மஹிந்தவின் ராஜதந்திர காய்நகர்த்தல்! சதியில் சிக்குவாரா மைத்திரி? பின்னணியில் ஏற்படப்போகும் பாரிய ஆபத்து..?

Report Print Nivetha in கட்டுரை
200Shares

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி மக்கள் புரட்சியின் மூலம், ராஜபக்ஸ அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டு நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

தற்போது அதனை சீர் குழைக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். மூன்றாம் ஆண்டில் கால்பதித்துள்ள நல்லாட்சி அரசு, சவால்களுக்கும், சர்ச்சைகளுக்கும் நடுவில் தான், எஞ்சியுள்ள நான்கு ஆண்டுகளையும் எதிர்கொள்ளப் போகின்றது.

கூட்டு எதிர் கட்சியினால் உருவாக்கப்பட்டுள்ள “பொது ஜன பெரமுன”வின் முதலாவது கூட்டமும் எதிர்வரும் 27ஆம் திகதி நு‍கே‎கொடையில் நடைபெறவுள்ளது.

இதன் பின்னணியில் நல்லாட்சிக்கு பாரிய ஆபத்து உண்டு என்பது உண்மையே..

தற்போது அதன் தலைவராக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான ஜீ.எல்.பீரிஸ் இருந்தாலும் அங்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் செல்வாக்குதான் அதிகமாக காணப்படுகின்றது.

வெளிப்படையாகவே முழு நாடும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கோருவதாகவும் எதிர்வரும் தேர்தல்களில் அவரது தலைமையில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போது அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிப்படைந்திருப்பதாகவும், கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறிவருகின்றனர்.

நுகேகொடையில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.

குறித்த கூட்டத்தை ஏற்பாடு செய்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவுடன் நேற்று நடத்திய கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டிய தேவை மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான குழுவுக்கு இல்லை என்றும் மக்களை வீதிக்கு இறக்கி இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் எனவும் பவித்ரா வன்னியாராச்சி கூறியுள்ளார்.

ஆட்சியை கைப்பற்றுவேன் என சூழுரைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அதனை நிறைவேற்ற தனது உச்சகட்ட பலத்தை காட்டுவார் என்றும் கூறப்படுகின்றது.

மகிந்த ராஜபக்ஸ அதிகாரத்தை கைப்பற்றுவதாக வெளிப்படையாக கூறிய பின்னர் நடைபெறும் முதலாவது கூட்டமும் இது என்பது சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

இவ்வாறு அடுத்தடுத்து அதிரடியாக அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்ளும் மகிந்தவின் செயற்பாட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கமைய சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவம் செய்து ஆட்சியில் இருக்கும் சிலர் தமது பதவிகளை இராஜினாமா செய்யும் நடவடிக்கைகளும் கூட தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் பிரதி அமைச்சர் ஒருவர் அண்மையில் பதவி விலகியுள்ளார். இந்த நிலையில் இன்னும் சிலர் பதவி விலகுவதற்கு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கடந்த காலங்களை விடவும் சமகால அரசாங்கம் பொருளாதார ரீதியாக பல பின்னடைவுகளை கண்டுள்ளன. அளவுக்கு அதிகமான வரி அறவீடு, பொருட்களின் விலை அதிகரிப்பு என்பன மக்களை விசனம் கொள்ள வைத்துள்ளது.

இதனால் நல்லாட்சி அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனை சாதகமாக பயனபடுத்தி மைத்திரி அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் மஹிந்த செயற்பட்டு வருகிறார்.

பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்படப்போகும் பாரிய ஆபத்தில் இருந்து நல்லாட்சியை காப்பாற்ற எவ்வாறான மாற்று நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.!

Comments