நல்லாட்சியிலும் தமிழ் தேசிய இனம் முஸ்லிம் சமூகம் மீண்டும் போராட வேண்டிய நிலை!

Report Print Thileepan Thileepan in கட்டுரை

யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள போதும் இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ் தேசிய இனம் நிம்மதியாக தமது நிலத்தில், தமது உழைப்பில் வாழ முடியாத நிலை தொடர்கிறது.

கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் தமிழ் தேசிய இனத்திற்கு எதிராகவும், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் இந்த நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை மற்றும் வன்முறை ஆட்சி காரணமாக ஆட்சி மாற்றத்திற்காக இவ்விரு சமூகமும் கடுமையாக உழைந்திருந்தது.

அதன் விளைவாகவே முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அவர்களை இந்த நாட்டின் தலைமகனாக அனைவராலும் பார்க்க முடிகிறது.

பாராளுமன்றத்திலும் பச்சைக் கட்சியுடன் நீலக்கட்சி இணைந்த தேசிய அரசாங்கம் உருவாகியது. இதனை அவர்கள் மறந்து விடக்கூடாது.

தமிழ் தேசிய இனமும், முஸ்லிம் சமூகமும் இணைந்து பெரும்பான்மையாக அவர்களுக்கு வாக்களிக்காது விட்டிருந்தால் அவர்கள் தற்போது எப்படி இருந்திருப்பார்கள் என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும்.

தமிழ் தேசிய இனமோ அல்லது முஸ்லிம் சமூகமோ இந்த அரசாங்கத்திடம் தாம் வாக்களித்தமைக்காக சலுகைகளையோ அல்லது சன்மானங்களையோ கோரவில்லை.

அவர்கள் தமக்கே உரித்தான உரிமைகளையும், நீதியையுமே கோருகிறார்கள். அதனை இந்த அரசாங்கம் வழங்காது இழுத்தடிப்பது என்பது மக்களை இந்த அரசாங்கம் மீதும் வெறுப்படைய வைத்திருக்கிறது.

ஒரு இனம் தமது உரிமைக்காகவும், தனது சொந்த நிலத்திற்காகவும், நீதி கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது.

தமிழ் தேசிய இனம் தாம் வாழ்ந்த தமது பரம்பரைக் காணிகளை விடுவிக்க கோரியும், தமது தொழில் நிலங்களை விடுவிக்கக் கோரியும், காணாமல் போன தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற பதில் கோரியும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் ஜனநாயக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்ட விரக்தியாலும், தமது தலைமைகள் மீது ஏற்பட்ட நம்பிக்கையீனத்தாலும் மக்கள் தாமாகவே தன்னெழுச்சியாக ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இத்தகைய மக்கள் போராட்டங்களில் புலக்குடியிருப்பு, பரவிப்பாஞ்சான் மக்களுடைய நிலமீட்புப் போராட்டத்திற்கு தீர்வு கண்ட போதும் ஏனைய போராட்டங்கள் இன்று மூன்றாவது மாதத்தை தொட்டு நிற்கிறது.

குறிப்பாக கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கடந்த செவ்வாய்கிழமை 100 ஆவது நாளை எட்டியிருக்கிறது.

50 நாள், 60 நாள், 75 நாள், 100 நாள் என இவை நீண்டு செல்வதற்கு இவை ஒன்றும் சினிமா திரைப்படங்கள் அல்ல. அவை தான் வெற்றிகரமாக இத்தனை நாள் ஓடியது என்று கூறுவார்கள்.

ஆனால் இது பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுடன் சம்மந்தப்பட்ட விடயம். இந்த நாட்டின் நீதியுடன் சம்மந்தப்பட்ட விடயம். அதனை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்று மக்கள் போராட்டங்கள் இவ்வாறு மாதக்கணக்காக தொடர்வது என்பது இந்த அரசாங்கத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது.

இத்தகைய போராட்டங்களில் ஈடுபடுகின்ற மக்களுக்கு ஒரு தீர்வையோ அல்லது குறைந்த பட்சம் ஒரு நம்பிக்கையையோ ஏற்படுத்தி இந்த போராட்டங்களை தற்காலிகமாகவேனும் முடித்து வைக்க முடியாத நிலையில் இந்த அரசாங்கம் இருக்கிறது.

அதே நிலையில் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் தலைமையாக தம்மை காண்பிக்கும் கூட்டமைப்பின் தலைமையும் இருக்கிறது. இத்தகையதொரு சூழல் ஆரோக்கியமானது அல்ல.

அந்த மக்கள் 100 ஆவது நாளில் ஏ9 வீதியை மறித்து நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த மக்களின் மனங்களில் இருந்து எழுந்த வார்த்தைகள் விரக்தியின் உச்ச நிலையை வெளிப்படுத்தியிருக்கிறது. தொடர்ச்சியான போராட்டங்களால் அந்த மக்கள் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களால் வீட்டில் உள்ள ஏனையவர்கள் கூட பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இத்தகைய நிலை தொடரும் பட்சத்தில் அவை விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தலாம். இதனால் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு காத்திரமான முறையில் செயற்பட்டு அந்த மக்களுக்கு நம்பிக்கையை ஊட்ட வேண்டும்.

