இலங்கையின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்?

Report Print Sujitha Sri in காலநிலை

இலங்கையின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாட்டை விட்டு விலகி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் சீரற்ற காலநிலையில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும்,

இலங்கையின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கொழும்பிலிருந்து 550 கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.

இது நாட்டை விட்டு விலகி அராபிய கடற்பரப்பை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதனால் நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வவுனியா, மன்னார், புத்தளம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சில இடங்களில் (75 மி.மீ அளவான) ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வட மத்திய மாகாணத்திலும், காலி மாவட்டத்திலும் (மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான) ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.