சிறிலங்காவின் போர்களம் ஐ.நா மனித உரிமை சபைக்கு நகர்த்தபட்டுள்ளது - ச.வி. கிருபாகரன்

Report Print S.V Kirubaharan S.V Kirubaharan in கட்டுரை
சிறிலங்காவின் போர்களம் ஐ.நா மனித உரிமை சபைக்கு நகர்த்தபட்டுள்ளது - ச.வி. கிருபாகரன்
285Shares

இறுதியாக ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை சபையின் 34ஆவது கூட்டத்தொடர், சிறிலங்கா மீது 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேலும் இரு வருடகாலம் கொடுக்கப்பட்டுள்ளது.

அங்கு முக்கிய புள்ளிகள் ராஜதந்திரிகள் பிரசன்னமாகியிருந்த கூட்டங்கள் சந்திப்புக்களில், இரு வருடம் அல்லா மேலும் இருபது வருடங்கள் கொடுத்தாலும், சிறிலங்காவின் தற்போதைய அரசு அல்லா, எந்த அரசும் இவ் தீர்மானத்தின் முக்கிய சாரமான சர்வதேச நீதிபதிகள், வழக்கு தொடுனர்கள், வழங்கறிஞர்கள் அடங்கிய போர் கிறீமினல் விசாரணையை மேற்கொள்ள போவதில்லை என்பதை திட்டவட்டமாக நான் மட்டுமல்லாது அங்கு வந்து இருந்த வேறு சில தமிழர்களும் கூறியிருந்தார்கள்.

2015ஆம் ஆண்டு செப்டெம்பர் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொழுதே இதனது சாரங்களை சிறிலங்கா ஒருபொழுதும் நடைமுறைப்படுத்தப்படுத்த போவதில்லை என்பதை அன்றே கூறியிருந்தோம்.

அங்கு நடைபெற்ற ஓர் கூட்டத்தில், “தற்போதைய அரசாங்கம் ஓர் சிறுபான்மை அரசாங்கம், இதனால் எந்த அரசியல் யாப்பை புதிதாகவோ, மாற்றங்கள் செய்தோ பாரளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது” என்பதை எடுத்து கூறிய வேளையில், சிறிலங்கா அரச தரப்பினர் தாம் இன்று வரை நிறைவேற்றிய வரவு செலவு திட்டங்களிற்கு குறைந்தது 165 வாக்குகள் கிடைத்தாக கூறியிருந்தார்கள்.

மிகவும் வேடிக்கையான விடயம் என்னவெனில், வரவு செலவு திட்டத்திற்கான வாக்கெடுப்பையும், அரசியல் யாப்பிற்கான வாக்கெடுப்பிற்கான வாக்கெடுப்பையும் சமனாக இவ் அரசாங்கம் பார்ப்பது.

அடுத்த வரவு செலவு திட்டத்தில் - முன்னாள் ஜனதிபதிகள், பிரதமர்கள், அமைச்சர்கள் போன்றோரது ஊதியம், இளைபாறிய பணம், விசேட சலுகைகளை பெரிதாக கூட்டினால், மகிந்த ராஜபக்ச அணியினரும் அதற்கு வாக்களிப்பார்கள் என்பது இவர்களிற்கு தெரியாத விடயம் அல்ல. இப்படியாக கதைகளை கூறி சர்வதேசத்தை ஏமாற்றுகிறார்கள்.

அங்கு அமெரிக்கா, பிரித்தானியா, மொற்ரநீகிரோ, மசிடோனியா ஆகிய நாடுகளினால் கூட்டப்பட்ட வேறு ஒரு கூட்டத்தில், “1948ம் ஆண்டு முதல் தமிழர்களை ஏமாற்றி மடையர்கள் ஆக்கிய சிறிலங்கா அரசுகள், தற்பொழுது உங்களை ஏமாற்ற ஆரம்பித்து விட்டார்களென” கூறியிருந்தேன்.

கடந்த 34வது கூட்டத் தொடரில் நடைபெற்ற பல விடயங்களை, ஐ.நா விற்கு உள்ளீருந்தோரும், வெளியிலிருந்தவர்களும் அறிந்திருக்கவில்லை.

தமிழர் பரப்புரை

தமிழர்களது பரப்புரைவேலைகளை பொறுத்வரையில், 60-70 பேர் வரையில் உலகின் பல பாகங்களிலிருந்து அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

ஐ.நா.வில் உண்மையாக நேர்மையாக வேலை திட்டங்களை நகர்த்தும் அமைப்புக்கள், ஒரு சிலருடன் தமது வேலை திட்டங்களை மிகவும் சாதுர்யமாகவும் நேர்த்தியாகவும் மேற்கொண்டனர்.

