குருவியின் தலையில் பனங்காயை வைக்கும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

Report Print V.T.Sahadevarajah in கட்டுரை

இலங்கை பரீட்சைத்திணைக்களம் நடத்திவரும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது ஒரு குழந்தையின் வாழ்வில் வரும் முதலாவது பொதுப்பரீட்சையாகும். இது வரவர சர்ச்சைக்குரிய ஒரு பரீட்சையாக மாறிவருகின்றது.

அதற்கு நியாயமான பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன. இப்பரீட்சை தரம் 5இல் அவசியமற்ற ஒன்று என பெரும்பாலான கல்வியியலாளர்களும் உளவியல் ஆய்வாளர்களும் ஏன் இன்றைய கல்வியமைச்சர் கூட சொல்கிறார்.

அதுமட்டும் அல்ல முகநூல் பதிவுகளில் 95வீதமான பதிவுகளும் இதனையே வேண்டி நிற்கின்றன.

தற்போது நம்நாட்டில் புலமைப் பரிசில் பரீட்சை வேறு திசை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை உணர்ந்த சிவில் அமைப்புக்கள், சமூக சேவை அமைப்புக்கள், உளவியல் மையங்கள் மற்றும் அரசியல் தரப்புக்கள் என அத்தனை பேரும் இப் பரீட்சையானது 5ஆம் தர மாணவர்களுக்கு தேவையில்லாத ஒன்று. இதனை 8ஆம் தரத்தில் ஏற்படுத்த வேண்டும் என நாடு பூராகவும் விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுள் 45 சதவீதமானோர் பாரிய மனஅழுத்தங்களுக்கு உள்ளாகிவருவதாக வைத்தியர்களும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் தொடர்ச்சியாகக் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.

இவ்வாறு 95வீதமானோர்களின் கருத்து இவ்வாறிருக்கும்போது இன்னும் இவ்விபரீத பலப்பரீட்சை தொடர்வது ஏன் என்ற வினா எம்மத்தியில் எழுகின்றது. இதனையடுத்து பரீட்சையை 2 கட்டங்களாக நடாத்துவது குறித்து கல்வியமைச்சு ஆராயந்துவருவதாகத் தெரிகின்றது.

அதாவது, உபகார நிதியைப்பெறும் முகமாக ஒரு பரீட்சையும் பிரபல பாடசாலைகளில் அனுமதி பெறுவதற்காக இன்னுமொரு பரீட்சையும் நடத்துவது தொடர்பாக ஆராயப்பட்டுவருகின்றது.

அல்லது, இப்பரீட்சையை தரம் 9இற்கு மாற்றுவது தொடர்பாக கவனம் செலுத்தப்படுகின்றது.

இதேவேளை, வழமைபோல இம்முறையும் முதல் 10 சாதனையாளர்களுள் எந்த தமிழ்பேசும் மாணவரும் தெரிவாகவில்லை என்பது கவலைக்குரியது.

இம்முறை இப்பரீட்சைக்குத் தோற்றிய 356728 மாணவர்களுள் 243236 மாணவர்கள் 70புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஸ்பகுமார தெரிவித்துள்ளார். அதாவது 69.4 சதவீதமான மாணவர்கள் சித்தியடைந்தள்ளனர்.

மாவட்டரீதியாக வெளியிடப்பட்ட வெட்டுப்புள்ளி அடிப்படையில் 33163 மாணவர்கள் உபகாரநிதியைப் பெற்றுக் கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளனபர்.

இதில் 14ஆயிரம் மாணவர்கள் வருமானம்கூடிய குடும்பங்களைச்சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு உபகாரநிதி வழங்கப்படமாட்டாது.

அதிகூடிய மாணவர்களை சித்தியடையவைத்த மாகாணத்தில் முதலாமிடத்தை தென்மாகாணமும் இரண்டாமிடத்தை வடமேல் மாகாணமும் மூன்றாமிடத்தை சபரகமுவ மாகாணமும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கல்வி வரலாற்றில் இலவசக் கல்வியின் தந்தையாகப் போற்றப்படும் கலாநிதி C.W.W. கன்னங்கரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இலவசக் கல்வியின் தொடரில் வசதி குறைந்த மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குவதற்கும், திறமையான இலங்கையில் உள்ள பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் அனுமதிப்பதற்குமாகவே 1952ஆம் ஆண்டு 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை முறை அறிமுகம் செய்யபட்டது.

