வித்தியாவை தெரிந்த உங்களுக்கு இவளை தெரியவில்லையா? அனைவராலும் மறக்கப்பட்ட ஒரு கொடூர கொலை..

Report Print Shalini in கட்டுரை

வவுனியா - விபுலானந்தா கல்லூரியில் கல்விகற்ற 14 வயதுடைய மாணவிதான் ஹரிஸ்ணவி. பலருக்கும் ஹரிஸ்ணவி என்றால் யார்? என்று நினைவில் இருக்காது. சிலருக்கு தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை.

அன்றாடம் பலசெய்திகளை பார்க்கின்றோம், கேட்கின்றோம். அவை அனைத்தும் எம்மனதில் நினைவில் நிற்பதில்லை. அவ்வாறு அனைவர் மனதிலும் இருந்து மறைந்து போன ஒருசம்பவம் தான் ஹரிஸ்ணவியின் கொலை.

வவுனியா, உக்குளாங்குளம், 4ஆம் ஒழுங்கையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 16ஆம் திகதி ஹரிஸ்ணவி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

தாயார் வேலைக்கும், சகோதரர்கள் பாடசாலைக்கும் சென்றிருந்த நிலையில் தனிமையில் இருந்தார் ஹரிஸ்ணவி.

வேலைமுடிந்து வீட்டுக்கு வந்தபோது, தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த தனது மகளைப் பார்த்ததும் தவித்துப் போனாள் ஹரிஸ்ணவியின் தாயார்.

முதலில் மாணவி தற்கொலை செய்ததாக கூறப்பட்ட நிலையிலும், அதன் பின்னர் நடந்த விசாரணைகளில் ஒரு அதிர்ச்சி தகவல்வெளிவந்தது.

ஆம் குறித்த மாணவி பாலியல் வன்புணர்வின் பின் கழுத்து நெரித்து கொலைசெய்யப்பட்டு, அதன் பின் தூக்கில் போடப்பட்டுள்ளதாக திடீர்மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

மாணவி கொலை செய்யப்பட்ட பின்னர் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் போராட்டங்களையும், அறிக்கைகளையும் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்கள்.

காலப்போக்கில் இந்தசம்பவம் அவர்கள் மனதில்இருந்து மறைந்து போனதுதான் ஆச்சரியம்.

இந்தசம்பவத்தில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் ஹரிஸ்ணவியின் பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவரை கைதுசெய்து விசாரணைகளை ஆரம்பித்தார்கள்.

சுமார் 21 மாதங்களாக இந்தவழக்கு விசாரணைகள் எவ்வித முன்னேற்றங்களும் இல்லாமல் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. சரி இனி விடயத்திற்கு வருவோம்.

ஹரிஸ்ணவிக்கு நடந்தகொடுமையைப் போன்றுதான் யாழில் ஒருகொலை நடைபெற்றது. இது ஹரிஸ்ணவியின் கொலை நடைபெறுவதற்கு சுமார் 8 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றிருந்தது.

ஆம், கடந்த2015 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு கொடூர கொலை யாழில்நடைபெற்றது. அது புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை.

வித்தியாவை அறிந்திடாதவர்கள் யாரும் இல்லை. வித்தியாவுக்கு ஆரம்பம் முதல் இறுதி தீர்ப்பு கிடைக்கும் வரை என்ன நடந்தது? தீர்ப்பு என்ன வழங்கப்பட்டது? கைதாகியவர்கள் யார்? என அனைத்து தகவல்களும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆனால் ஹரிஸ்ணவியின் கொலை தொடர்பான விசாரணைகள் தற்போது எந்தஅளவுக்கு இருக்கின்றது என்பதைப்பற்றி கேட்டால் எம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

வித்தியாவுக்கு விரைவாக தீர்ப்பு கிடைத்ததிலும், விசாரணைகள் துரிதமாக நடைபெற்றதிலும் எம் அனைவருக்கும் மகிழ்ச்சிதான். ஆனாலும் இந்த சிறுமியை அனைவரும் மறந்துவிட்டார்கள் என்பதை நினைத்தால் சற்று கவலையாகத்தான் இருக்கின்றது.

