கேப்பாப்புலவிலிருந்து ஒரு மனக்குமுறல்! புலம்பெயர் தமிழ் மக்களின் செவிகளுக்கு!

Report Print S.P. Thas S.P. Thas in கட்டுரை
76Shares

ஈழ விடுதலைப் போராட்டத்தில் புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்பு அளப்பரியது.

நீண்ட நெடிய அரசியல் போராட்டத்தில், அகிம்சைக்கும் ஆயுதப் போராட்டத்திற்கும் புலம்பெயர் தமிழ் மக்கள் செய்யும் தியாகமும், ஆதரவும் என்றும் வரலாற்றில் இடம்பிடிக்கும்.

சொந்த நாட்டில் வாழ முடியாத சூழலில் அந்நிய நாட்டை நோக்கிப் புறப்பட்டவர்களின் வலி என்றும் நெஞ்சில் வடுவாய் பதிந்திருக்கும்.

இன்று அதே வலியையும், வேதனையையும் கேப்பாப்புலவு மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றோடு அவர்கள் போராட்ட களத்தில் குதித்து 23 நாட்களாகிறது. இதுவரை எந்தத் தீர்வும் கிட்டவில்லை.

வாக்குறுதிகளை நம்பி ஏமார்ந்து போனவர்கள், இன்று நிரந்தரத் தீர்வு கிட்டும் வரையிலும் போராடுவோம் என்கிற உறுதியோடு இருக்கிறார்கள்.

குடும்பமாக போராடும் அம்மக்களுக்கு மெல்ல வடக்கு கிழக்கு உட்பட அனைத்து மக்களின் ஆதரவு பெருகத் தொடங்குகிறது.

இன்றளவில் தென்னிலங்கை மக்களும் தங்கள் ஆதரவை தெரிவித்தது மட்டுமல்லாது யாழ்ப்பாணத்தில் நடந்த கவனயீர்ப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

சொந்த நிலத்தை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் நிலையில், அதை தங்களிடம் வழங்குமாறு கோரும் அவர்களின் மனநிலையை சிங்கள மக்களும் நன்குணர்ந்திருக்கிறார்கள்.

இது இலங்கையில் புதிதாக ஏற்பட்ட மாற்றம் தான். எங்கள் நிலத்தை எங்களிடம் தாருங்கள். சொந்த மண்ணில், கஞ்சியோ தண்ணியோ குடித்து உயிர்வாழ்கிறோம் என்பது தான் அவர்களின் கோரிக்கை.

மாறாக, அரசாங்கத்திடம் இப்போதைக்கு அவர்கள் எதுவும் கேட்கவில்லை. எங்கள் நிலத்தில் நாங்களும் எங்கள் வருங்காலச் சந்ததியினரும் வாழ வேண்டும் என்ற அவர்களின் ஏக்கம் தட்டிக்கழிக்கவல்லது.

உரிமைகளுக்காகவும், உறவுகளுக்காகவும் ஆங்காங்கே இப்பொழுது போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இளைஞர்களும், மாணவர்களும் அறவழிப் போராட்டத்தில் கலந்து கொள்வதிலும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்களும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்தியிருக்கிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவையும் கேப்பாப்புலவு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

இலங்கை அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்களை இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கும், நாட்டின் அபிவிருத்தியிலும் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், புலம்பெயர்வாழ் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் சமாதான சூழ்நிலையில் நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அதில் தமிழ் மக்களின் பங்களிப்பையும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

ஆனால், வடக்கின் முக்கிய பொருளாதாரத்தின் மையமாக விளங்குவது விவசாயம். ஆனால், விவசாய நிலங்கள் அனைத்தும் இராணுவ கட்டுப்பாட்டில், முட்கம்பி வேலிக்குள் பற்றைகளாலும், இராணுவ சப்பாத்துக்களாலும் தரிசு நிலங்களாக இருக்கின்றன.