தற்போது இலங்கையில் 5ஆம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகி வீடுகள், பாடசாலைகள், வலையக் கல்வி அலுவலகங்கள் என அத்தனை இடங்களிலும் பரீட்சை முடிவுகள் சம்பந்தமான பேச்சுக்களே அடிபட்டுக் கொண்டிருக்கின்றது.

பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் ஊடகங்களாலும், சமூக வலையத்தளங்கள் வாயிலாகவும் மற்றும் பாடசாலைகளினாலும் போற்றிப் புகழப்படுகின்றார்கள் அதே சமயம் சித்தியடையத் தவறிய மாணவர்கள் சில பெற்றோர்களால் அடித்துத் துவம்சம் செய்யப்படுகின்றார்கள்.

இப் பரீட்சையில் சித்தியடையும் வறிய மாணவர்களுக்கு உதவித் தொகையாக ஆண்டொன்றுக்கு 5000 ரூபா என சுமார் 15000 மாணவர்களுக்கு இவ் உதவித் தொகை வழங்கப்படுகின்றது. அத்தோடு கல்வியமைச்சினால் நிர்ணயிக்கப்படும் பாடசாலைக்குரிய வெட்டுப் புள்ளிகளுக்கு ஏற்ப 15 ஆயிரம் மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் 6ஆம் ஆண்டுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

புலமைப் பரிசில் பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் இப் பரீட்சையின் நோக்கம் ஆரோக்கியமானதாகவிருந்தது .ஆனால் இன்று அந்த நோக்கம் திசை மாறிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை.

ஒருவனுடைய வாழ்நாளில் அவர் முகம்கொடுக்கும் முதலாவது பொதுப்பரீட்சை தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையாகும். அவனுடைய வயதைப்பொறுத்தவரையில் இப்பரீட்சை குருவியின் தலையில் பனங்காயை வைப்பதற்கு ஒப்பானதாகும். அதாவது பாரிய சுமை.

இருப்பினும் அப்படிப்பட்ட பரீட்சையிலும் அவன் சித்தியடைகின்றான்தானே என பலர் கூறுவதுமுண்டு. எனினும் கல்வியியலாளர் பியாஜெயின் கருத்தில் இப்பரீட்சை முரண்பட்டு நிற்கின்றது.

பரீட்சையை எழுதி விட்டு மாணவன் அவனது நண்பர்களோடு விளையாடச் சென்று விடுகின்றான் அவனுக்கு அந்தப் பரீட்சையின் முக்கியத்துவம் தெரியாது.

ஆனால் அவர்களுடைய இந்த எண்ணம் மற்றாக மாறி விட்டது. அதாவது பயம் அறியாத அவர்கள் மனதில் பயத்தை திணித்து விட்டது இந்த புலைப்பரிசில்.

பரீட்சையில் சித்தியடைவோமோ இல்லையோ என்பதையும் தாண்டி, பெறுபேறுகள் வந்தால் வீட்டில் என்ன நடக்குமோ என்ற பயம் தான் இவர்களை ஆட்டிப்படைக்கின்றது.

இதே பயம் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்குமே அதிகம்மதிக மிருக்கும். இது அவர்களுக்குரிய பரீட்சைதானே அவர்கள் தங்களை பெருமைப்படுத்திக் கொள்ளும் பரீட்சைதானே அதனால் தான் பிள்ளைகளை ஓய்வெடுத்து விளையாட விடாமல்

பெற்றோர்கள் டியூசன் வகுப்புக்களுக்கு துரத்தி துரத்தி அனுப்பி காசைக் கரியாக்குகின்றார்கள்.

