கொஞ்சிப்பேசும் முன்னமே, வந்து சேர்கிறது, எதிர்காலம் குறித்த பயம்!

Report Print Jeslin Jeslin in கட்டுரை

இந்த பிரபஞ்சத்தில் பெற்றவர்களை நம்பி புதிதாகப் பூக்கும் மலர்கள்தான் குழந்தைகள், இவ்வாறு பிறக்கும் குழந்தைகள் வெளியுலகம் காணும் முன்பே தனது பெற்றோரைப்பார்த்துதான் வளர்கின்றனர்.

பெற்றோர்கள் நடந்து காட்டும் வழிதான் குழந்தைகள் தெரிவு செய்யும் முதல் பாதை. இந்தநிலையில் பெற்றோர்களுக்கு தனது குழந்தைகள் கொஞ்சி கொஞ்சிப் பேசிமுடிக்கும் காலத்திற்கு முன்னதாகவே, அதனை ரசிப்பதற்கு முன்னதாகவே குழந்தையின் எதிர்காலம் எவ்வாறிருக்கும் என்ற பயம் தொற்றிக்கொள்ளும்.

அதுவும் இன்றைய நூற்றாண்டை பொறுத்தவரையில் குழந்தைப் பிறக்கும் முன்னதாகவே பெற்றோர்கள் குழந்தையின் எதிர்காலம் குறித்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர்.

ஆனால், எமக்கு முற்பட்ட காலத்தினர், அதாவது எமது மூதாதையினர் எவ்வாறு அவர்களது குழந்தைகள் குறித்து சிந்தித்தார்கள், அல்லது எம்மை வளர்த்தார்கள் என்ற விடயத்தை ஒப்பிட்டுப்பார்க்கையில் நிச்சயம் அவர்களிடம் இந்த காலப் பெற்றோர்கள் தோற்றுத்தான் போய்விடுகின்றனர்.

இப்போது பெற்றோர்களின் வளர்ப்பு சரியா அல்லது தவறா என்பதைவிட குழந்தைகள், குழந்தைகளாக வளர்கின்றனரா? இல்லையா? என்பதுதான் பாரிய சிக்கலாக தோன்றுகின்றது.

வழக்கமாக ஒரு குழந்தையினிடத்தே இருக்கக்கூடிய சிறுபிள்ளைத்தனம், மழலைப்பேச்சு, சுட்டித்தனம் இவையெல்லாம் தற்போது இந்த இலத்திரனியல் உலகத்தில் குழந்தைகளிடையே இருக்கின்றதா என்பது சந்தேகமே.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தின் காரணமாக எம்மவரிடையே மருவி வரும் எமது பாரம்பரியங்கள், தற்போதுள்ள சிறுபிள்ளைகளிடம் துளியும் சென்று சேர்ந்ததில்லை.

தொலைக்காட்சிகள், கணினிகள், நவீன தொலைபேசி பாவனைகள், இணையத்தள பாவனைகள், சினிமாக்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்பன எமது சிறார்களுடன் ஒன்றித்து விட்டதோடு, அவர்களது திறமைகளைக்கூட இந்த உலகிற்கு தவறாக பறைசாற்றுவதாய் அமைகின்றன.

அன்று பாட்டி சொன்ன கதையால் குழந்தையின் கற்பனைத்திறன் வளர்ச்சிக்கண்டது.. திறந்த வெளியில் காற்றோட்டமாக ஆடி, பாடி விளையாடி மகிழ்ந்தவர்கள் அன்றைய சிறுவர்கள், எனினும் இப்போது, கையில் தொலைபேசியையும், கணினியையும் வைத்துக்கொண்டு தன் நிழலை விளையாடவிட்டு அதையே நிஜம் என்று நம்பி எப்போதும் இறுக்கமான ஒரு சூழலில் வாழ சிறுவர்கள் பழக்கப்பட்டுவிட்டனர்.

இருப்பினும் இப்பொழுதும் அவர்களது திறமைகள் சற்றேனும் குறையாமல் வெளிப்படத்தான் செய்கின்றன.

இன்று சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை இந்த தொலைக்காட்சி சேவைகள் நடத்திவருகின்றன.