எந்தவிடயமாக இருந்தாலும், ஆரம்பத்தில் உற்சாகமாகவும், சிறப்பாகவும் செயற்படும் நாம் காலப்போக்கில் அந்தவிடயத்தை மறந்துபோகின்றோம். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் ஆயுள்வரை அந்த துன்பத்திலிருந்து மீண்டுவர முடியாது.

தற்போது ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணைகள் எந்த அளவிற்கு இருக்கின்றது என்பது பற்றி நாம் சற்று ஆராய்ந்து பார்த்தோம். அதுதான் எம்மை இன்னும் கவலைக்கும் இந்தகட்டுரையை எழுதுவதற்கும் தூண்டியது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் சந்தேகத்தின் பேரில்கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு எதிராக எவ்விதசாட்சியங்களும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகளை நடத்தும் பொலிஸ் அதிகாரிகள் இதுகுறித்து தெரிவிக்கையில், “கைதுசெய்யப்பட்ட நபர்தான் குற்றவாளி என்பது 99 வீதம்உண்மை. ஆனால்அவருக்கு எதிராக தகுந்த ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை” என தெரிவித்துள்ளார்கள்.

எனினும் குறித்த வழக்கு விசாரணைகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பிப்பதற்கு இன்னும் 4 மாதங்கள் தேவைப்படும் எனவும் மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிசெல்லும் சிறுமி வீட்டில் தனிமையில் இருப்பதை அறிந்தகொடூரன், அந்தச்சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலைசெய்துவிட்டு, அவரே தற்கொலை செய்துவிட்டதாக நம்பவைப்பதற்கு அவரை தூக்கில் தொங்கவிட்டுச் செல்லும் அளவுக்கு ஒருசம்பவம் நடைபெற்றிருக்கின்றது என்றால் வீட்டில் பெண்பிள்ளைகள் தனிமையில் இருப்பதற்கு கூட இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையா? என்று சிந்திக்க வைக்கின்றது.

ஒன்றரை வருடங்களுக்கு முன் கொலை செய்யப்பட்ட 14 வயது சிறுமியின் இறப்பு உங்கள் யாருடைய மனதிலும் நினைவுக்குவரவில்லையா?

இலங்கையின் நீதி அமைச்சராக இருப்பவர் ஒரு பெண். அவருக்கு தெரியாதா ஒரு பெண்ணின் வலி வேதனைகள், ஒரு தாயின் ஏக்கம்? தெரிந்தும் தெரியாதது போல் இருக்கின்றார்களா?

குழந்தைகள் என்றால் எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மிகவும் பிடிக்கும் என்பது ஊடகங்கள் வாயிலாகமக்கள் அறிந்த விடயம்.

ஆனால் அவரும் கூட ஹரிஸ்ணவி விடயத்தில் பக்கச்சார்பாக நடந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு வேளை அவருக்கு இந்த விடயம் தெரிந்திருக்க வாய்ப்பிருந்து இருக்காது.

ஏன் என்றால் ஹரிஸ்ணவியின் கொலை ஏதோ காரணங்களுக்காக மூடி மறைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஒருபுறம் எழுப்பச்செய்கின்றது.

வித்தியாவுக்குகிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்காதா? வித்தியாவின் தாயாருக்கு கிடைத்த மன அமைதி ஹரிஸ்ணவியின் தாயாருக்கு கிடைக்காதா?

இந்த மண்ணில் இன்னும் எத்தனை பிஞ்சுகளைத்தான் பலி கொடுக்கப்போகின்றீர்கள்? ஹரிஸ்ணவிக்கு நீதிகிடைக்க வேண்டும். அனைவர் மனதிலும் இருந்து மறைந்து போன ஒரு விடயத்தை இந்த கட்டுரையின்மூலம் நினைவுபடுத்தப்பட்டுள்ளது.

இனி நடக்க வேண்டியது சரியான முறையில் நடத்தப்பட வேண்டும். வித்தியாவுக்கு கிடைத்த நீதி, அதை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சித்த அனைவரும் ஹரிஸ்ணவி விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

இதை வாசிக்கும் உங்கள் மனதில் எழும் சிந்தனைகளையும், முயற்சிகளையும் தயவு செய்து காலப்போக்கில் மறந்துவிடாதீர்கள். போதும் ஹரிஸ்ணவியின் கொலைக்கு இனியும் நீதி தள்ளிப்போகக் கூடாது என்பதை மனதிலும் கொள்ளுவோம்.