அரசியல் கைதிகளுக்கு நீதி கிடைக்குமா....?

Report Print Thileepan Thileepan in கட்டுரை

தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதன் பின்னர் அந்த ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்கள் உட்பட 12 ஆயிரம் வரையிலானவர்களுக்கு அரசாங்கம் புனர்வாழ்வளித்து அவர்களை சமூகமயமாக்கியுள்ளது.

இதே காலகட்டத்திலும், யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பலர் இன்னமும் வழக்கு தொடரப்படாமல் பல்வேறு சிறைச்சாலைகளிலும், தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தகையோரில் 2012 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் அடங்குகின்றனர். சந்தேகத்தின் பேரில் எவரையும் நீண்டகாலம் தடுத்து வைத்திருப்பது அடிப்படை மனிதவுரிமை மீறல் என்று யாழ் மேல் நீதிமன்றம் அண்மையில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்து. முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களான சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கியிருந்தது.

இந்த தீர்ப்பின் பின்னரும் கூட அரசாங்கம் எத்தகைய விசாரணைகளுமின்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை குறைந்த பட்சம் பிணையில் செல்வதற்கு கூட அனுமதிக்காமல் இருக்கிறது.

இதனை நீதிமன்ற அவமதிப்பு என்னும் அடிப்படையில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளோ அல்லது அவர்கள் நலன்சார்ந்து சிந்திக்கக் கூடிய எந்தவொரு அமைப்புக்களோ, சட்டத்தரணிகளோ வழக்கு தொடர்வதற்கு முன்வராமல் இருப்பது வேதனையான விடயமே.

திருகோணமலையின் குமாரபுரம் கிராமத்தில் வீடு புகுந்து 50 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்களை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்திற்கு எதிரான வழக்கை சந்தேகநபர்களின் பாதுகாப்பு கருதியும், அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும் அனுராதபுரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று பல வருடங்களின் பின்னர் அவர்களை நிரபராதிகளாக தெரிவித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் அவர்கள் சுதந்திரமாக வெளியில் திரிந்தனர் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதனைப் போன்றே புனர்வாழ்வு பெற்றுக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு பலர் கொல்லப்பட்ட வழக்கும் சந்தேகநபர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கொழும்பில் விசாரிக்கப்பட்டு சந்தேகநபர்களான பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேற்கண்ட இரண்டு வழக்குகளிலும் சாட்சிகள் குறித்து எத்தகைய கரிசனையும் செலுத்தாமல் சந்தேக நபர்களின் அடிப்படை உரிமை என்ற பெயரில் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நீதிமன்றங்களுக்கு வழக்குகள் மாற்றப்பட்டன.

ஆனால், அநுராதபுரம் சிறைச்சாலையில் 6 ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள செங்கன் எனப்படும் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூவருக்கு எதிராக கடந்த 2013ஆம் ஆண்டு வவுனியா மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைகள் கடந்த நான்கு ஆண்டுகளாக 50 இற்கும் மேற்பட்ட தவணைகளாக நடைபெற்று வந்தன.

வவுனியா மேல் நீதிமன்றதில் இடம்பெற்று வந்த வழக்கினை பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்களை அதிகமானதாகக் கொண்ட சாட்சியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தைக் கூறி சட்டமா அதிபர் திணைக்களம் அனுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு இடம் மாற்றியுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ச்சியான உண்ணாவிரதப்போராட்டத்தில் அம்மூன்று அரசியல் கைதிகளும் ஈடுபட்டுள்ளனர். இந்தவிடத்தில், சாட்சிகளின் மீது காட்டப்பட்டிருக்கின்ற கரிசனை சந்தேக நபர்களின் உரிமைகள் மீது காட்டப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இதனைக் காரணம் காட்டி, நீதித்துறை தமிழர்களுக்கு ஒரு மாதிரியாகவும், சிங்களவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் செயற்படுவதாக குறை கூறியுள்ளார்.