ஆனால் இந்த நிகழ்ச்சிகளின் ஊடாக குழந்தைகளின் திறமைகள் 75 சதவீதம் சரியாக வெளிக்கொணரப்படுகின்றது எனில் 25 சதவீதம் தவறான தோற்றப்பாடுகளை சிறுவர்களிடத்தில் இந்த நிகழ்ச்சிகள் விதைக்கின்றன..

சிறுவர்களின் பாடல் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற இசைப்போட்டி நிகழ்ச்சிகள் ஏராளமானவற்றைப் பார்க்கின்றோம். அதுபோல அவர்களின் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் பல்வேறுபட்ட நிகழ்ச்சிக்களையும் நாம் ரசித்துப்பார்ப்பதுண்டு.

அவ்வாறு நாம் அண்மையில் ஒரு சிறு மேடை நாடகத்தை பார்க்கக் கிடைத்தது...!

குறித்த நாடகத்தில் ஒரு கணவன், மனைவி, இரு பிள்ளைகள். அவர்களுக்கான பாத்திரத்தை ஏற்று சிறப்பாக அதனை அரங்கேற்றினர்.

பூமிக்கு தங்கமுலாம் பூசுவது போல செந்நிற சூரியன் அழகாய் கிழக்கில் உதயமாகின்றான். அந்த காலைப்பொழுதிலே ஒரு இளம் குடும்பப்பெண் தனது வீட்டின் கடமைகளை பரபரப்பாக செய்துகொண்டிருக்கின்றாள்.

தனது இரு குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் மும்முரமாக அந்தப்பெண் தயாராக அவளுக்கு உதவியாக அவளது கணவனும் அந்தப்பணிகளை செய்துக்கொண்டிருக்கின்றார்.

ஒருவாறு அவர்களது குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டனர். தனது மனைவியின் மீதும் தனது குழந்தைகளின் மீதும் அளவற்ற பாசமுள்ள கணவனாக குறித்த நாடகத்தில் அந்த கணவன் சித்தரித்துகாட்டப்படுகின்றார்.

இவ்வாறு அந்த நாடகம் தொடர்ந்து செல்கின்றது, பிள்ளைகள் இருவரும் பாடசாலைக்குச் செல்ல கணவன் தனது பணிக்குச் செல்ல ஆயத்தமாகின்றார், மனைவி வீட்டிற்கான பொருட்கள் வாங்குவதற்காக வெளியில் சென்றுவிட, கணவனும் தனது பணிக்குச் சென்று விடுகின்றார்.

தனது பணியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கணவனுக்கு திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு, எதிர்முனையில் எப்போதும் கேட்டறிந்திராத குரல்.

அந்த தொலைப்பேசி அழைப்பினை எடுத்தவர் ஏதேதோ கூற இறுதியில் அந்த கணவனிற்கு காதில் விழுந்ததெல்லாம் தனது மனைவி ஒரு விபத்தில் சிக்கிவிட்டாள் என்பது மாத்திரமே.

தனது மனைவியைக்காண மிக வேகமாக வைத்தியசாலையை நோக்கி விரைகின்றான் அந்த கணவன்.. அங்கே குற்றுயிராய் கிடக்கும் தனது மனைவியைப்பார்த்து ஒரு நிமிடம் தானும் மரணத்தின்வாயிலுக்குச் சென்றுதான் விடுகின்றான் கணவன்.

இந்த நிகழ்ச்சி அங்கிருக்கும் பார்வையாளர்கள் அத்தனைப்பேரின் மனதிலும் ஒரு இறுக்கத்தையும், கண்களில் குளமென கண்ணீரையும் சட்டென தோற்றுவித்துவிட்டது.

தொடர்ந்து அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கும் தனது மனைவியைப்பார்த்து அந்த கணவன் படும் வேதனையை அப்படியே அந்த இயற்கையான நடிப்பு பிரதிபலிக்கின்றது.

