வெளிநாடு செல்லும் இளம்பெண்கள் சடலமாக வரும் அவலம்! கதறி துடிக்கும் குடும்பங்கள்

Report Print Nivetha in கட்டுரை

''பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்.. மிக்க பீளை இருக்குதடி தங்கமே தங்கம்.." என்ற பாரதியாரின் கவி வரிகளுக்கு அமைய, பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது தற்போதைய நிலையில்.

பெண்களை வார்த்தைகளால் இம்சிப்பதும், வரைமுறையற்ற செயல்களால் காயப்படுத்துவதும், பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கி கொலை செய்வதும் என வன்கொடுமைகளும், வடுக்களும் கூடிக்கொண்டே, வளர்ந்து கொண்டே வருகின்றன.

குடும்ப வறுமையை போக்க வெளிநாடு செல்லும் பெண்களுக்கு அந்த விஜயம் பெரும் ஆபத்தான பாதையாக மாறும் அவலமே காணப்படுகிறது.

வெளிநாட்டிற்கு பணிப்பெண்களாக செல்வோரின் தொகை இன்னும் குறைந்தபாடில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் இளம் பெண்கள்தான் அதிகமாக பணிப்பெண்களாக சென்று பாதிக்கப்படுகின்றனர்.

ஆரம்ப காலங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சிலரே வெளிநாடுகளை நோக்கி பணிப்பெண்களாக சென்று வந்தார்கள். எனினும், இன்றைய காலத்தில் குடும்பங்களில் நிலவும் வறுமை காரணமாக வெளிநாடு செல்ல பல பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

குடும்பத்தின் நன்மை கருதி தமது சந்தோஷங்களை தியாகம் செய்து, பணிப்பெண்களாக வெளிநாடு செல்வோரும் சொல்லொனா துன்பங்களுடன் நாடு திரும்புகின்றனர்.

வெளிநாட்டு விஜயங்கள் பல குடும்பங்களில் விடிவை கொடுத்தாலும், சில குடும்பங்களின் சீரழியவும் இது வழிகோல்கிறது.

வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்பு தேடிச் சென்ற பெண்களில் சிலர் தொடர்பான தகவல்கள் இன்னும் உறவினர்களுக்கு தெரியவில்லை. அதில் சிலர் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல நினைக்கும் பெண்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருப்பது இன்றைய காலத்தின் தேவையாகவுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு எத்தனை வலிகளைத் தந்தாலும், குடும்ப வறுமையின் நிமித்தம் அங்கு செல்வோரின் எண்ணிக்கையும் குறையவில்லை, அதன் வலிகளும் தீரவில்லை. அந்த வலிகளுக்கு சாட்சிதான் இது.....

அண்மையில் சவுதியில் இருந்து சடலமாக வந்த பெண்ணின் வாழ்க்கை சம்பவங்கள் இதற்கு மிக சிறந்த எடுத்துக் காட்டாக உள்ளது.

சவுதிக்கு தொழிக்காக சென்று சவப்பெட்டியில் நாடு திரும்பிய பெண்தான் தினுஷி பிரியங்கா மஹேஷி டி அல்விஸ்.

பதுளை - பசறை பிரதேசத்தை சேர்ந்த இலக்கம் 25 அத்கம் நிவச, அரலியகொட என்ற முகவரியில் வசித்து வந்த 36 வயதான இவர் இரண்டு பிள்ளைகளின் தாயாராவார்.

சவூதி அரேபியாவில், இரண்டு வருடங்கள் தொழில் புரிந்த இவர் 6 மாதங்களின் பின்னர் சவப்பெட்டியில் நாடு திரும்பியதை கண்டு குறித்த பெண்ணின் குடும்பம் கதறி அழுத தருணம் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

குறித்த பெண்ணின் கணவனின் தொந்தரவுகளை பொறுத்துக்கொள்ள முடியாது கணவனை பிரிந்து, தனது தந்தையின் பாதுகாப்பில் குழுந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் தஹாம் நகரில் கதீப் என்ற பகுதியில் உள்ள வீடொன்றுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

இரண்டு வருடங்கள் அந்த வீட்டில் நல்ல முறையில் தொழில் புரிந்து விட்டு ஒரு மாத விடுமுறையில் இலங்கை வந்து, மீண்டும் சவூதியில் உள்ள அந்த வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இரண்டு மாதங்கள் பிள்ளைகளின் செலவுக்கான பணத்தை அனுப்பிய தினுஷி பின்னர் தொலைபேசி அழைப்பை கூட எடுக்கவில்லை.