வழக்கு விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பதையும், ஏற்கனவே விசாரிக்கப்பட்டு வந்த நீதிமன்றத்தில் தமது வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுப்பதையும் பார்கின்ற போது தமிழ் மக்களுக்கு உரிய நீதி வழங்கப்படுமா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

விசாரணை இன்றி தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுவே அரசாங்கத்தின் கொள்கையும் ஆகும் என்று அமைச்சரவையின் இணை ஊடகப் பேச்சளார் ராஜித சேனாரத்ன கருத்து வெளியிட்டுள்ளார். அப்படியானால் தமிழ் அரசியல் கைதிகள் எந்த அடிப்படையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று அரசியல் கைதிகளின் வழக்கைப் பொறுத்தவரையில் இவர்களுடைய வழக்குகளுக்கான சாட்சிகளில் பெரும்பாலனவர்கள் பாதுகாப்பு துறையுடன் சம்மந்தப்பட்டவர்கள்.

அந்த பாதுகாப்பு தரப்பினருக்கு பாதுகாப்பு இல்லை என்பதன் மூலம் அரசாங்கம் என்ன சொல்ல வருகின்றது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

வடக்கு, கிழக்கில் கடந்த 8 வருடங்களாக ஒரு குண்டு வெடிப்பு சம்பவமோ அல்லது பாரிய அளவிலான வன்முறைகளோ அல்லது பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக எத்தகைய ஒரு தாக்குதலோ தமிழர் தரப்பில் இருந்து நடைபெறாத சூழலில் பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த பெரும்பாலான சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பது என்பதை ஒரு நகைச்சுவையாகவே அனைவரும் பார்க்கின்றனர்.

இன்னும் சொல்லப் போனால் தங்களையே பாதுகாத்துக் கொள்ளாத பாதுகாப்பு தரப்பினர் எப்படி நாட்டை பாதுகாத்துக் கொள்ளப் போகின்றார்கள் என்று அறிவிஜீவிகளும், ஜனநாயக முற்போக்கு சக்திகளும், மனிதவுரிமை ஆர்வலர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச சமூகத்தின் அழுத்தத்திற்கு ஏற்ப வேண்டா வெறுப்பாக அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அனைத்தும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்நாட்டின் பாதுகாப்பு தரப்பினராலேயே காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்று அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அந்த பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக தமது பிள்ளையை இன்னாரிடம் தான் ஒப்படைத்தோம் என்று எப்படி தைரியத்துடன் அந்த உறவுகள் சாட்சி சொல்ல முன்வருவார்கள்.

முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மெக்ஸ்வெல் பரணகம் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்தவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் மிரட்டப்பட்ட சம்பவங்களும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்காகத்தான் சாட்சிகளின் பாதுகாப்பு உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பாலும் முன்வைக்கப்பட்டது. மேலும், சர்வதேச கண்காணிப்பாளர்கள் மத்தியிலேயே இந்த அலுவலகம் வடக்கு, கிழக்கில் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அரசாங்கம் இந்தக் கோரிக்கைகளை உரிய வகையில் பரிசீலித்ததாக தெரியவில்லை.

இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றுவதில் முனைப்பு காட்டி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் சார்பாக இதில் காத்திரமாக செயற்பட்டதாக தெரியவில்லை.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 40 இற்கும் மேற்பட்ட மாகாண சபை உறுப்பினர்களையும் அரசாங்கத்திற்கு கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை உரிய அழுத்தத்தை வழங்கியிருந்தால் இவற்றில் கணிசமானமற்றை நிறைவேற்றியிருக்க முடியும். அதைச் செய்வதற்கு கூட்டமைப்பின் தலைவர் தவறியிருக்கிறார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேயே அரசியல் கைதிகள் தம்மீது வழக்கு தொடருங்கள், தம்மீதான வழக்குகளை துரிதப்படுத்துங்கள், குற்றவாளிகளாக இருந்தால் தண்டனை கொடுங்கள், இல்லையேல் விடுதலை செய்யுங்கள், வழக்கு தொடரும் வரை எம்மை பிணையில் செல்ல விடுங்கள் என்ற கோரிக்கைளை முன்வைத்து பல்வேறு வகையான போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