ஒரு ஆண், இவ்வளவு சோகத்தை சுமக்க முடியுமா? என்பது போல் சோகமே உருவாக நின்றிருந்தான் அந்த கணவன். ஒரே நாளில் மொத்தமாக உடைந்து நொருங்கிப் போயிருந்த அந்த நிலையை அப்படியே சித்தரிக்கும் வண்ணம் அந்த மேடை நாடகம் இருந்தது.

இந்த நாடகம் இரு முதிர்ந்த உறவுகளுக்கிடையே உள்ள ஒரு புரிந்துணர்வை வெளிக்கொணர்வதாகத்தான் அமைந்தது, ஆனால் அந்த நாடகத்தைப்பங்கேற்று நடத்தியிருந்தவர்கள் ஐந்திலிருந்து, பத்து வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுதான் கவலைக்குரிய விடயம்.

அத்தனைப்பெரிய உறவில் இருக்கக்கூடிய உணர்வுகளை சித்தரிக்கும் அளவிற்கு சிறார்கள் தனது சிறுவர் என்ற நிலையில் இருந்து மாற்றமடைந்துவிட்டனர்.

இதை அவர்களின் அபார திறமை என கூறுவதா? அல்லது அவர்களது எதிர்காலங்களுக்கு அவர்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்று கூறுவதா?

தற்போது குழந்தைகளிடத்தே சினிமாவில் தோன்றும் கதாப்பாத்திரங்களைப்போல தம்மையும் நினைத்து பாவனை செய்யும் ஒரு நிலை தோன்றியுள்ளது.

தனக்கு பிடித்த ஒரு கதாப்பாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொள்ள முற்படுகின்றார்கள், தனது சிந்தனை, செயல் என அனைத்தையும் அதற்கேற்றாற்போல வடிவமைக்க எண்ணுகின்றார்கள்.

இவ்வாறான குழந்தைகளின் எண்ணங்கள் கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னர் சாத்தியப்படாதிருந்தபோதிலும், தொழிநுட்ப வளர்ச்சியின் காரணமாக தற்போது சாத்தியமான ஒன்றாக மாறியுள்ளது.

ஒரு குடும்பத்தில் கணவன் தொழிலுக்குச் சென்றால் அந்த வீ்ட்டில் இருக்கும் மனைவி குழந்தைகளை சரிவர கவனித்துக்கொண்டு அவர்களுக்கு கற்பித்துகொடுத்து அவர்களை வழிநடத்திவந்தது முன்னைய காலம்.

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி என இருவரும் பணிக்குச் சென்று குழந்தையின் கல்விக்கும் பொழுதுபோக்குக்கும் என தொலைபேசியையும் கணினியையும் விட்டுச்செல்தல் இந்தக்கால நடைமுறையாகிவிட்டது.

இதுவும் கூட தற்போது குழந்தைகள் குழந்தைத்தனத்தில் இருந்து மாற்றமடைந்துள்ளமைக்கு காரணமாகும். நிலா நிலா ஓடிவா.. என்று கூறிய அந்தக்குழந்தைகளின் மழலைப்பேச்சு சென்று இன்று சில குழந்தைகள் தனது குடும்பத்தாருடன் உரையாடுவதைக்கூட மறந்துவிட்டனர், தொலைக்காட்சியும், தொலைபேசியும் என அவர்கள் இளைஞர்களின் மனோநிலைக்கு தற்போது குழந்தைகள் வந்துவிட்டனர்.

இன்று எம் சமூகத்தினரிடையே சிறுவர்கள் தொடர்பான துஸ்பிரயோகங்களும், குற்றங்களும் பரவலாக இடம்பெறுவதற்கு இதுவும் ஒரு காரணமாகின்றது.

இவ்வாறு குழந்தைகள் அவர்களது இயல்புநிலையிலிருந்து மாற்றமடைந்து வளர்ந்துவரும்போது, அவர்கள் எந்த விடயத்தையுமே விரைவில் அறிந்து கொள்ள வேண்டும், அனைத்தையும் விரைவில் செயற்படுத்திப்பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆவல் அவர்களிடையே தோற்றம் பெறும்.