இதனையடுத்து ஷெல்டன் அல்விஸ், தனது மகளின் நிலைமை குறித்து தேடிய போது, அவரை சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்த முகவர் மகள் இறந்து விட்டதாக கடந்த 8ஆம் திகதி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தினுஷி தொழில் புரிந்த வீட்டின் உரிமையாளர் பல முறை அவரை தாக்கி, துஷ்பிரயோகம் செய்து உணவு எதுவும் கொடுக்காது அறை ஒன்றில் மூடி வைத்ததாகவும், மகளை இலங்கைக்கு வரவழைக்க தனது பணத்தில் விமான பயணச்சீட்டை அனுப்பிய போதிலும் மகள் சவப்பெட்டியிலேயே திரும்பி வந்ததாகவும் குறித்த பெண்ணின் தந்தை கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இந்த பெண்ணின் மரணத்திற்கு யார்தான் பொறுப்பு? ஏழ்மை மட்டும்தான் இவர் வெளிநாடு செல்ல காரணம் என்று ஒதுக்கி விடவும் முடியாது. இப்படி பாதிக்கப்படுவது தெரிந்தும் ஏன் பெண்கள் வெளிநாடு செல்ல வேண்டும். அது மட்டுமல்லாது வெளிநாடு செல்லும் பெண்கள் உடல், உள உபாதைகளுக்கு உள்ளாகி நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

ஒரு பணிப்பெண் தன்னை வருத்திக் கொண்டு அனுப்பும் பணம், அவரின் குடும்பத்தின் ஊதாரித்தனமான செலவால் கரைந்து போகின்றது. இதனால் ஊர் திரும்பும் பணிப்பெண், மீண்டும் விமானமேறி எங்கோ ஒரு நாட்டில் தனது வேலையை தொடர்கிறாள்.

இவ்வாறு வெளிநாட்டில் பணி புரிவதால், அவரின் வாழ்க்கை வட்டம், குடும்பம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுகிறது. குறிப்பாக பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் வெளிநாடு செல்வதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தாயார் வெளிநாடு சென்றுள்ள குடும்பங்களில் உள்ள சில பிள்ளைகள் உரிய திருமண வயதெல்லையை அடையும் முன்னர் திருமண பந்தத்தில் நுழைந்து விடுகின்றனர்.

குடும்ப இன்னல்களை தீர்க்க பல எதிர்கால கனவுகளுடன் வெளிநாடு செல்லும் பெண்களில் சிலர், அங்கு கிடைக்கும் அன்பு, அரவணைப்பு காரணமாக திசைமாறி போன சம்பவங்களும் உண்டு.

இதன் காரணமாக அவ்வாறு வழி தவறிச் சென்ற பெண்களின், பிள்ளைகள் நாட்டில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

தாய் வெளிநாடு சென்றமையால் தந்தையின் கண்காணிப்பிலேயே பல பெண் பிள்ளைகள் வாழ்கின்றனர். இதில் பொறுப்பற்ற தந்தையால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளும், பருவ வயதில் திருமணம் செய்து கொண்டு வாழ்வை சீரழித்த பிள்ளைகளும் உண்டு.

குடும்பத்தில் பாதுகாப்பற்ற நிலையில் பாலியல் வன்கொடுமைகளுக்கு முகங்கொடுத்த பிள்ளைகளும் பல உண்டு.

தாயின் அரவணைப்பின்றி வாழும் சில பெண் பிள்ளைகள் இவ்வாறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பது இலங்கையில் நடைபெறும் யதார்த்தமாகும்.

பெண்கள் தொழில் வாய்ப்பு கருதி வெளிநாடுகளுக்கு செல்கின்ற நிலையில் குடும்பங்களுக்கு இடையில் விரிசல்கள், கணவன், மனைவி பிரச்சினை.. இப்படி என்று பல பிரச்சினைகள் விஸ்பரூபம் எடுக்கின்றன.

இறுதியில் குடும்பம் உருத்தெரியாமல் சிதைந்து போகின்றது. அவர்களின் குழந்தைகளும் அநாதையாக மீண்டும் ஏழ்மை வாழ்க்கைக்குள் புகுந்து விடுகின்றனர்.

இவ்வாறான நிலைமைகள் ஏற்படாதிருக்க வேண்டுமாயின், நாட்டில் வறுமை குறைய வேண்டும். அதற்காக அரசாங்கம் ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை அமுல்படுத்த வேண்டும். பல்வேறு சுயதொழில் வேலை வாய்ப்புக்களை கிராமங்கள் தோறும் முன்னெடுக்க வேண்டும். இது பெண்களை ஊக்குவிக்கும் வழிமுறையாக அமையும்.

முதலில் பணிப்பெண்களாக செல்வதை கட்டுப்படுத்த வேண்டும். அததையும் தாண்டி செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சரியான நடைமுறைகள் பின்பற்றபட வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கையின் சார்பில் பிரதிநிதியொருவர் பணியாற்றி வருகிறார். அவரின் ஊடாக இந்தப் பெண்கள் கண்காணிப்பதும், அவர்களுக்கு எதுவித பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அதனை தீர்க்க வழிவகை செய்ய வேண்டும்.

ராஜதந்திர ரீதியாக பலவேலைத்திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் என்ற வகையில் சாத்தியமான விடயமே. அதனை முறையாக பின்பற்றும் பட்சத்தில் தினுஷி போன்றோரின் உயிர்கள் பாதுகாக்கப்படும். இலங்கையிலுள்ள அவர்களின் குடும்பமும் ஆரோக்கியமான நகர்வை நோக்கி செல்லும்.

இவ்வாறான சாதன நிலைப்பாடுகள் காலதாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லையேல் பணிப்பெண்களான செல்லும் பலர் சடலங்களாகவே நாடு திரும்பும் அவலம் தீவிரமடையும்.