி வீசுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மக்கள் அவதானமாக செயற்படுமாறும் குறிப்பாக கடலுக்குச் செல்லும் மீனவர்கள் 5, 6, 7 ஆம் ஆகிய திகதிகளில் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அனர்த்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் நாளையும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.