இதனால் அவர்கள் தான் காண்பவற்றை செயற்படுத்திப்பார்க்க முற்படுவர், உதாரணமாக திரைப்படங்களில் மது பாவனையையோ, புகைப்பழக்கத்தினையோ, அல்லது சிறுவர்களுக்கு சற்றும் பொருத்தமில்லாத நடவடிக்கைகளையோ பார்க்கும்போது அதனை தானும் செயற்படுத்திப்பார்க்க முற்படுவர்.

இது அவர்களின் எதிர்காலத்திற்கு மாத்திரமல்ல, சிறுவயதிலேயே அவர்களுக்கு உடல், உள பாதிப்புக்களையும் தோற்றுவிப்பதாகவும் அமைந்துவிடும்.

இவ்வாறான ஆபத்துக்களைத் தடுக்கவேண்டுமெனில், குழந்தைகளுக்கு நவீனத்தை பெற்றுக்கொடுப்பதற்கு பதிலாக நிகழ்காலத்தில் பெற்றோர்கள் பலவற்றை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

குறிப்பாக இந்த சமூகத்தில், தன்னை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது அதில் முக்கியமானது,

ஆண், பெண் வித்தியாசம் சொல்லி கொடுத்து, பழகும் வேளையில் வித்தியாசம் காட்டாமல் சகஜமாக பழக சொல்லித் தர வேண்டும். தொட்டு பேசுதலில் உள்ள வித்தியாசம் கற்று தர வேண்டும்.

வெளி மனிதர்களிடம் பழகும் போது இடைவெளிவிட்டு பழக கற்றுத் தர வேண்டும். குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டு செல்ல கூடாது. மற்றவரை பார்த்து கொள்ள சொல்லி விட்டு செல்லுதலும் நல்லதல்ல.

அவர்களுக்கு பொதுவாக யாருடனாவது தனியாக இருப்பது அல்லது பழகுவதில் தயக்கம் இருந்தால் அவர்களை வற்புறுத்தாமல், எதனால் அந்த தயக்கம், என்ன நெருடல் அவர்களுக்கு உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் சில சமயங்களில் நமக்கு மிகவும் நம்பிக்கை பெற்ற ஒரு விருந்தினரை பற்றியோ அல்லது உறவினரை பற்றியோ கூட குற்றம் சொல்லலாம். குழந்தைகளை நாம் பேச விட வேண்டும்.

அவர்கள் பேச நினைப்பதை தடுக்க கூடாது. அப்படி தடுத்தால், அவர்களின் பிரச்சினை நமக்கு தெரியாமலேயே போய்விடும். நவீன தொழிநுட்பங்களை சரிவர பயன்படுத்தக்கற்றுத்தர வேண்டும். அதிலிருக்கும் ஒரு சில, சிறுவர்களுக்குப் புரியகூடிய வகையிலான ஆபத்துக்கள் குறித்தும் சொல்லித்தர வேண்டும்.

நாம் குழந்தைகளிடம் பழகும் விதத்தில் தான் குழந்தைகள் நம்மிடம் பழகுவார்கள். நாம் அனைத்து விடயங்களிலும் அவர்களிடம் நண்பர்களை போலவே வெளிப்படையாக பேசி சந்தோஷமாக சிரித்து பழகி வந்தால், குழந்தைகள் அவர்களது குழந்தைத்தனத்தில் இருந்து மாற்றமடைய மாட்டார்கள்.

பெற்றோர்களும், அவர்களுடனே இருந்து குழந்தை வளர, வளர அவர்களோடு வளர வேண்டும். அவர்களுக்கு, தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் கொடுத்து, நல்லது, தீயது பற்றியும் அறிந்து கொண்டு சிறப்பாக வாழ நாம் அவர்களுக்கு பக்க பலமாக, உறுதுணையாக, உதவியாக இருக்க வேண்டும். அதுவே சிறந்த குழந்தை வளர்ப்பு முறையாகும், அதுவே பெற்றோரின் கடமையும் ஆகும்.

இவ்வாறான நடைமுறைகளை பின்பற்றும்போது, கொஞ்சிப்பேசும் எமது மழலைகளின் மொழிகளை மனம்விட்டு ரசிக்கலாம், பயமின்றி வளர்க்கலாம்.