குறை நிறைகளை ஆராயாத பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களால் நிறைவேற்றப்படுவது என்ன?

Report Print Reeron Reeron in கட்டுரை

எமது நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களும், பிரதேச ரீதியாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இக்கூட்டங்களை தலைமை தாங்குவதற்கென ஒரு தலைமைத்துவம் இன்றி ஒன்றுக்கு மேற்பட்ட இணைத்தலைவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

தற்போது ஆளும் கட்சி, எதிர்க்கட்சி போன்றவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றவர்களும், மாகாணத்தின் முதலமைச்சர் மற்றும் ஆட்சியில் உள்ள கட்சியின் இணைப்பாளர்களும் இணைத் தலைவர்களாக தலைமை தாங்குகின்றனர்.

இக்கூட்டம் மாவட்ட ரீதியாக நடைபெறுகின்ற போது, அதில் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஒரு சில பொது அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொள்கின்றனர்.

அதேபோன்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் குறித்த பிரதேசத்தினைச் சேர்ந்த அரச திணைக்களங்களின் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பிரதேச அமைப்புக்கள் ஒரு சிலவற்றின் பிரதிநிதிகள் போன்றோர்க்கு பிரதேச செயலகங்களினால் கடிதங்கள் அனுப்பப்பட்டு அவ்வாறானவர்கள் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திற்கு சமூகம் கொடுக்கின்றனர்.

இதன் பிற்பாடு பிரமுகர்கள் புடை சூழ ஆரம்பமாகிறது பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டங்கள்.

பிரதேசத்துக்குப் பிரதேசம் நடைபெற்று வரும் இக்கூட்டத்தினால் குறித்த பிரதேச மக்கள் அடையும் நன்மைகள் என்ன? என்பது தற்காலத்தில் பல மக்களிடத்தில் வினாவாக எழுந்திருக்கின்ற ஒரு விடயமாகும்.

அரசியல்வாதிகள் ஒருசிலர், ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உரியமுறையில் அமுல்படுத்தப்படுவதில்லை என்ற கருத்தினையும் கூறிவருகின்றமையும் அவதானிக்கதக்கது.

மக்களுக்கு ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் தொடர்பில் வினா எழுவதற்கு காரணங்களாக, அக்கூட்டத்தில் பேசப்படும் குறித்த விடயங்கள் பற்றி தீர்க்கமான முடிவுகள் இன்மை, நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அமுலுக்கு வராமை போன்றவைகளுடன் மேலும் சில காரணங்களினாலும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் வெறுமனே மக்களை ஏமாற்றும் செயலாகவே அமைந்து விடுவதாக எண்ணுகின்றனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களினால் சாதிக்கப் பெற்றவைகள் எவையென்றால் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு மட்டுமே குறிப்பிட முடியும்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அரசாங்க அதிபர், இணைத் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் முன்புறம் அமர்ந்திருக்க, அதே போன்று பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பிரதேச செயலாளர், இணைத் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் தமக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் முன்புறம் அமர்ந்திருக்க, கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட அதிகாரிகள் அவர்களை நோக்கி அமர்ந்திருப்பார்.

அழைக்கப்பட்ட அதிகாரிகள் ஒவ்வொருவராக, அவர்களது திணைக்களங்கள் சார்ந்து, தமக்குள்ள குறைகள் என்ன? ஏதும் பிரச்சினைகள் இருக்கின்றதா? என்ற வினா இணைத்தலைவர்களால் எழுப்பப்பட்டு அவை இல்லை என்றால், அடுத்த திணைக்களம் சார்ந்த அதிகாரியிடம் அதே வினா தொடுக்கப்படுகின்றது.

குறைபாடுகள் பற்றி கூறுகின்ற போது குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள திணைக்களங்களினால் நிறைவேற்ற முடியுமாக இருந்தால் நிறைவேற்றுமாறு கூறப்படுகின்றது.

இல்லையாயின் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாகவும், சில சந்தர்ப்பங்களில் முடிவின்றியே தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.

அதே போன்று மேலும் சில திணைக்களம் சார்ந்த விடயங்கள் குறித்து ஆராயாமல் தீர்மானங்கள் எடுக்கப்படாமல் அவை குறித்து பெரிதுபடுத்தப்படாமலேயே கூட்டங்கள் நிறைவு பெறுகின்றமை மன வேதனைக்குரியது.

