போதைக்கு அடிமையாகும் இன்றைய இளைஞர் யுவதிகள் : பின்னணியில் நடப்பது என்ன?

Report Print Nivetha in கட்டுரை
296Shares

எமது நாடானது பல தசாப்த காலமாக யுத்தம், ஆட்சி மாற்றம், இனம் மொழியென பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து இன்று அவைகளில் இருந்து விடுப்பட்டு நல்லாட்சி ஆட்சியின் கீழ் அபிவிருத்தி பாதையை நோக்கி செல்வதனைக் காணக்கூடியதாக உள்ளது.

இவ் நல்லாட்சியினை பெரும்பாலனோர் பாராட்டுகின்றனர் சிலர் தூட்டுகின்றனர். இவ்வாறு அரசாங்கமும் சரி பொதுமக்களும் சரி அரசினைப்பற்றி விமர்சித்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இதனால் தங்களது குடும்பங்களைப் பற்றியோ அதில் வாழும் உறுப்பினர்கள் பற்றியோ யோசிப்பது குறைந்து வருகின்றது.

இதனால் இன்று எமது நாடானது, நாட்டின் அபிவிருத்தி மற்றொரு நாடுகளின் பொருளாதாரத்துடன் எமது நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் காட்டிலும் எதிர்க்காலத்தில் இதைவிட பாரியதொரு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாகப்போவது உறுதி அதுதான் எமது இளைஞர் யுவதிகளின் போதைப்பொருள் பயன்பாடு, இத்தகைய போதைப்பொருள் பயன்பாட்டினால் இளைஞர் யுவதிகள் எதிர்க்காலத்தில் எமது நாட்டினை முற்றாக இருளில் மூழ்கிவிட செய்யப்போகின்றார்களா? என்ற அச்சம் எழுந்துள்ளது.

இன்று எமது இளைஞர் யுவதிகள் என்ன செய்கின்றார்கள் அவர்களது தேவைப்பாடு என்ன என்பது தொடர்பில் கேட்டறிவதற்கு யாரும் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனால் எமது இளைஞர் சமுதாயமானது பல சீர்க்கேடுகளுக்கு உள்ளாகி வாழ்க்கையை வீணாக்கி கொண்டு இருக்கின்றார்கள். அதில் அறிந்தும் அறியாமலும் என பல தீயபழக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அவைகள் பற்றி நோக்குவோமானால்,சிறு வயதில் திருமணம் செய்தல், மதுப்பாணம் அருந்துதல். புகைப்பிடித்தல் என்பவைகளைக் குறிப்பிடலாம். ஆனால் இவைகளையும் தாண்டி இன்று சில இளைஞர் யுவதிகள் பலமடங்கு உயர்ந்துவிட்டார்கள்.

அதுதான் கஞ்சா விற்பனையில் ஈடுப்படுவதாகும். உண்மையாக இவர்கள் கல்விதுறையிலோ கண்டுப்பிடிப்புக்களிலேயோ ஈடுப்பட்டு உயர்ந்திருந்தால் பெருமைப்பட்டு இருக்கலாம்.

இந்த கஞ்சா விற்பனையில் அதிகமாக ஈடப்படுபவர்கள் சிறுவயதான இளைஞர் யுவதிகள் என்பது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

உண்மையாக இன்று எமது நாட்டில் பத்திரிக்கை ஒன்றினை வாசிக்க எடுத்தோமே ஆனால் அதில் ஒரு செய்தியேனும் போதைப்பொருள் சம்மந்தமான செய்தியாக இருப்பதனை காணக்கூடியதாக உள்ளது.

உண்மையில் எமது நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கேரளா கஞ்சாவின் விற்பனையானது அதிகரித்து வருகின்றது. கடந்த வருடத்திலிருந்து இன்று வரை கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றுவதனை செய்திகள் வாயிலாக அறிந்துக்கொள்ளக் கூடியதாக உள்ளது.

இக் கேரளா கஞ்சாவினை கேரள இளைஞர்கள் முகாமிட்டு கஞ்சாவினை பயிரிட்டு கோடைக்காலங்களில் அறுவடை செய்து உலர்ந்த கஞ்சாவினை விற்பனை செய்து தனது வாழ்க்கை தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துக்கொள்வதாக கூறப்படுகின்றது.

இதேபோன்று எமது இளைஞர் யுவதிகளும் வாழ்க்கையில் தனக்கு தேவையான தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக இத்தகைய தொழிலில் ஈடுப்படுவதற்கு ஆரம்பித்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளது .

இத்தகைய கேரளா கஞ்சாவானது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடல் மார்க்கத்தின் வாயிலாக கொண்டுவரப்பட்டு நாட்டில் எல்லா பகுதிகளுக்கும் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

இந்தவகையில் அண்மையில் அத்துமீறி மீன்பிடித்துறையில் ஈடுப்பட்ட இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்ய குறித்த மீனவப் படகுகளில் 6 கிலோ கேரளா கஞ்சா காணப்பட்டதாகவும் குறித்த மீனவர்கள் கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்டுள்ளதாக கடற்படைப்பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு எமது நாட்டுக்குள் பல்வேறு வழிகளில் போதைப்பொருள் வருவதனைக் காணக்கூடியதாக உள்ளது.