அதனால்தான் ஆசிரியர்களும் சந்திக்கு சந்தி தெருவுக்குத் தெரு என தனியார் வகுப்பு நிலையங்களை அமைத்து மாணவர்களை இயந்திரங்களாக மாற்றுகின்றார்கள்.

இரவில் வேளைக்கு தூங்கவேண்டிய பிள்ளையை படி படி என வற்புறுத்தி தொல்லைப்படுத்துகின்றார்கள். சித்திரவதைப்படுத்துகின்றார்கள். உண்மையில் இதுவொரு சிறுவர் துஸ்பிரயோகமே.

பலர் இதனை ஒரு வியாபாரமாக்கி வருகின்றார்கள். கொழும்பிலிருந்து அல்லது யாழ்ப்பாணத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஒரு நாள் கருத்தரங்கு வைப்பார்கள்.

அது பிரபல ரீயுட்டரிகளில் நடப்பதுபோன்று நடக்கும்.பல ஆயிரம்ரூபாய்கள் சேரும்.

4ஆம் 5ஆம் வகுப்புகளில் அதுவரை அவன் படிக்காத விடயத்தையா இப்பிரபலங்கள் சொல்லிவிடப்போகின்றன. அல்லது அந்த 3மணித்தியாலங்களில் அப்படி என்னதான் செய்யமுடியும் என்பதை பெற்றோர்கள் உணர்வதில்லை.

சமூகத்தில் பெற்றோர்களுக்கு இப்பரீட்சை ஒரு பலப்பரீட்சையாக அல்லது கௌரவப்பரீட்சையாக மாறியுள்ளது என்பது மட்டும் உண்மையாகும்.

அன்று நாம் இப்பரீட்சையில் சித்திபெற்றபோது இதனை பொருட்டாகவே பார்த்ததில்லை. வகுப்பிலுள்ள கெட்டிக்கார மாணவர்கள் மட்டுமே இப்பரீட்சையை எடுப்பதும் வழக்கமாகவிருந்தது. ஆனால் இன்று சகலரும் கட்டாயம் தோற்றவேண்டும் என்பது நியதி.

ஒரு மாணவன் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்திபெற்றுவிட்டால் சிலர் வீடுதேடிச்சென்று வாழ்த்துவார்கள். பலர் கண்ட இடத்தில் வாழ்த்துவார்கள்.

உண்மையில் 70புள்ளிகளுக்கு மேல் பெற்றால் அவன் சித்திபெற்றதாக கருதப்படும். ஆனால், 2 வெட்டுப்புள்ளிக்குமேல் பெறுவதைப்பலர் சித்தியாக கருதுவதுண்டு.

சித்தியடையாவிட்டால் வேண்டுமென்றே வீதியில் மறித்து வைத்து மகன் சித்தியடையவில்லை போல என்று கூறுவோர் பலர். அவர்களுக்கு இப்படிக்கேட்காவிட்டால் தலைவெடித்துவிடும். இதையெல்லாம் தாங்கமுடியாத பெற்றோர் சில நாட்களுக்கு வெளியில் தலை காட்டமாட்டார்கள்.

பரீட்சையின் முடிவுகள் வெளியாகிய பின்னர் சில பாடசாலையினர் சித்தியடைந்த மாணவர்களின் புகைப்படங்களை பேனரில் அச்சிட்டு அதனை பாடசாலையின் நுழைவாயிலில் கட்டித் தொங்க விட்டுக் காட்சிப்படுத்துகின்றார்கள்.

அது அந்த வருடம் முழுக்க முழுக்க அங்கேயே தொங்கிக் கிடக்கும். மேலும் சித்தியடைந்த மாணவர்களை பாடசாலைக் கூட்டங்களில் மாலை மரியாதையென கௌரவித்து போற்றிப் புகழ்வர்.

பல அமைப்புகள் தாம் கல்விச்சேவை சமூகசேவை செய்கின்றோம் எனக்கூறி சித்தியடைந்த மாணவர்களை பாராட்டுவார்கள். ஒரு வகையில் அவை ஊக்கப்படுத்துவதாக அமைந்தாலும் ஏனைய பிஞ்சு உள்ளங்களுக்கு அது பாரிய மனஉழைச்சலை ஏற்படுத்திவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.