இங்கு ஐ.நா.வில் எண்ணிக்கை (Quntity) முக்கியம் அல்ல, தரம் (Quality) தான் முக்கியம் என்பது நிருபிக்கப்பட்டது. அதாவது, ஐ.நா.விற்கு தமிழர் தரபில் பெரும் எண்ணிக்கையில் நாங்களும் ஐ.நா.மனித உரிமை சபைக்கு சென்றிருந்தோம் என்பதற்கு மேலாக, தரமான ஒரு சிலர் அங்கு சமூகமளித்தால் வேலை திட்டங்களை நகர்த்த முடியும் என்பது அங்கு நிருபிக்கப்பட்டது.

இங்கு ஓர் முக்கிய விடயத்தை குறிப்பிட விரும்புகிறேன். தமிழர் அமைப்பு ஒன்று, போர்குற்றவாளிகள் ஜெனிவாவிற்கு வந்தால் கைது செய்வோம் என ஊர் உலகம் எல்லாம் இணைய தளங்களிலும் பத்திரிகைகளில் தம்பட்டம் அடித்துவிட்டு, போர் குற்றவழிகள் ஜெனிவாவிற்கு வந்ததும், மௌனமாகி விட்டார்கள். இச் செயல், அவ் அமைப்பிற்கு மட்டுமல்லா உலகில் உள்ள அத்தனை புலம் பெயர் அமைப்புகளிற்கு பெரும் இழுக்கை சம்பாதித்து கொடுத்துள்ளது.

ஐ.நா.விற்கு வருகை தந்திருந்த தமிழர்களில், தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த தமிழர்களும் உள்ளடங்குவர்.

இதில் கடந்த சில வருடங்களாக தமிழீழ மக்களின் விடயங்களில், ஐ.நா.மனித உரிமை சபையில் பல தரப்பட்ட ஆக்கபூர்வமான உதவிகளை செய்துவருவது, டாக்டர் எஸ் ராமதாஸின் பசுமை தாயகம் என்ற அமைப்பு என்பது குறிப்பிடதக்கது. இதில் விசேடமாக ஐ.நா மனித உரிமை சபையில் டாக்டர் அன்புமணி ராமதாஸின் உரை என்பது மிகவும் பாரட்டுக்குரியது.

இந்தியாவின் முன்னாள் சுகதார அமைச்சார் அன்புமணி ராமதாஸின் உரையை சபையில் கூடியிருந்தோர் மிகவும் அவதானமாக கேட்டிருந்ததை யாவரும் அவதானிக்க கூடியதாகவிருந்தது.

மிகவும் துணிச்சலான உரைகள்

தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த சிலர் உணர்ச்சி எழுச்சி என்ற அடிப்படையில் காணப்பட்டார்களே தவிர, இவர்களால் மனித உரிமை சபையில் எதையும் பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கு உருப்படியாக செய்ய முடியவில்லை.

இவ் உணர்ச்சி பொங்கு தமிழ் நாட்டவர்கள், ஜெனீவா வந்து ஐ.நா வில் எழுச்சியாக காணப்படுவதற்கு மேலாக, இவர்களால் தமிழ் நாட்டு மாநில அரசையோ அல்லது இந்தியா அரசையோ பாதிக்கப்பட்ட தமிழீழ மக்களிற்கு நீதி கிடைக்கும் வகையில் மாற்ற முடியவில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

ஐ.நா.மனித உரிமை சபையில் சிறிலங்கா விடயத்தில் ஆற்றப்பட்ட உரைகளில், தற்போதைய சிறிலங்கா அரசு உருவாவதற்காக உழைத்த நிமல்கா பெர்ணான்டோ, கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆகிய இருவர்களின் உரைகள் மிகவும் துணிகரமானவை.

இவர்கள் இருவரும் தற்போதைய அரசுடன் நட்பாக இருந்த பொழுதும். இருவரும் சிறிலங்காவின் தற்போதைய நிலைகளை எந்த ஒளிப்பு மறைப்பின்றி வெளிப்படைய தற்போதைய அரசை சர்வதேச அரங்கில் குறை கூறினார்கள்.

இவர்கள் இருவரும் தற்போதைய அரசின் அரசியல் தீர்வு, பொறுப்பு கூறல் ஆகிய விடயங்களில் எந்தவித நம்பக தன்மைகளும் காணக்கூடியதாக இல்லையென கூறினார்கள்.