மக்கள் மாதக் கணக்கில் போராடிக் கொண்டிருக்கும் போது அதனை கண்டு கொள்ளாமல் இருந்து கொண்டு நல்லிணக்கம் பற்றி பேசுவதில் எந்த பயனும் இல்லை. அத்துடன் நல்லிணக்கமும் ஏற்பட்டு விடப்போவதில்லை.

நல்லாட்சி என்றால் என்ன என்ற கேள்வி இன்று எல்லோர் மனங்களிலும் எழத் தொடங்கியிருக்கிறது. ஆனால் ஆட்சியாளர் மனங்களில் அதற்கான விடையைக் காண முடியாது இருப்பது தான் மிகவும் வேதனையான விடயம்.

மறுபுறம், முஸ்லிம் சமூகம் கடந்தகாலங்களில் அரசாங்கத்திற்கு பக்கபலமாக இருந்து வந்தது. தமிழ் மக்கள் ஆயுத ரீதியதக பலமாக இருந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்தை அப்போதைய அரசாங்கங்கள் பிரித்தாளும் கொள்கையைப் பயன்படுத்தி சரியாக கையாண்டன.

ஆனால் தமிழ் மக்கள் ஆயுத ரீதியாக மெளனிக்கப்பட்டு மீண்டும் எழ முடியாத நிலைக்கு சென்ற பின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறைகள் துளிர்விடத் தொடங்கியுள்ளன.

இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே உயர்பதவிகளில் தமிழ் மக்களே அதிகமாக இருந்தனர். இலங்கையின் சட்டவாக்க கழகத்தில் முதன்முதலாக படித்த இலங்கையாராக சேர் பொன் இராமநாதன் அவர்களே தெரிவாகியும் இருந்தார்.

சுதந்திரத்திற்கு பின்னர் பௌத்த சிங்கள அடிப்படைவாதிகள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட வன்முறைகள் ஆயுதப் போராட்டம் வரை சென்றது. இத்தகைய நிலையில் தமிழ் மக்கள் பலர் தமது பதவி நிலை, கல்வி என்பவற்றை இழந்து வெளிநாடு சென்றிருந்தனர்.

இத்தகைய சூழலில் ஏற்பட்ட வெற்றிடங்களை முஸ்லிம் சமூகமே நிரப்பியிருந்தது. தற்போது உயர்பதவிகளிலும், கல்வியிலும் முஸ்லிம் சமூகம் உயர் நிலை பெற்றிருக்கிறது. எண்ணெய்வள நாடுகள் மற்றும் இஸ்லாமிய நாடுகள் என்பவற்றில் இருந்து உதவிகளை தமது அமைச்சர்களின்

உதவியுடன் நேரடியாகப் பெற்று முஸ்லிம் சமூகம் தன்னை வளப்படுத்திக் கொண்டுள்ளதுடன், பொருளாதார ரீதியாகவும் பலமானவர்களாக விளங்குகின்றார்கள்.

இது பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளுக்கு பிரச்சினையாகவுள்ளது. தமிழ் தேசிய இனத்தை கட்டுப்படுத்த முனைந்த பௌத்த சிங்கள அடிப்படை வாதிகள் தற்போது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளைப் பொறுத்தவரை அவர்கள் இதனை பௌத்த நாடாக கருதுகிறார்கள். தமிழ் தேசிய இனத்தினதும், முஸ்லிம் சமூகத்தினதும் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றார்கள். இதன்விளைவே தமிழ் மக்களைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்பட்டிருப்பது.

முஸ்லிம் சமூகம் மீது தொடர்ந்த வன்முறையால் தான் கடந்த மஹிந்தா அரசாங்கத்தை மாற்றுவதற்கு அந்த சமூகம் கடுமையாக உழைத்தது. ஆனால் தற்போது பழைய குருடி கதவைத் திறவடா என்ற மாதிரி முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பெதுபலசேனா போன்ற பௌத்த சிங்கள அடிப்படைவாத அமைப்புக்கள் தீவிரமாக செயற்படத் தொடங்கியுள்ளன.

இதனை இந்த அரசாங்கம் கூட கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. முஸ்லிம் சமூகம் கூட தற்காப்பு நிலைக்கு செல்ல வேண்டிய துரதிஸ்டவசமான நிகழ்வு இடம்பெறக் கூடிய அபாயநிலையே ஏற்பட்டிருக்கிறது.

ஆக, தமிழ்தேசிய இனம் மற்றும் முஸ்லிம் சமூகம் ஆகிய இரண்டும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திலும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்குரிய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கவில்லை.

அவர்களை கட்டுப்படுத்தி அடக்கி ஆழ விரும்புபவர்கள் தொடர்ந்தும் இயங்கு நிலையில் தான் இருக்கிறார்கள். அப்படியாயின் நல்லாட்சி என்பது உண்மையில் யாருக்கு...? இதனை இந்த அரசாங்கம் உணர்ந்து கொள்ளாத வரை இந்த நாட்டில் இன நல்லிணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களே இல்லை.