தமிழர் திருநாள் தைத்திருநாள்

Report Print Thileepan Thileepan in கட்டுரை
1356Shares

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதமாக தை மாதம் விளங்குகின்றது. தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகவும் இந்த நாள் ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு விழாக்களில் தைத்திருநாள் என்பது முக்கியமான ஒரு விழாவாகும். தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப் பெரும் விழா.

மகரத்திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியஸ் மற்றும் மேலைத்தேச நாடுகள் என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

மலேசியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் பொங்கல் பண்டிகையன்று அரசு விடுமுறையும் கூட விடுகிறார்கள்.

மதங்களைக் கடந்து அதிகமான தமிழ் மக்களால் இது கொண்டாடப்படுகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக சூரிய உதயத்தின் போது வீட்டு முற்றத்தில் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து வழிபடுகின்ற நாள் ஆகும்.

தமிழர் திருநாள் தைப் பொங்கல், அறுவடைத் திருநாள் என கூறப்படும் பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை ஆகும். பொங்கல் என்பதற்கு சாப்பிடும் பொங்கல் என்று பொருள் அல்ல. பொங்கிப் பெருகி வருவது என்று பொருள்.

பொங்கல் பண்டிகையின் தோற்றம் எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை. இந்திர விழா என்ற பெயரில் நல்ல மழை பொழியவும் நாடு செழிக்கவும் இந்திரனை ஆயர்கள் வழிபட்டு வந்தனர்.

ஆயர்கள் பக்தியோடும் பயத்தோடும் இந்திரனை வழிபட்டனர். ஆனால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அறிவுரைப்படி ஆயர்களுக்கும் அவர் தம் ஆநிரைகளுக்கும் வளங்கள் தரும் கோவர்த்தன மலைக்கு ஆயர்கள் மரியாதை செய்தனர்.

இதனால் கோபமுற்ற இந்திரன் புயலாலும் மழையாலும் ஆயர்களை துன்புறுத்தினான். கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் ஸ்ரீ கிருஷ்ணர் காத்தருளினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாய் பிடித்து இந்திரனிடமிருந்து ஆயர்களையும் அவர் தம் ஆநிரைகளையும் காத்த நாளே சூரிய நாராயண பூஜையாகும்.

இந்திரன் தன் தவறை உணர்ந்து கண்ணனிடம் தன்னையும் மக்கள் வழிபட வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால் தைப் பொங்கலுக்கு முதல்நாள் போகி பண்டிகை எனப்படும் இந்திர வழிபாட்டை ஆயர்கள் கொண்டாடினர்.

தை முதல் நாள் சூரிய பகவானை சூரியநாராயணராக பாவித்து வழிபட்டனர். அதன் மறுநாள் தங்களின் மாட்டுப் பொங்கல் எனப்படும் ஆநிரைகளுக்கு விழா எடுத்து தங்களின் உணவுகளை அவைகளுக்கு படைத்தும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு எனப்படும் காளைகளுடன் விளையாடியும் விழாவை கொண்டாடினர்.

இதுவே நாளடைவில் மூன்று தினங்கள் கொண்டாடும் பொங்கல் கொண்டாட்டமாக மாறியது எனக் கூறப்படுகிறது. சோழர் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது.

அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில் அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள்.

பொங்கல் பண்டிகை மொத்தம் 3 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகி பண்டிகை. அடுத்த நாள் பொங்கலிடும் நாள். 3 வது நாள் மாட்டுப் பொங்கல்.

மக்கு காலமெல்லாம் கை கொடுத்து உதவும் மழை, சூரியன், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகள் ஆகியவற்றுக்கு நன்றி கூறும் நல்ல வாய்ப்பாக இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் இந்த மூன்று தினங்களும் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆனால் இலங்கையில் தைப்பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் ஆகிய இரு தினங்களும் சிறப்பாக கொண்டப்படடு வருகிறது.

இந்தியாவில் பொங்கல் திருநாளின் முதல் நிகழ்வான போகி பண்டிகையன்று அதிகாலையில் அனைவரும் எழுந்து குளித்து வீட்டில் உள்ள தேவையற்ற, பழையை பொருட்களை வீட்டின் முன்பு வைத்து தீயிட்டு கொளுத்துவார்கள்.

அல்லவை அழிந்து நல்லவை வரட்டும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற மொழிக்கேற்ப போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் தினம் தமிழர் வாழும் அனைத்து பகுதிகளிலும் விசேஷமானது.

தை மாதப் பிறப்பு நாள் இது. சர்க்கரைப் பொங்கல் என்று இந்த பண்டிகைக்குப் பெயர். புதுப்பானை எடுத்து, மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டி, புதுப் பாலில், புது அரிசியிட்டு, வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள். வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும்.

அரிசி நன்கு சமைந்து, பொங்கி வரும் போது குலவையிட்டும், பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்ற குரலோடு பொங்கல் பானையை இறக்க வேண்டும்.

நன்கு பொங்கி வந்தால் அந்த ஆண்டு முழுவதும் நல்ல வளமும், நலமும் நிலவும் என்பது ஐதீகம். மறுநாள் மாட்டுப் பொங்கல். கிராமங்கள் தோறும் மாட்டுப் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படும்.

வீடுகள் புதுப் பூச்சு காணும். மாடுகள், பசுக்களின் கொம்புகளுக்கு புது வர்ணம் பூசி நன்கு குளிப்பாட்டி, அவற்றை அலங்காரம் செய்து மாட்டுப் பொங்கல் தினத்தின் போது படையலிட்டு வழிபாடு செய்வார்கள்.

பின்னர் மாடுகளுக்கு பொங்கலும் அளிக்கப்படும். ஆண்டெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இது கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தின் போது மாடுகளுக்கு ஒரு வேலையும் வழங்கமாட்டார்கள். கழுத்தில் புது மணி கட்டி, கொம்புகளை சீவி விட்டு சுதந்திரமாக திரிய விடுவார்கள். இதன் போது இந்தியாவில் ஜல்லிக்கட்டு நிகழ்வும் இடம்பெறுவது வழக்கம்.

இப்படியாக பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது தவிர, நான்காவது நாள் காணும் பொங்கலாக இந்தியாவின் வட மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது.

அதாவது உற்றார், உறவினர், நண்பர்களைக் கண்டு வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பரிமாறிக் கொள்ளும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. சுற்றுலாத் தலங்களுக்கும் பொழுது போக்குமிடங்களுக்கும் இந்த நாளில் போவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் கனி காணும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின் முக்கிய அம்சங்களாக கரும்பு, இனிப்புப் பொங்கல் என்பன விளங்குகின்றது. இவை இல்லாமல் பொங்கல் நிறைவடையாது.

கரும்புகளுக்கு பொங்கல் பண்டிகையின் போதுதான் செம கிராக்கி. வியாபாரமும் ஒரு தடவை களை கட்டும். இவ்வாறாக இந்த பொங்கல் பண்டிகை உழவர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் எல்லோருக்கும் ஒரு விசேடமான பண்டிகையே.

அந்த வகையில் 2017 ஆம் ஆண்டின் பொங்கல் தினம் இன்றாகும். பட்ட துன்பங்கள் மறைந்து தமிழர்கள் பட்டு வரும் பல்வேறு அவதிகள் ஒழிந்து, இந்த ஆண்டில் எல்லா வளமும், நலமும் பெற்று அமைதியுடன் வாழ சூரியக் கடவுளைப் பிரார்த்திப்போம்.

Comments