மனித உரிமை சபையில் துணிச்சலாக உரையாற்றிய நிமல்கா பெர்ணன்டோ, ஜெனிவாவிலிருந்து கொழும்பு சென்றடைந்ததும், இவர் உண்மைகளையும் யாதார்த்தங்களை ஐ.நா வில் கூறியதற்கு எதிராக கொழும்பில் அவரது வீட்டிற்கு முன்பாக சில பெண்கள் ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

அத்துடன் சிங்கள தீவிரவாதிகளினால் நடத்தப்படும் பத்திரிகைகள், முகநூல்களில் மிகவும் கெவலமான முறையில் வஞ்சிக்கப்படுகின்றார்.

இந்த நிலையில், யாவரிடமும் எழும் கேள்வி என்னவெனில், தற்பொழுது சிறிலங்காவில் ஆட்சி செய்பவர் யார்? முன்னாள் ஜனதிபதி ராஜபக்சாவும் அவரது ஆட்களுமா? இல்லையேல் ஜனதிபதி சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுமா?

மனித உரிமை சபையில் போர் குற்றவாளிகள்

கடந்த 34ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா.விற்குள் இருந்தோரும், வெளியிலிருந்தவர்களும் அறிந்திருக்காத விடயங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இளைபாறிய கடற்படை தளபதி சரத் விஜயசேகரா, இவரது கையாட்களான கீர்த்தி வர்ணகுலசுரிய, மட்டக்களப்பை சோர்ந்த போலபொடி ஜெகதீஸ்வரன் ஆகியோருடன், ஐக்கிய அரபு நாட்டில் சார்ஜா என்னும் இடத்தை சார்ந்த ஓர் சிங்கள வர்த்தகரும் இம்முறை மனித உரிமை சபைக்கு வருகை தந்திருந்தனர்.

இவ் 34ஆவது கூட்டத்தொடருக்கு இவர்கள் யாவரையும் அழைத்து வந்தவர், சஞ்சே எனப்படும் பங்காளதேசத்தை சார்ந்த ஓர் முன்னாள் புத்தபிக்கு. ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவில் பங்கு கொள்வதற்காக, சஞ்சே என்பவர் தொன்நூறுகளில் ஜெனிவா வருகை தந்திருந்தார். காலப்போக்கில், தனது புத்தபிக்குவின் உடைகளை களைந்து, திருமணம் செய்து, குடும்பம் பிள்ளைகளுடன் ஜெனீவாவில் வசித்து வருகிறார்.

மனித உரிமை சபை வேளைகளில், இந்தியாவின் மனித உரிமை மீறல்களை கண்டிப்பதற்காக, இந்தியாவிலிருந்து பாதிக்கப்பட்ட சிலரை ஜெனீவா வரவழைத்து, இந்தியாவிற்கு எதிராக உரையாற்ற வைப்பதையே சஞ்சே தொழிலாக கொண்டுள்ளார்.

இவரது செயற்பாடுகளை ஆராயுமிடத்து, இவர் முற்று முழுதாக பாக்கிஸ்தானின் புலனாய்வு பிரிவின் பக்க பலத்துடனேயே ஐ.நா வில் செயற்பாடுவது தெளிவாகிறது. இதேவேளை, சிறிலங்காவிற்கு எதிரான தமிழரது செயற்பாடுகளை முழுதாக முடக்குவதற்காகவும் சஞ்சே மனித உரிமை சபையில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் பின்ணனிகளை கொண்ட ஒருவரின் துணையுடன், கடந்த மனித உரிமை சபைக்கு சிறிலங்காவின் போர்குற்றவாளிகளின் வருகை, சிறிலங்காவின் புலனாய்விற்கும், பாகிஸ்தானின் புலனாய்விற்கும் இடையில் காணப்படும் நெருங்கிய உறவுகள் நிரூபிக்கப்படுவதுடன், பாகிஸ்தானின் புலனாய்விற்கும் சிறிலங்காவின் கூட்டு எதிர்கட்சியினருடனான மசவாசான உறவுகள் தெளிவாகின்றது.