ஜனாதிபதி அவர்களது கோரிக்கைகளை செவிமடுத்து குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள் சிறையில் தான் இருக்கு வேண்டும் என்ற அவசியமில்லை என்று தெரிவித்ததுடன், ஆறுமாத காலத்திற்குள் சரியான தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்து, அதன் நம்பத் தன்மையை உறுதி செய்வதற்காக எதிர்கட்சித் தலைவரை நேரடியாக சிறைச்சாலைகளுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

அந்த உத்தரவாதம் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்பதுடன், அந்த உத்தரவாதத்திற்கு சாட்சியாக இருந்தவரும் உரிய வகையில் செயற்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

சந்தேக நபர்களின் ஒப்புதல் வாக்குமூலங்கள் சாட்சியாக ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட போதும், நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் அரசாங்கத்தின் வேண்டுகோளை ஏற்று தம்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களை ஏற்றுக் கொண்டு தண்டனையையும், புனர்வாழ்வையும் பெற்று வெளிவருவதற்கு தயாராக இருந்த போதிலும், அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலை நிலவுகிறது.

அனுராதபுரம் சிறையில், நியாயமான கோரிக்கையை முன்னுறுத்தியும், தங்களது அடிப்படை உரிமையை நீதிமன்றங்களில் ஏற்றுக் கொண்ட விடயத்தை வலியுறுத்தியும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் மூன்றாவது வாரத்தை எட்டுகிறது.

இவர்கள் ஏற்கனவே பலமுறை இத்தகைய போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாகவும், தடுப்பு காவலில் இருந்தபோது அனுபவித்த சித்திரவதைகளின் காரணமாகவும், இவர்களின் உடல் நிலை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

உறவினர்களையும், தமது குடும்ப பொறுப்பையும், எதிர்காலத்தையும், நினைதது இவர்கள் உளரீதியாகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளனர். ஆகவே, அரசாங்கம் அவர்களின் மீதான வழக்கை இடம்மாற்றுவதன் மூலமாக மேலும் இழுத்தடிப்பு செய்யாமல் விரைவாக நடத்தி முடித்து அவர்கள் விரைந்து தமது குடும்ப பொறுப்பையும், வாழ்க்கையையும் முன்னெடுத்துச் செல்வதற்கு வழிகாண வேண்டும்.

உண்ணாவிரதிகள் மூன்று பேரினுடைய கோரிக்கையில் உள்ள நியாயத்தை வலியுறுத்தி நீதிமன்றத்தின் ஊடாகவும், அவர்களின் உரிமையை நிலைநாட்டி அவர்களின் வழக்கை காலதாமதம் இன்றி முன்னெடுத்துச் செல்வதற்கு அரசியல் கைதிகளின் விடுதலையில் நாட்டம் உடைய அனைவரும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் முன்வர வேண்டும்.

சிறையில் இருக்கும் உறவுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் பொது மக்களாலும், பொது அமைப்புக்களாலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள வெகுஜனப் போராட்டங்களுக்கு சமூகத்தின் அனைத்து தரபபினரும் தங்களது முழுமையான ஆதரவை வழங்கிவருகின்றனர்.

இதனையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூரண வழமை மறுப்பு போராட்டம் வெளிப்படுத்தியிருக்கிறது. இதனை வெற்றி பெறச் செய்ததைப் போன்றே அரசியல் கைதிகள் விடுதலை ஆகும் வரையிலும், காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கின்ற வரையிலும், நீண்ட நெடுங்காலமாக தமிழ் மக்களின் அபிலாசையான அரசியல் தீர்வுக்கும் வெகுஜன போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

- நரேன்