இந்தவகையில் கொழும்பு.நுவரெலியா,மட்டக்களப்பு,மன்னார்,வவுனியா போன்ற நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கேரளா கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதில் தமிழ் மாவட்டங்களும் முதலிடம் வைப்பதாக கூறப்படுகின்றது.

இதில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில் கடந்த காலங்களில் அதிகளவான கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதோர் விடயமாகும். சாதாரணமாக 82 கிலோ கிராம் கேரளா கஞ்சாவானது 123 இலட்சம் பெறுமதியானதாகும்.

இத்தகைய போதைப்பொருளில் ஈடுப்படுபவர்கள் 24, 26, 28 வயதுடைய இளைஞர் யுவதிகளாக காணப்படுகின்றார்கள். இதில் ஒரு சிலர் கஞ்சா கலந்த இனிப்பு பண்டங்களை சுற்றுலா மற்றும் தூரபிரயாணம் மேற்கொள்பவர்களிடம் விற்பனை செய்வதாகவும் பொலிஸாரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்காலத்திற்கு முதுகெழும்பாக இருக்கவேண்டி இவர்கள் இவ்வாறான தொழிலில் ஈடுபடுவது வருந்துவதற்குரிய விடயமாகும்.

உண்மையில் இன்றைய இளைஞர் யுவதிகளில் சிலர் மாத்திரமே கல்வி கற்பதில் ஆர்வம் உடையவர்களாகவும் பெரும்பாலானவர்கள் ஆர்வம் அற்றவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.

இதற்கு காரணம் வறுமை, படிப்பதற்கான சூழ்நிலைகள், சிறுவயதிலேயே தகாதவர்களின் உறவு, பணம் போன்றவைகள் முக்கிய காரணமாக அமைகின்றது.

அதாவது வாழ்வாதாரமே கேள்வி குறியாக இருக்கும்போது இத்தகைய தொழிலின் வாயிலாக அதிகளவு பணத்தினை தேடிவிட முடியும் என்றதன் அடிப்படையில் குறித்த தொழில் தவறு என்று தெரிந்தும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுப்படுகின்றார்கள்.

இவ்வாறு எமது இளைய சமூகம் செல்லுமானால் எதிர்க்காலத்தில் எமது நாடானது ஆசியாவிலேயே போதைப்பொருளில் முதல் இடத்தை வகிக்கும் ஒரு நாடாக மாறும் என்பது திண்ணம்.

நாம் அனைவரும் இப்படியான சம்பவத்தினை படித்துவிட்டு அதை கொஞ்ச நேரத்தில் மறந்துவிடுவோம். ஆதலால் இச்சம்பவம் தங்களின் குடும்பங்களில் இடம்பெற்றாலும் தெரிய போவதில்லை.

காரணம் யாருமே இந்த நவீன உலகில் குடும்பத்தின் மீது அக்கறை செலுத்துவது இல்லை. கொஞ்ச நேரம் அமர்ந்து பேசுவதில்லை பிள்ளைகள் என்ன செய்கின்றார்கள் என்று தேடுவதும் இல்லை இது சரி ,பிழை என்று சொல்லிக்கொடுப்பதும் இல்லை.

ஆதலால் அவர்கள் தங்கள் விருப்பப்படி வாழ ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் இவர்களுக்கு பகுத்தறியும் பண்பு அற்றவர்களாக காணப்படுகின்றார்கள்ஆதலால் எமது இளைஞர் யுவதிகளை இனியாவது சரியான பாதையில் இட்டு சென்று நல்வழிப்படுத்தும் பொறுப்பும் கடமையும் நமது ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.

இந்தவகையில் அவர்களை பாதுகாக்கும் பொருட்டு சில விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

பாடசாலை அல்லது உங்களது பிரதேசங்களில் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும் உதாரணமாக உங்களுடைய பிரதேசத்தில் நூலகம் அமைத்தல், கல்வி நடவடிக்கைகளின் பின்னர் வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்குதல், கலை, கலாசார நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி இளைஞர் யுவதிகளை ஈடப்பட செய்தல்.

அரசியல் தலைவர்கள் இளைஞர் யுவதிகளுக்கு சரியான துறையினை பெற்றுக்கொடுக்ககூடிய உண்மையான நபர்களை தெரிவு செய்யுங்கள்.

இதன் வாயிலாக எமது இளைஞர் சமுதாயத்தினை போதைப்பொருள் பாவனையிலிருந்து பாதுகாத்து எதிர்க்காலத்தில் பொறியியலாளர், வைத்தியர், என பல்வேறு துறைகளிலும் எம்மால் மாற்றத்தினைக் கொண்டு வரமுடியும்.

மேலும் இவ்வாறான தவறான தொழிலில் ஈடுப்படுபவர்களை காட்டிக்கொடுப்பதற்கு ஒருபோதும் தயங்க வேண்டாம். சிலவேளை உங்களது குடும்பத்தினைக்கூட கொன்றுவிடக்கூடிய ஆற்றல் படைத்ததுதான் இந்தப் போதைப்பொருள். போதைப்பொருள் எமக்கு மட்டுமல்ல வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்பதை மறவாதீர்கள்..

Comments