பாடசாலையின் நுழைவாயிலில் உயர தொங்கவிடப்பட்டுள்ள பேனர்களை அண்ணாந்து பார்த்து பார்த்து அந்தப் பிஞ்சி மனதுகள் ஏங்காதா...??? பரீட்சையில் சித்தியடைந்து தன்னாலும் இப்படி உயரப் பறக்க முடியவில்லையே என ஏங்காதா...??? அவர்கள் மன ரீதியாக துன்பப்படமாட்டார்களா...???

இப்படிக் கட்டித் தொங்க விடும் செயற்பாடுகளால் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் மாத்திரமல்ல சித்தியடைந்த மாணவர்கள் கூட உளவியல் ரீதியாக பாதிப்புக்களையே அடைகின்றார்கள்.

ஐந்தாம் தர வகுப்புகளை கொண்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்களுக்கான அவசர அறிவித்தல் ஏனும் தலைப்பில் கடந்த வருடம் அவசரமாக கல்வியமைச்சு சுற்றுநிருபமொன்றை வெளியிட்டிருந்தது.

அதாவது புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுடைய படங்களை ' பெனர்' மூலம் காட்சிபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு ஐந்தாம் தர வகுப்புகளை கொண்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளின் புகைப்படங்களை பெனர்கள் மூலம் காட்சிப்படுத்துவதனால் சித்திபெறத் தவறிய பிள்ளைகளின் மன நிலை பாதிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் யிருந்தது.

எனினும், பல பாடசாலைகள் சுற்றுநிருபங்களை மதியாமல் இப்போதும் பெனர்களை தொங்கவிட்டுள்ளது. இன்றும் சில பாடசாலைகள் பாடசாலை வளவில் இல்லாமல் முன்வளவினுள் பெனரைத் தொங்கவிட்டுள்ளது. பாடசாலையினுள் தொங்கவிட்டதற்கே இன்னும் எவ்வித நடவடிக்கையையும் கல்வித்திணைக்களம் எடுக்கவில்லையென்பது இங்கு உண்டு.

ஒரு மாணவன் சித்தியடைந்துவிட்டால் அவனது பெற்றோருக்கு அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏகப்பட்ட செலவுகள் காத்திருக்கும்.

பெறுபேறு வந்த அன்றே பெரிய பெரிய சாக்லட் பக்கட்டுகளுடன் கற்பித்த ஆசிரியர்கள் அதிபர்கள் அனைவரிடமும் செல்வார்கள்.

பின்னர் குறிப்பிட்ட பாடசாலையில் இப்புலமையாளர்களைப்பாராட்டுதல் எனும் தலைப்பில் விழாக்கள் நடைபெறும். சித்திபெற்றமைக்கு ஏனையோர் நடாத்துவதுதான் பாராட்டு.

இங்கு வேடிக்கை என்னவென்றால் சித்திபெற்ற மாணவர்களே கூடுதல் நிதியை செலுத்தி இவ்விழாவை நடாத்தக் கேட்கப்படுவார்கள்.

விழாவில் ஆசிரியருக்கு விலையுயர்ந்த பரிசுகள் (சிலவேளைகளில் தங்கமோதிரம் தங்கக்காப்புகள் கேட்ட சந்தர்ப்பங்களும் உண்டு) அதிபர்களுக்கு பரிசுகள் பின்பு அதிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் விருந்துபசாரம் . இதற்காக பல ஆயிரங்களை பெற்றோர்கள் செலுத்தவேண்டும். ஒருவகையில் இது தண்டனைதான்.

இதற்கு ஈடுகொடுக்க சித்திபெற்ற அனைத்து மாணவர்களின் பெற“றோருக்கு முடியுமா? என்பது ஒருபுறம். மறுபுறம் சித்திபெற்றது அவன் செய்த குற்றமா? சித்திபெற்றதற்கு இப்பணச்செலவு ஒருவித தண்டனைபோல் இல்லையா?