நான்கு தூண் திட்டம்

எது என்னவானாலும், தெற்கில் உள்ள முன்னாள் ஆட்சியாளர்களாதும், தற்போதைய ஆட்சியாளர்களதும் எண்ணங்கள் செயற்பாடுகளை பிரதிபலிப்பதற்காகவே, போர் குற்றவாளிகள் ஜெனீவாவில் எதிர் பரப்புரை வேலைகள் என்ற பெயரில் மனித உரிமை சபையில் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

தெற்கின் அரசியல்வாதிகளின் நான்கு தூண் திட்டங்களான - பௌத்தமயம், குடியேற்றம், சிங்களமயம், இராணுவமயம் ஆகியவை தமிழர்களது தாயாகபூமியான வடக்கு - கிழக்கில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் வரை, சர்வதேச சமூதாயத்தை திசைதிருப்பி, கால நேரத்தை இழுதடிப்பதற்காகவே இவை யாவும் நடைபெறுகின்றனா.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறையை சேர்ந்த சரத் விஜயசேகரா இளைபாறிய கடற்படை தளபதி என்பதற்கு மேலாக ஓர் தீவிர பௌத்த வாதி.

இவர் மகிந்த ராஜபக்சாவிற்கு நெருங்கியவர் என்பதுடன், இவருடைய துணைவியார் திருமதி கோத்தபாய ராஜபக்சவின் உறவினர். இவர் கடந்த அரசில், உதவி அமைச்சாராக கடமை புரிந்தவர்.

சரத் விஜயசேகரவின் கையாட்களில் ஒருவரான கீர்த்தி வர்ணகுலசூரிய ஓர் தீவிர பௌத்த வாதி. இனத்துவேசங்களை கக்கும் தீவிர சிங்கள பத்திரிகையின் பந்தி எழுத்தாளர். ஐ.நா மனித உரிமை சபையில் இவர் மீது எண்ணுகணக்கற்ற முறைபாடுகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிங்கள பௌத்தவாதிகளுடன், கைகோர்த்து நிற்பவர் பிரபல அங்கத்தவரான மட்டக்களப்பை சேர்ந்த்த போலபொடி ஜெகதிஸ்வரன். இவர் கடமையாற்றாத குழுவே கிடையாது. புளோட்டில் ஆரம்பமாகி அதனை தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எப் பின் ராசிக்குழுவில் இருக்கும் வேளையிலும், அதன் பின்னரும் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்களை கிழக்கு மாகணத்தில் கொன்று குவித்தவர்.

ராசிக்குழுவின் பின்னர், ஈ.பி.டி.பிலும் அதனை தொடர்ந்து, கருணா பிள்ளையான் குழுவில் இருந்த வேளையில், பல முக்கிய புள்ளிகளின் படுகொலைகளின் முக்கிய பங்காளி.

இவரது உடல்பாதிக்கப்பட்ட காரணத்தினால் தற்பொழுது, சக்கர நாற்காலியில் நடமாடுகிறார்.

மனித உரிமை சபைக்கு இவர் வருகை தந்திருந்த வேளையில், இவர் என்னை தன் அருகே வருமாறு அழைத்தார். நான் இவ் ஒட்டுக்குழு நபரை இனம் கண்ட காரணத்தினால் தவிர்ந்து கொண்டேன்.

ஐக்கிய அரபு நாட்டில் சார்ஜா என்னும் இடத்திலிருந்து மனித உரிமை சபைக்கு வருகை தந்த சிங்களவர், அங்கு மகிந்த ராஜபக்சவின் வர்த்தகங்களை கவனிப்பவராக நம்பப்படுகிறது.

பாகிஸ்தான்

இவ் மாபெரும் போர்குற்றவாளிகள், பாகிஸ்தானின் துணையுடன் தமது எதிர் பரப்புரைகளை கவனிப்பதற்காக களம் இறக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களிடம் பலரால் கேட்கப்பட்ட பல போர்குற்றம் பற்றிய வினக்களிற்கு இவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. தாம் பயங்கரவாதிகளை அழித்தாக மட்டும் வீரம் பேசினார்கள்.

இவர்களின் வருகையை தொடர்ந்து மேலும் பல முன்னாள் படையினரும், ஓட்டு குழு உறுப்பினரும் தமது போர்குற்றங்களை நியாயப்படுத்துவதற்காக எதிர்வரும் மனித உரிமை சபையின் கூட்ட தொடர்களில் பங்குகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனா.

கடந்த 33ஆம் கூட்டத் தொடர், அதாவது 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத் தொடரிற்கு, பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் அரச சார்பற்ற அமைப்பான ‘உலக முஸ்லிம் காங்கிரஸ்’ அன்றும் என்றும், இந்தியாவிற்கு எதிரான பரப்புரைகளையே மேற்கொள்பவர்கள். ஆனால் தற்பொழுது வழமைக்கு மாறாக யாழ்பாணத்து முஸ்லீம்களை தம்முடன் இணைத்து பரப்புரைகளை ஆரம்பித்துள்ளனர் என்பது வியப்பிற்குரியது.