ஒவ்வொரு கூட்டம் இடம்பெறும் போதும் அங்கு கலந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்படாமலும் இருந்ததில்லை.

அதிகாரிகளும் தம்மிடம் வினா எழுப்பும் போது, அதற்கான பதிலை அளித்துவிட்டால் போதும் என்ற மன நிலையும் ஒரு சிலரிடத்தில் இருக்கத்தான் செய்கின்றது.

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் முன்வைக்கும் விடயங்களின் மூலமாக தமக்கு சரியான தீர்வு கிடைக்கும் என்ற சிந்தனையுடன் வருகை தருகின்றவர்களும், தாம் கூறுகின்றதை பொருட்படுத்தாமல், தீர்வினை பெறாமல் ஏமாற்றமடைந்து, கூட்டம் நிறைவு பெற்றதும், நாம் எதற்காக வந்தோம், வீணாக நேரத்தினை செலவு செய்துவிட்டோம் என்று பலர் கூறாமலும் இல்லை.

ஒருங்கிணைப்புக் கூட்டந்தானே, பிரயோசனமற்ற கூட்டம் என்ற மனநிலையும் பலரிடத்தில் தற்போது உருவாகிவரும் நிலை ஏற்பட்டிருக்கின்றன.

கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட விடயங்களில் எவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. எவை நிறைவேற்றப்படவில்லை. அல்லது நிறைவேற்றப்படவில்லை எனின் அதற்கான காரணம் என்ன?

நிறைவேற்றக்கூடிய சூழல் இருந்தும் நிறைவேற்றவில்லை எனின் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற, இவ்வாறான எந்தவிடயங்கள் பற்றியும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பேசப்படுவதில்லை என்பதும் வேதனையே.

இன்று ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நடைபெற்றால், அங்கு கதைக்கப்படும் விடயம் குறித்த அறைக்குள்ளேயே நிறைவு பெற்றுவிடும்.

அடுத்த தடவை கூட்டம் நடைபெறும், அதிகாரிகளிடம் குறைகள் பற்றி வினா எழுப்பபடும் பின் கூட்டம் நிறைவு பெற்றுவிடும். இவைதான் தற்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகம் நடைபெறும் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களாக அமைந்திருக்கின்றன.

கூட்டத்தில் அதிகாரிகள் சிலரால் கூறப்படும் வேலைகளை இலகுவாக செய்வோம் என்பார்கள், ஆனால் செய்யமாட்டார்கள். அடுத்த கூட்டத்திலும் செய்வோம் என்பர். இவ்வாறு செய்வோம் என்பது வாய்ப்பேச்சில் மாத்திரம் ஒருசில அதிகாரிகளின் மகுட வாசகமாக மட்டும் அமைந்திருக்கின்றன.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள், ஓரே நாளிலும் மூன்று பிரதேச செயலகங்களிலும் நடைபெறுகின்றன. ஒரு கூட்டத்தினை நிறைவு செய்து, அடுத்த கூட்டத்திற்கு அவசர அவசரமாக இணைத் தலைவர்களும், அரசியல்வாதிகளும் ஓடுகின்றனர்.

மற்றைய பிரதேச செயலகத்திற்கும் சென்று அதனை அவசர அவசரமாக நிறைவு செய்கின்றனர். மூன்றாவது கூட்டத்திற்கு செல்வதற்கு இடையில் களைப்படைந்து மூன்றாவது கூட்டமும் ஒழுங்கு முறையாக நடைபெறுவதில்லை.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக மாத்திரம் நடாத்தப்படுகின்றதா? என்ற சந்தேகம் இவ்வாறான நேரத்தில் தான் மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது.

கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும், தமக்கான இணைத்தலைவர் கௌரவம் என்பதை காட்டிக்கொள்வதற்கான கூட்டமாகவே ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களினை பார்க்கத் தோன்றுகின்றது. இதே போன்றுதான் விவசாய ஆரம்ப கூட்டங்களும் நடைபெறுகின்றன.

அங்கேயும் தீர்மானிக்கப்படும் விடயங்களுக்கேற்ப அத்தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றதா? என்பது வினாவாகவே இருந்து கொண்டிருக்கின்றது.