அவர்களுக்குள் பெருமைத்தனம் குடி கொள்ள ஆரம்பிக்கின்றது. தன்னுடைய புகைப்படம் உயர பறக்கிறது என பெருமை கொள்கிறார்கள்.

கல்வியில் இன்னும் பயணிக்க வேண்டிய துாரத்தை மறந்து தன்னால் பெரிதாக சாதனை புரியப்பட்டதாக எண்னுகிறார்கள்.இதனால் ஏனைய விடயங்களில் கவனம் செலுத்த மறந்து ஈற்றில் நஷ்டமடைகின்றார்கள்.

புலமைப்பரிசில் சித்திபெற்றவர்களில் ஆக 20வீதமானவர்களே பல்கலைக்கழகம் செல்வதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பலர் க.பொ.த. சா.த. உ.த.பரீட்சைகளில்கூட பிரகாசிப்பதில்லை என்பதும் தெரியவந்திருக்கின்றது.

பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு பாடசாலைகளில்தான் இந்த மன உளைச்சல் என்றால் வீடுகளில் சொல்ல முடியாத அளவுக்கு மன உளைச்சல்கள் கொட்டிக்கிடக்கிறது.

பக்கத்து வீட்டுப் பையன் பரீட்சையில் சித்தியடைந்து விட்டான் உன்னால் ஏன் சித்தியடைய முடியவில்லை என அவனை தினமும் பெற்றோர் நச்சரிக்கின்றார்கள்,பிற மாணவர்களோடு ஒப்பிட்டு குறை பேசுகின்றார்கள், எத்தனை டியூசன் வகுப்புக்களுக்கு உன்னை அனுப்பினேன். எவ்வளவோ காசை கொட்டிக் கரைத்தேன் என அவர்களைப் பார்த்து பெற்றோர் புலம்புகின்றார்கள்.

இவை அனைத்தும் அவர்களுக்கு மனரீதியாக பாரிய எதிர்மறை தாக்கத்தை உண்டு பண்னும் என்பதை பெற்றோரும் ஆசிரியர்களும் மறந்து விடக் கூடாது.

அந்த வகையில் இம்முறை பரீட்சை பெறுபேறு வெளிவந்த பின் நடைபெற்ற ஓரிரு சம்பவங்கள் அனைவர் மனதிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

அதாவது சித்தியடையாத மாணவனொருவன் வீட்டில் பெற்றோரின் கொடுரமான தொல்லையைத்தாங்க முடியாமல் கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையத் தவறிய மாணவன் ஒருவன் கடுமையான முறையில் அவனது தாயாரால் தாக்கப்பட்டுள்ளனான். யாழ்.நல்லுார்ப் பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

தங்களது பாடசாலையில் இத்தனை மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள் என பாடசாலைகள் பெருமைப்பட்டுக் கொள்ளவும், தான் கற்பித்ததனால் இத்தனை மாணவர்கள் சித்தியடைந்திருக்கின்றார்கள் என ஆசிரியர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளவும், தனது பிள்ளை பரீட்சையில் சித்தியடைந்து விட்டான் என பெற்றோர்களும் பெருமைப்பட்டுக் கொள்ளவும் இப்பரீட்சை நடைபெறவில்லை.

அறிந்தும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் செய்யும் செயல்கள் சித்தியடைந்த மாணவர்களையும் சித்தியடையாத மாணவர்களையும் மனரீதியாக வெகுவாகப் பாதிப்படையச் செய்யும் என்பதை மறந்து விடக்கூடாது.

ஒரு பாடசாலை பரீட்சையில் சாதித்து விட்டால் அந்த ஆசிரியர் அதிபர் தொடக்கம் கல்விப்பணிப்பாளர்கள் வரை உரிமைகோரி பெருமைப்பட்டுக்கொள்வார்கள்.

தவறினால் குறிப்பிட்ட பாடசாலை அதிபரினதும் ஆசிரியர்களதும் தலை உருளும். அந்த அளவிற்கு பலரது ஏச்சும் பேச்சும் இருக்கும்.