இருபத்தி ஐந்து வருடங்களிற்கு முன் முஸ்லிம்கள் யாழ்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட வேளையில், ஐ.நா.வில் மௌனம்காத்த உலக முஸ்லிம் காங்கிரஸ், ஏதற்காக திடீரென யாழ்பாணத்து முஸ்லீம்களை பரப்புரையில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளார்கள் என்ற கேள்வி இங்கு எழுகிறது.

யதார்த்தம் என்னவெனில், யாழ்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களிற்கு உலக ஆதரவு உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. மிக அண்மை காலமாக, இந்திய மீதான உலக முஸ்லிம் காங்கிரஸின் பரப்புரைகள் பலமிழந்து வருவதை நிவர்த்தி செய்வதற்காகவே, யாழ்பாணத்து முஸ்லிம்களின் அனுதபங்கள் கொள்வது போல் பாசங்கு செய்கிறது உலக முஸ்லிம் காங்கிரஸ். இவர்களுடனான நட்பு யாழ்பாணத்து முஸ்லிம்களிற்கு நிச்சயம் பாரிய பதிப்பை ஏற்படுத்தும்.

இந்தியா

பிராந்திய வல்லரசான இந்தியா இன்று சிறிலங்கா விடயத்தில் செல்லா காசாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது. சிறிலங்காவின் தற்போதைய அரசு, சீனா பாகிஸ்தானுடன் கொண்டுள்ள நெருங்கிய உறவினால், இந்தியா ஒன்றுமே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கை வாழ் தமிழீழ மக்களிற்கு மட்டுமல்லாது, மலைநாட்டு தமிழர்களிற்கும் பலவிதப்பட்ட வாக்குறுதிகளை கொடுத்துள்ள இந்தியாவின் வேண்டுகோள்களை சிறிலங்கா அரசுகள் அலட்சியம் செய்வதை யாவரும் அவதானிக்க முடிகிறது.

எது என்னவானாலும், தமிழீழ மக்களிற்கு 1987ஆம் ஆண்டு யூலை மாதம் இலங்கை-இந்தியா ஒப்பந்தம் மூலம் ஓர் நியாயமான அரசியல் தீர்வை பெற்று கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்த இந்தியாவின் படைகளினால் மிகவும் மோசமாக வடக்கு கிழக்கு வாழ் மக்களிற்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்திய இந்தியா, இன்று இந்த மக்களிற்கு எதை பெற்று கொடுக்கவுள்ளார்கள்? தமிழீழ மக்களின் கவல் அரண்களாக விளங்கிய தமிழீழ விடுதலை புலிகள், இந்தியாவே அழித்தார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு இந்தியா இன்றுவரை எந்தவித பதிலையும் கூறவில்லை.

கடந்த ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடர் கூறும் செய்தி என்னவெனில், இலங்கைதீவில் நடைபெற்ற போர்களம், தற்பொழுது ஐ.நா மனித உரிமை சபைக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதே.

ஒருபுறம் புலம் பெயர் வாழ் அமைப்புக்கள், போர்குற்ற விசாரணைக்கும், அரசியல் தீர்விற்கும் சர்வதேசத்தை வேண்டி நிற்கிறார்கள். அதேவேளை, முன்னாள் சிறிலங்கா படையினர், ஒட்டுக்குழு உறுப்பினர் தாம் பயங்கரவாத அமைப்பையே அழித்தோம் எனவும், மறுபுறம் யாழ்பாணத்து முஸ்லிம்கள் தமக்கான நியாயத்தை தேடும் இடமாக ஐ.நா.மனித உரிமை சபை எதிர்காலத்தில் விளங்கவுள்ளது.

இவை மனித உரிமை சபைக்கு உள்ளும் வெளியிலும், இரத்த களரிகளை ஏற்படுத்துமா என்ற வினாவிற்கு யார் பதில் கூறுவார்கள்?

எது என்னவானாலும், முன்னாள் படையினர், ஒட்டுக்குழு உறுப்பினர் யாழ்பாணத்து முஸ்லிம்களின் பரப்புரைகளிற்கு, முன்னாள் இன்னாள் அரச தரப்பினர்களின் ஆதரவும், பாகிஸ்தானின் ஆதரவும் உள்ளது என்பது தெளிவாகியுள்ளது.

அச்சம் என்பது மடைமையடா - அச்சாமை தமிழர் உடமையடா,

ஆறிலும் சாவும் நாலிலும் சாவும் - தமிழர் தாயகம் காப்பது கடமையடா!

ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

Comments