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களினால், மக்களுக்கான சேவைகள், அபிவிருத்திகள் ஒழுங்கு முறையாக மேற்கொள்ளப்படுகின்றதா என்பதனை அவதானிப்பதாகவும், மேற்கொள்ளப்படவில்லை எனின் அதற்கான நடவடிக்கைகளை எடுக்ககூடியதாகவும், மக்களுக்கான பிரச்சினைகளை இனங்கண்டு தீர்ப்பதாகவும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் அமையவேண்டும் என்பதே மக்களது எதிர்பார்ப்பாகும்.

வீதி பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சினை, குப்பை பிரச்சினை, போக்குவரத்து பிரச்சினை, வடிகால் பிரச்சினை, ஆசிரியர் பற்றாக்குறை, யானைப் பிரச்சினை, சட்டவிரோத மண் அகழ்வு, சட்ட விரோத கசிப்பு உற்பத்தி, கால்நடைகள் பிரச்சினை என பல பிரச்சினைகள் ஒவ்வொரு பிரதேசங்களிலும் இருந்து கொண்டிருக்கின்றன.

அதைவிடுத்து மக்களிடத்தில் பிரச்சினைகளை ஆராய்கின்ற போது இன்னும் பல பிரச்சினைகள் வெளிவரும். எப்போதும் சாதாரண மக்களிடமிருந்தும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கான தீர்வினை வழங்க வேண்டும்.

காணிவிடுவிப்பு, காணாமால் போனவர்களை கண்டுப்பிடித்து வழங்கும்படி உறவினர்களின் போராட்டம், கைதிகளின் விடுதலை, சர்வதேச விசாரணை போன்ற தேசிய ரீதியாக தீர்க்கக்கூடிய பிரச்சினைகளும் தமிழ் மக்கள் மத்தியிலே இருந்து கொண்டிருக்கின்றன.

அவ்வாறான பிரச்சினைகளையும் தேசிய ரீதியாக அரசு இந்த ஆண்டு நிறைவுக்குள் தீர்க்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மாவட்ட, பிரதேச மட்டங்களிலே தீர்க்க கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகளை சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளும், அவற்றினை விரைவுபடுத்துவதற்கான வேலைகளை அரசியல்வாதிகளும் முன்னெடுக்க வேண்டும்.

அவ்வாறான பிரச்சினைகளை சமூகத்துடன் இணைந்து மேற்கொள்கின்ற போது, சிறிது சிறிதாக நடத்தப்படும் ஆர்பாட்டங்களையும் தடுக்க முடியும்.

நல்லெண்ணத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தியுள்ள அரசாங்கம், அவற்றினால் தற்போது, மக்களுக்கு கிடைக்கும் பயன் என்ன? நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடாத்தப்படுகின்றனவா?

என்பதுபற்றி உடனடியாக ஆராய்ந்து, நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கும், அவசரமின்றி ஒரு பிரதேச செயலகப்பிரிவின் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் தெளிவாக ஆராய்ந்து ஒவ்வொரு விடயத்திற்கும் தீர்வு வழங்க கூடிய வகையிலும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களை நடாத்த வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களினால், மக்களுக்கான சேவைகள், அபிவிருத்திகள் ஒழுங்கு முறையாக மேற்கொள்ளப்படுகின்றதா என்பதனை அவதானிப்பதாகவும்,

மேற்கொள்ளப்படவில்லை எனின் அதற்கான நடவடிக்கைகளை எடுக்ககூடியதாகவும், மக்களுக்கான பிரச்சினைகளை அதாவது வீதி பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சினை, குப்பைமேடு பிரச்சினை, போக்குவரத்து பிரச்சினை, வடிகான் பிரச்சினை,

ஆசிரியர் பற்றாக்குறை, யானைப் பிரச்சினை, சட்டவிரோத மண் அகழ்வு, சட்டவிரோத கசிப்பு உற்பத்தி, கால்நடைகள் பிரச்சினை என பல பிரச்சினைகள் ஒவ்வொரு பிரதேசங்களிலும் இருந்து கொண்டிருக்கின்ற பிரச்சினைகளை இனங்கண்டு தீர்ப்பதாகவும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் அமைய வேண்டும் என்பதே மக்களது எதிர்பார்ப்பாகும்.

Comments