இந்நிலையில் புலம்பெயர் தமிழ் மக்களின் பங்களிப்பை நாடும் இலங்கை அரசாங்கம், பொருளாதாரத்தில் பெரும் பங்களிப்பைச் செய்யும் விவசாய நிலங்களை விடுவிப்பதில் அக்கறை காட்டவில்லை.

நாட்டில் பொருளாதாரத்தை வளப்படுத்தும் முயற்சிகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபடவேண்டும். அதற்காக கையகப்படுத்தியிருக்கும் கேப்பாப்புலவு நிலம் உட்பட வடக்கின் அனைத்துப் பகுதிகளும் விடுவித்து மக்களின் பயன்பாட்டிற்காக அனுமதிக்க வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் இங்கு வரவேண்டும் என அக்கறையும், பாசமும் கொள்ளும் அரசாங்கம் இங்கிருப்பவர்களின் காணிகளை விடுவித்து அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் இது குறித்து, அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும்.

வெறுமனே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் பேச வேண்டும் என்பதை கடந்து, இதில் தமிழ் மக்களின் ஆதரவு மிக முக்கியமாகிறது.

ஏனெனில் இலங்கை அரசாங்கம் தன்னை நல்லிணக்க, சமாதான அரசாக சர்வதேசத்திற்கு காட்ட வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறது. அதற்கு புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவையும் நாடுகிறது.

இந்தச் சூழலை வெளிநாட்டில் இருக்கும் தமிழ் மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சில இடங்களில் சில விட்டுக்கொடுப்புக்கள் செய்வதில் தவறுகள் இருக்காது.

நீண்ட நாட்களாக போராடும் மக்களின் விடிவிற்காக அரசாங்கத்தோடு பேச வேண்டும். சிங்கள மக்களே கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கும் பொழுது சிங்கள அரசாங்கம் அதை தட்டிக்கழிக்க முடியாது.

இன்று நடக்கும் இந்தப் போராட்டம் கேப்பாப்புலவு மக்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டதல்ல. மாறாக, தமிழர்களின் ஒட்டுமொத்த நிலத்தை மீட்கும் போராட்டமாகவும் இது காட்சியளிக்கிறது.

இன்றைய இந்தச் சூழலை தமிழ் மக்கள் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றுள்ள அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்களோடு ஒரு நல்லுறவை பேண எத்தனிக்கிறது. அதை சாதகமாக்கி செய்ய வேண்டிய சில விடயங்களை செயற்படுத்த முயற்சிக்க வேண்டும்.

முடிந்தால் இது குறித்து ஒரு குழுவமைத்து, பிரதமரோடும், ஜனாதிபதி, வெளிவிவாகார அமைச்சோடும் பேச்சுவார்த்தைகள் நடத்த முயற்சி செய்வது அதி உத்தமமாகும்.

முயற்சி செய்து பார்ப்பதனால் எதுவும் கைவிட்டுப் போகப்போவது இல்லை. முயற்சி செய்வோம். சாதகமாக அமைந்தால் வெற்றி, பாதகமானால் படிப்பினை.

அது அரசாங்கத்திற்கு விடப்படும் எச்சரிக்கை மட்டுமல்ல, சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டும் ஒரு தடயமாகவும் மாறும்.

இதற்கிடையில், அடுத்த மாதம் 4ம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணம் செல்கிறார். அடுத்த மாதம் மனிதவுரிமை ஆணைக்குழுவில் இலங்கை பிரச்சினை குறித்து விவாதம் இடம்பெறவுள்ளன.

இவற்றைக் கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும். நிலமிழந்தவர்களுக்குத் தான் சொந்த இருப்பிடத்தின், நிலத்தின் அருமை தெரியும். வலிகளை உணரமுடியும்.

இங்கே மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், தென்னிலங்கை மக்கள் யாவரும் கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவாக களமிறங்கி விட்டார்கள்.

புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு பெருமளவில் இருந்தாலும், அவர்கள் இன்னொரு வடிவத்திலும் களமிறங்க வேண்டும்.

இது இன்று வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல, வருங்காலச் சந்ததியினருக்குமானது.

Comments