ஏன் நேரடியாகத் தொடர்பில்லாத கோட்டக்ல்விப்பணிப்பாளருக்கும் வலயக்கல்விப் பணிப்பாளருக்கும் ஏச்சும் பேச்சும். ஆகவே பெற்றோர்களும், ஆசிரியர்களும் இப்பரீட்சை தொடர்பாக மாணவ-மாணவிகளுக்கு உளவியல் ரீதியாக எதிர்மறையான தாக்கங்களை உண்டு பண்னும் செயற்பாடுகளில் ஈடுபடாமல் இந்தப் பரீட்சையில் சித்தியடைந்தால் பெருமைப்பட்டுக் கொள்ளவோ சித்தியடையாவிட்டால் சிறுமைப் பட்டுக் கொள்ளவோ எதுவுமில்லை என அவர்களுக்குப் புரிய வையுங்கள்.

அறிவுரை கூறுங்கள், மாணவர்களை உற்சாகப்படுத்துங்கள் கல்வியில் கடந்து செல்ல வேண்டிய துாரம் இன்னும் நிறையவே இருக்கின்றது என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். 5ஆம் தர புலமைப் பரீட்சை மாத்திரம் வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை என்பதை விளங்கப்படுத்துங்கள்.

இதை மேலும் தெளிவுபடுத்த கடந்த கால சம்பவம் ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

1999இல் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கல்வி அலுவலர்கள் அதிபர்கள் ஆகியோருக்கான உத்தியோகபூர்வ கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்போதைய கல்விப்பணிப்பாளர் ஜனாப் இஸ்ஸதீன் தலைமையில் சென்ற குழுவில் நானும் ஒரு கல்விப்பணிப்பாளராகப் பங்குபற்றியிருந்தேன்.

அதன் ஒரு அங்கமாக நீர்கொழும்பில் மேரி ஸ்டெல்லா கல்லூரி பிரபல கல்லூரிக்கு விஜயம் செய்து அதிபருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டோம்.

நாங்கள் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு அவர் ஒரு விடயத்தைச் சொன்னார்.

உங்கள் பிரதேசத்தைச் சேர்ந்த பணக்கார முதலாளி ஒருவரின் பிள்ளை இங்கே ஐந்தாம் வகுப்பில் கற்றுக் கொண்டிருந்தார். புலமைப் பரிசில் பரீட்சைக்கு எமது கல்லூரி தோற்றுவதில்லை.

தனது பிள்ளையை பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்க முடியாதா என்று தந்தை என்னிடம் வந்து கேட்டார். நான் அவருக்குப் பின்வருமாறு பதிலளித்தேன். “புலமைப் பரிசில் பரீட்சை இரண்டு நோக்கங்களுக்காக நடத்தப்படுகின்றது.

பொருளாதார வசதி குறைந்த மாணவர்களுக்கு அரசாங்கம் நிதியுதவி அளித்தல். வசதி குறைந்த பாடசாலை மாணவர்களுக்கு வசதி கூடிய பாடசாலைகளில் அனுமதி பெற்றுக் கொடுத்தல்.

எமது கல்லூரி மாணவர்கள் எவரும் அரசாங்க நிதி உதவி பெறும் அளவுக்கு ஏழைப் பிள்ளைகள் அல்ல. இன்னுமொரு வசதியான பாடசாலை தேடும் அளவுக்கு எமது கல்லூரி வசதி குறைந்ததும் அல்ல.

எனவே, நாம் மேற்படி பரீட்சைக்குத் தோற்றுவதில்லை என்று கல்முனையைச் சேர்ந்த பிள்ளையின் தந்தைக்குச் சொன்னதாக அக்கல்லூரியின் அதிபர் எமக்கு தெரிவித்தார்.

அவருடைய விளக்கம் உண்மையில் சரிதானே. இந்த விளக்கத்தில் உள்ள புரிதல்களை நாம் விளங்கிக் கொள்ளத் தவறுகின்றோம். ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையை அரசாங்கம் இரத்துச் செய்ய வேண்டும் என்பதே பலரது தனிப்பட்ட கருத்தாகும். அதுவே கல்வி உலகின் எதிர்பார்ப்பாகும்.